இலக்கியச்சோலை

மனம் செயலாகும்போது உருக்கொள்ளும் எதுவும் ஏதோ ஒரு வகையில் காலத்தில் நிற்கும்!…. தாத்தாவின் வீடு ( நாவல் ) ….. முன்னுரை.

நடேசன் எழுதிய தாத்தாவின் வீடு ( நாவல் )

கருணாகரனின் முன்னுரை!

அனுபவங்களையும் அறிந்த தகவல்களையும் வைத்து எழுதுவது ஒரு வகை. இது எளிதானது. அனுபவங்களை எவ்வளவுதான் சிறப்பாக எழுதினாலும் அவை வெறும் பதிவுகளாகச் சுருங்கி விடக்கூடிய வாய்ப்புகளே அதிகமுண்டு. அனுபவங்களையும் நுண்ணிய அவதானிப்புகளையும் சரியாகக் கலந்து புதிய சிந்தனையோடு எழுதும்போது சிறந்த படைப்புகள் உருவாகின்றன. இதற்கொரு கலைப் பயிற்சி வேண்டும்.

அப்படித்தான் தகவல்களைத் திரட்டி அதையே மையப்படுத்தி எழுதினால் அது தகவற் திரட்டாகி விடக் கூடிய நிலையே அதிகம். இந்த மாதிரி எழுத்துகள் தினம் தினம் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வந்து குவிகின்ற வேகத்திலேயே அவை மறந்தும் மறைந்தும் போகின்றன. இவற்றிற்கான பெறுமதி அநேகமாக ஊடகச் சேதிகள் அல்லது செவி வழித் தகவல்களுக்கு நிகரானவை.

மாறாக அனுபவங்களோடு நுண்ணிய அவதானிப்புகளைச் சரியாகக் கலந்து புதிய சிந்தனையோடு எழுதும்போது அது வேறொன்றாக – வித்தியாசமான ஒன்றாக வெளிப்படுத்துகின்றது. இது இன்னொரு வகை. இங்கேதான் எழுத்தாளரின் பார்வையை – தரிசனத்தை – நாம் உணர முடியும். அந்தப் பார்வையில்தான் அவருடைய அரசியலையும் அல்லது அவர் முன்வைக்கும் அரசியலையும் பண்பாட்டுப் புரிதலையும் வரலாற்று நோக்கையும் சமூகத்தைக் காணும் விதத்தையும் புரிந்து கொள்ள முடியும். இதற்கே பெறுமதி அதிகம்.

நடேசனின் இந்த நாவல், அனுபவங்களோடு நுண்ணிய அவதானிப்புகளைச் சரியாகக் கலந்து புதிய சிந்தனையோடு எழுதப்பட்டுள்ளது. இந்த வகையிலான ஐந்து நாவல்களை நடேசன் ஏற்கனவே எழுதியுள்ளார். முதல்நாவல் ‘வண்ணாத்திக்குளம்’. இது நடேசன் வேலைசெய்த வடமத்திய இலங்கையின் மதவாச்சிப் பிரதேசத்தைக் களமாகக் கொண்டது. அங்கே விலங்கு வைத்தியராகச் சென்று வேலை செய்த அனுபவத்தையும் அங்குள்ள சமூக அரசியல் நிலவரத்தையும் மனித உறவுகளையும் சாராம்சப்படுத்தியதாக இருந்தது.

அடுத்து எழுதிய‘உனையே மயல்கொண்டு’, ‘அசோகனின் வைத்தியசாலை’ ஆகிய இரண்டு நாவல்களும் நடேசன் புலம்பெயர்ந்து வாழும் அவுஸ்திரேலியவைப் பின்னணியாகக் கொண்டவை. இவற்றிலும் தன்னுடைய மிருக வைத்தியத்துறை அனுபவங்களையும் அவதானிப்புகளையும் இணைத்திருக்கிறார்.

நடேசன் எழுதிய. நான்காவது நாவல் ‘கானல் தேசம்’. இதுவே நடேசனின் முழுமையான புனைவின் வெளிப்பாடு எனலாம். நடேசனுடைய அனுபவப் பிராந்தியத்துக்கு அப்பாலான களம் இதில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது நாவலான ‘பண்ணையில் ஒரு மிருகம்’ ஈழப்போராட்டப் பணியின் நிமித்தமாக நடேசன் தமிழ்நாட்டில் வாழ்ந்த அனுபவத்தையும் அந்தக் காலப்பகுதியையும் பின்னணியாகக் கொண்டது.

இது ஆறாவது நாவல். இதிலே, தான் பிறந்து வளர்ந்த எழுவைதீவையும் தன்னுடைய இளமைக்கால நிகழ்ச்சிகளையும் முன்வைக்கிறார் நடேசன்.

யாழ்ப்பாணத் தீவுகளில் மிகச் சிறியது எழுவைதீவு. இரண்டு மணி நேரத்தில் முழுத்தீவையுமே சுற்றி நடந்து வந்து விடலாம். அங்கே உள்ள மக்களை விட பல மடங்கு அதிகமாக இருப்பது பனை மரங்கள். (இப்பொழுது இந்தப் பனை மரங்களை அழிக்கும் அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றன உடைமரங்கள். எழுவைதீவை விட்டுப் பலரும் புலம்பெயர்ந்து சென்று விட்டதால் அவர்களுடைய காணிகளில் உடைமரம் காடாக வளர்ந்து பனைகளைப் பட்டுப்போக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. பட்டுப்போன பனைமரங்களை எழுவைதீவு எங்கும் காணலாம்). அதைப் பனைத்தீவு என்றே சொல்ல வேண்டும். பனையும் சுற்றி வரக் கடலும் தீவுக்குப் பேரழகைக் கொடுக்கின்றன. இந்த அழகிய தீவில் இப்பொழுது (2023 இல்) 195 குடும்பங்கள் வரையில்தான் வசிக்கின்றன. ஆனால் இந்த நாவல் நிகழும் காலம் கடந்த நூற்றாண்டின் 1960 – 70 காலப்பகுதி. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முந்திய காலம். அப்பொழுது இன்னும் குறைவான குடும்பங்களே அங்கிருந்திருக்கக் கூடும். இந்தச் சிறிய தீவில் வாழ்கின்ற மனிதர்கள், அவர்களுடைய நடத்தைக் கோலங்கள், உறவு நிலை, அங்கே நிகழ்கின்ற சம்பவங்கள், வரலாற்று ஓட்டத்தில் நிகழ்த்தப்படுகின்ற நடவடிக்கைகள், அவற்றின் பின்னணி, அந்தக் காலகட்ட அரச நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றை மையப்படுத்தி விரிகிறது நாவல். ஏறக்குறைய அவருடைய சுய சரிதையைப் போல ஆரம்பிக்கும் நாவல், பின்னர் வேறு விதமாக மாறிச் செல்கிறது. இப்படி மாறிச் செல்வதால்தான் அது நாவலாகிறது.

அறுபது ஆண்டுகளுக்கு முந்திய எழுவைதீவைக் காட்சிப்படுத்தினாலும் அதற்கு முன் பின்னரான சூழ்நிலைகளும் நிகழ் அரசியலும் சமூக நிலவரங்களும் நாவலில் உள்ளன. அந்த நாட்களில் இந்தியாவிலிருந்து (தமிழகத்திலிருந்து) இலங்கைக்கு (தமிழ்ப்பகுதிகளுக்கு) பல காரணங்களாலும் காரியமாகவும் வந்து போவோருண்டு. சாதாரண மக்கள் மற்றும் தொழிலாளிகளிலிருந்து அரசியற் தலைவர்கள் வரையில் அப்படி வந்து போவார்கள்.

தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற சமூகப் பிரச்சினை, சாதிப்பிரச்சினை, தொழில்வாய்ப்புப் பிரச்சினை காரணமாக பலர் வந்திருக்கிறார்கள். கம்யூனிஸ்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ப. ஜீவானந்தம் போன்ற அரசியற் தலைவர்கள் கடல்வழியாக வந்து யாழ்ப்பாணத்தில் நின்றிருக்கிறார்கள். இது பின்னர் 1970, 80 களில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பாதுகாப்புத் தேடியும் அரசியற் காரணங்களுக்காகச் செல்வோராகவும் மாறியது. வரலாற்றின் ஓட்டம் எப்பொழுதும் விசித்திரமானதல்லவா! அது கடல் நீரோட்டத்தைப்போல சில வேளை திசை மாறி ஓடும்.

இதில் வருகின்ற ராமலிங்கம் தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக எழுவைதீவுக்கு வருகிறார். எழுவைதீவில் அவர் ஒரு சட்டவிரோதக் குடியேறி. ஆனாலும் அதை மறைத்து மனிதாபிமான அடிப்படையில் அவருக்குப் பாதுகாப்பளிக்கிறார் எழுவைதீவிலுள்ள சிவசாமி வாத்தியார். இதற்கு சிவசாமி வாத்தியாரும் ஊரவர்களும் அதிகாரிகளும் பயன்படுத்துகின்ற உத்தி, ராமலிங்கம், இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து வந்தவர் என்று காட்டுவதாகும்.

இன்னொரு நிகழ்வு தமிழ்நாட்டிலிருந்து கட்டாக்காலி நாய்களைக் கொண்டு வந்து எழுவைதீவில் விட்டு விடுகிறார்கள். ஏன், எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? யாரிடம் இதைப்பற்றி முறையிடுவது? இந்த மக்கள் என்ன பழியைச் செய்தனர், இப்படிப் பழிவாங்குவதற்கு? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலே இல்லை. இதை ஒரு வாசிப்பில் இலங்கைக் கடற்பிராந்தியத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகமாக உள்ளது என்ற இன்றைய ஆக்கிரமிப்பை அல்லது தலையீட்டை, இங்கே குறியீடாக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள முடியும். அதற்கப்பாலான சேதியும் உண்டு. இந்தியாவிலிருந்து கொண்டு வந்து விடப்படும் நாய்கள் எழுவைதீவைக்குழப்புகின்றன, கலவரப்படுத்துகின்றன. இதைத் தடுப்பதற்காக இலங்கைக் கடற்படையைக் கோருகின்றனர் மக்களில் ஒரு சாரார். கடற்படை வந்து அந்தச் சிறிய தீவில் குடியேறுகிறது. இதை இன்னொரு தரப்பினர் எதிர்க்கிறார்கள்.

ஆதரவும் எதிர்ப்பும் என்ற இரு நிலைப்பட்ட நிலைப்பாடு – அபிப்பிராயம் எப்போதும் எங்கும் இருப்பதுண்டு.

சமூகத்தில் எப்பொழுதும் பல விதமான நிலைப்பாடுகள் இருக்கும். ஏன் தமிழர் அரசியலில் இவ்விதமான ஆதரவு – எதிர் என்ற இரு நிலைப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்தும் உள்ளதே. அதைப் பிரதிபலிப்பதாக இந்தச் சம்பவங்கள் இங்கே நிகழ்த்தப்படுகின்றன.

ஒரு நாவலுக்கு முக்கியமானது அதில் நிகழ்த்தப்படும் சம்பவங்களும் (நிகழ்வுகளும்) அவற்றோடு தொடர்புறும் மனிதர்களும் அவர்களின் காலமும் சூழலும் சூழலில் உள்ளவையும் இவற்றை நிர்வகிக்கும் அல்லது இவற்றில் ஊடுருவி நிற்கும் அதிகார அடுக்குகளுமாகும். இதற்குள் ஊடாட்டமாக நிகழ்த்தப்படும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் நாவலைச் செழுமையாக்குகின்றன. இவற்றை நாடகமாக நிகழ்த்திக் காட்டுவதன் வழியே உணர வைக்கும் தரிசனமே நாவலின் வெற்றியாகிறது.

அவுஸ்திரேலியாவிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான எழுவைதீவுக்கு மனைவியுடன் வருகின்றான் நட்சத்திரன். எழுவைதீவில் ஓரிரவு தங்கும் நட்சத்திரனுடைய கனவும் நினைவுமாக விரிகின்றது நாவல். இந்த நினைவும் கனவும் தொடர்ந்து ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகின்றது. சிறுவனின் மனதில் பதிகின்ற, பாதிப்பை ஏற்படுத்துகின்ற சம்பவங்கள், மனிதர்கள், அவர்களுடைய குணவியல்கள் குறித்தெல்லாம் பேசுகிறது. இது முக்கியமானது. ஒவ்வொரு மனிதருடைய செயல்களும் ஒவ்வொரு நிகழ்வும் எப்படியான தாக்கத்தை சிறுவர்களின் மனதில் உண்டாக்குகிறது? குடும்பங்களில் நிலவுகின்ற வன்முறை அவர்களை எப்படிப் பாதிக்கிறது? சிறுவர்களைக் குறித்து பெரியோர்களிடம் காணப்படுகின்ற அபிப்பிராயம் என்ன? அவர்கள் எப்படிச் சிறுவர்களுடன் – பிள்ளைகளுடன் நடந்து கொள்கின்றனர்? போன்ற பல விடயங்கள் மெல்லச் சித்திரிக்கப்படுகிறது.

அனைத்தையும் சம்பவங்களுக்கூடாகவே நிகழ்த்தி விடுகிறார் நடேசன். தனியே நின்று எதைப்பற்றியும் வியாக்கியானப்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. இங்கேதான் நடேசனுடைய இலக்கியப் பரிச்சியமும் எழுத்துப்பரிச்சியமும் புலப்படுகிறது. கலையமைதி கூடி வருகின்ற இடம் இது.

ஒரு சின்னஞ்சிறிய தீவில் இத்தனை பெரிய கதைகளெல்லாம் இருந்திருக்கிறதே என்ற எண்ணம் நமக்கு எழுகிறது. தீவில் மட்டுமல்ல, மனிதர்களிடத்திலும் அப்படித்தான். மனிதர்கள் என்றாலே அப்படித்தான். ஒவ்வொருவரிடத்திலும் பல ஆயிரம்

கதைகள் இருக்கும். அவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையும் அது நிகழ்கின்ற களமும் கதைகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கும். அப்படி உற்பத்தி செய்யப்படும் கதைகளின் வழியாக எழுவைதீவிற்கு ஒரு அடையாளத்தைக் கொண்டு வந்துள்ளார் நடேசன். கரிசல் நிலத்திற்கு கி. ராஜநாராயணன், மு.சுயம்புலிங்கம் பா. செயப்பிரகாசம் போன்றோர் உருவாக்கிய அடையாளத்தைப்போல, பரந்தன் – குமரபுரத்தின் வரலாற்றுச் சித்திரத்தை தாமரைச்செல்வி உருவாக்கியதைப்போல எழுவைதீவுக்கான அடையாளத்தை நடேசன் உருவாக்கியுள்ளார்.

ஏற்கனவே எழுவைதீவில் ஒரு மருத்துவமனையை நிறுவியிருக்கிறார் நடேசன். முன்பு, அந்தத் தீவில் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் கடல் கடந்து ஊர்காவற்றுறைக்குப் போய்த்தான் மருந்து எடுக்க வேண்டும். மழையோ வெயிலோ இரவோ பகலோ இதுதான் நிலை. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நடேசன் சிந்தித்ததன் விளைவே அந்த மருத்துவமனை. இப்பொழுது இன்னொரு சிந்தனையின் உருவாக்கமாக இந்த நாவல். இது ஒரு வரலாறு. ஒரு அடையாளம். ஒரு வழி. ஒரு முகம்.

மனம் செயலாகும் போது உருக்கொள்ளும் எதுவும் ஏதோ ஒரு வகையில் காலத்தில் நிற்கும். காலம் அதற்குரிய பரிசைக் கொடுக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.