இலக்கியச்சோலை
மின்நூலாக்க முன்னோடி இ.பத்மநாப ஐயர் ! தமிழர் போராட்ட வரலாற்றின் ஆவணக் காப்பகர் !! ஈழப் போர் வரலாற்றை சேகரித்த நூலவர்!!!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(வணக்கம் இலண்டனின் பத்தாவது ஆண்டு நிறைவையோட்டி (2013 – 2023) வாழ்நாள் சாதனையாளர் விருது “நூலவர்” இ. பத்மநாப ஐயர் அவர்களுக்கு பெருமையுடன் வழங்கப்படுகிறது)
ஈழத் தமிழரின் போராட்டம் தீவிரம் அடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் போராட்ட அமைப்புகளின் வெளியீடுகளையும், பிரசுரங்களையும் ஆவணங்களையும் சேகரிப்பதில் அக்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருந்தன. தற்போதய இலத்திரனியல் வசதிகள் அப்போது இருக்கவில்லை.
ஈழப் போராட்டத்தில் ஆவணக் காப்பகம்:
ஆயினும் ஈழப் புரட்சி அமைப்பும்,
அதன் மாணவர் அமைப்பான GUYS ஆவணங்களை காக்கும் செயற்திட்டத்தில் முனைப்பாக இருந்தன. இதற்கென பிராந்திய வாரியங்களாக ஆவணக் காப்பகம் (Documentation Unit) அமைக்கப்பட்டு பல நூறு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன.
ஈழப் போராட்டத்தில் ஆவணங்களை காப்பது என்பது ஒரு முக்கியமான செயற்பாடாக அமைந்தது. அன்றைய காலத்தில் பல்வேறு போராட்ட அமைப்புகள் இருந்தாலும் எல்லா அமைப்புகளும் இத்தகைய ஆவணம் பேணுதலை செய்யவில்லை.
ஆனாலும் மிக முக்கியமான போராட்ட அமைப்புகள் தங்களது பிரச்சார வெளியீடுகளையும், நூல்களையும் சேகரித்து, சேர்த்து வந்ததும் போரின் உச்சகட்டத்தில் அவற்றுள் பல அழிந்துபோனதும் அனைவரும் அறிந்ததே.
ஆனாலும் ஈரோஸ் அமைப்பும், அதன் மாணவ அணியான “மாணவர் இளைஞர் பொது மன்றம்” GUYS மிக முக்கியமாக அக்கால கட்டத்தில் பல்வேறு ஆவணங்களை சேகரித்து அதனை ஒரு முக்கிய மையமாக ‘ஆவணக்காப்பகம்’என்ற பெயரில் சேகரித்து வந்தனர்.
அழிந்த ஆவணக் காப்பகங்கள்:
ஆனால் கொடூரமாக போர் நடந்த காலத்தில் அரச படைகளால் நூலகங்கள் எரிக்கப்பட்டதை போல,
பல ஆவண காப்பக மையங்களும் அழிந்துபோயின.
போர்க்கால வரலாற்றை, இலக்கியங்களை சேகரிக்கும் ஓர் கலந்துரையாடலிலேயே பத்மநாப ஐயரை முதன் முதலாக சந்தித்தாக ஞாபகம். தோழர்கள் வேலு, ரமேஷ் உடன் ஈழப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த 1985களின் நடுப் பகுதிகளில் யாழ் பல்கலைகழகத்தில் இச்சந்திப்பு இடம் பெற்றது.
பன்முகப் பார்வை கொண்ட நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்துசக்தியாக விளங்கும் பத்மநாப ஐயர் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு
பெரும் பங்காற்றியது போல அக்கால கட்டத்தில் ஆவணக் காப்பக பணியிலும் செவ்வனே ஆற்றியுள்ளார்.
ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்ட இலக்கிய ஆர்வலர் ஆவார். போர்க்கால வரலாற்றை மற்றுமின்றி, ஆக்க இலக்கியங்களை சேகரிக்கும் ஓர் வெளியீட்டுத் துறையிலும் ஆக்கங்களைத் தொகுப்பதிலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தரமான, நேர்த்தியான பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். தற்போது வணக்கம் இலண்டனின் பத்தாவது ஆண்டு நிறைவில், வாழ்நாள் சாதனையாளர் விருதை “நூலவர்” இ. பத்மநாப ஐயர் அவர்கள் பெறுகிறார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது:
இலண்டனில் பெருமையுடன் “நூலவர்” இ. பத்மநாப ஐயர் மாண்பேற்றும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 18 பெப்ரவரி 2023 காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. அத்துடன் இலண்டன் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியும் அந்த அரங்கில் இடம்பெறுகிறது.
அரைநூற்றாண்டு கால புத்தகப் பண்பாட்டு ஊழியனாக பணியாற்றியவரை
மதிப்பளித்து கௌரவித்து வாழ்நாள் சாதனையாளர் விருதை “நூலவர்” இ. பத்மநாப ஐயர் பெறுவதில் தமிழ்கூறும் நல்லுலகம் பெருமை அடைகிறது.
தனது வாழ்வில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கியத் துறையிலும் வெளியீட்டுத் துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர். ஈழத்து படைப்புகளை தமிழகத்திலும் சர்வதேச அளவிலும் எடுத்துச் சென்றதில் பத்மநாப ஐயரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையில் அவர் மிகப்பெரிய இணைப்பாலமாக விளங்கினார்.
பத்மநாப ஐயரின் எழுத்துப் பணி :
இளமையில் பல அறிவியல் கட்டுரைகளை ஈழத்துப் பத்திரிகைகளில் இ. பத்மநாபன் என்ற பெயரில் எழுதியுள்ளார். இலங்கையிலும் தமிழகத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் கலைப்படைப்புகளிலும் ஆழ்ந்த அக்கறையும் ரசனையும் கொண்டுள்ள பத்மநாப ஐயர் நீண்ட கால இலக்கியப் பங்களிப்புக்காக கனடாவில் இயல் விருது பெற்றவர்.
இவரது அறிவியல் கட்டுரைகள் அறிவொளி, நவீன விஞ்ஞானி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. இலக்கிய நேசிப்பாளர்கள் பலரை நண்பர்களாக்கியும் கொண்டவர்.
அத்துடன் தமிழியல் பதிப்பகத்தின் மூலம் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். கண்ணில் தெரியுது வானம் முதலிய குறிப்பிடத்தக்க நூல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
மின்நூலாக்க முன்னோடி :
நீண்ட காலமாக தமிழர் தாயகத்தில் நூலகங்களும், ஆவணக் காப்பகங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதால் ஈழத்து நூல்களுக்கான நூலக திட்டத்தின்படி இணைய நூலகம் ஒன்று மின்னம்பலத்தில் பவனி வரச் செய்த பெருமை பத்மநாப ஐயருக்கு உரித்தானதாகும்.
ஈழ நூலகத் திட்டத்தின் அறங்காவலர் சபையின் தலைவராகவும் பணியாற்றி, நூலகக் கனவின் ஒரு படியாகவே, ஈழத்து நூல்களை மதுரைத் திட்ட இணைய நூலகத்தில் கணிசமான நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பதும்,
நூல்கள் மீது கொண்டிருக்கும் அவரது பேரார்வத்தின் விஸ்தரிப்பாகவே நூலகம் என்ற எண்ணிம ஆவண வலைதளத்தில் பத்ம நாப ஐயரின் பங்களிப்பு அளப்பரியது.
நூலகம் இணைய வலையமைப்பு இன்று ஆற்றலுடன் செயற்பட்டு வருவதற்கு பத்மநாப ஐயரின் அர்ப்பணிப்பும் பேருழைப்புமே காரணம். ஈழத்து நூற்பதிப்பு துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்மநாப ஐயர் தீவிரமாக இயங்கி வந்திருக்கிறார்.
திரு பத்மநாப ஐயர் ஓர் இலக்கியப்படைப்பாளி அல்லர். ஆனால் ஒரு படைப்பாளியின் முக்கிய கடமை என்று கருதப்படும் பண்பாட்டுக்கு செழுமை சேர்க்கும் செயல்பாடுகளை உணர்ந்தவர்.
தரமான நூல்களும் இதழ்களும் ஈழத்து வாசகர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதிலும், ஈழத்துப் படைப்புக்கள் நூல்வடிவம் பெற வேண்டும் என்பதிலும் நீண்ட காலமாக தொடர்ந்து அக்கறை செலுத்திவருகின்றார்.
‘மரணத்துள் வாழ்வோம்‘ தொகுப்பாளர்:
ஈழப் போர் உச்சம் அடைந்த 1985இல் 31 கவிஞர்களின் 82 சமகால அரசியல் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ‘மரணத்துள் வாழ்வோம்’ எனும் தொகுப்பாக இன்றும் பேசப்படுகிற தொகுப்பாக்கித் தந்தவரும் திரு பத்மநாப ஐயர் தான்.
1987இல் வெளியான தலைசிறந்த ஈழத்து ஓவியர் மார்க் அவர்களின் ‘தேடலும் படைப்புலகமும்’ நூலானது வடிவமைப்பில் புதுமுயற்சியாகவும், அச்சிடலின் முன்மாதிரியான தொகுப்புக்களைக் கொண்டு வந்ததாக கருதப்பட்டது.
2004 கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருதானது, ஒரு படைப்பாளி தீவிரத்துடன் தமிழுக்கு செழுமை சேர்ப்பதிலும் உயிர்ப்பு மிகுந்த உணர்வை பேணுவதிலும் இடைவிடாது உழைத்தமைக்காக பத்மநாப ஐயருக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டது.
1968 இல் தமிழகத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட அக்கரை இலக்கியம் என்ற ஈழ மலேசிய படைப்புகளின் தொகுப்பு முதல் 2001 இல் கனடாவில் ஆங்கிலத்தில் வெளியான ஈழத்து இலக்கியத் தொகுப்பு வரை இலக்கிய முயற்சிகளில் பத்மநாப ஐயர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் பாராட்டுக்குரியது மட்டுமின்றி போற்றுதற்குரியதே.
காலச்சுவடு, நூலகம் திட்டம் போன்றவற்றின் ஆலோசகராகவும் இருந்து வசதியற்ற பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதில் பங்காற்றியுள்ளார்.
‘ஊரடங்கு வாழ்வு‘
1985இல் ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து ‘ஊரடங்கு வாழ்வு’தமிழியல் வெளியீடாக வெளியிட்டு, உலகிலேயே முதலில் வந்த ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பெனும் பெருமையையும் தக்க வைத்துள்ளார்.
விருதுகளும் சிறப்புகளும் :
கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகை பத்மநாப ஐயரின் பணிகளைக் கௌரவிக்குமுகமாகச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டு அவரை கௌரவப் படுத்தியுள்ளது.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கும் இயல் விருது 2004 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டதும் அறிந்ததே.
தற்போது வணக்கம் இலண்டனின் பத்தாவது ஆண்டு நிறைவில் , வாழ்நாள் சாதனையாளர் விருது “நூலவர்” இ. பத்மநாப ஐயர் அவர்களுக்கு பெருமையுடன் வழங்கப்படுவது அவரின் காலச்சிறந்த பணிக்கு கிடைக்கும் இன்னோர் கௌரவிப்பாகும்.