வாசகர் முற்றம்!…. அங்கம் 16 …. முருகபூபதி.
வீரகேசரி பிரசுரங்களிலிருந்து வாசிப்பு அனுபவத்தை வளர்த்துக்கொண்ட வாசகி…. வசுந்தரா பகீரதன் !
நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், இரத்த உறவுகள் அவரவர் பாரம்பரியத்திலிருந்து பிறப்பார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னியில் நடந்த இலக்கிய சந்திப்பு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நான் சந்தித்த வசுந்தரா பகீரதனின் வாசிப்பு அனுபவம் குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டபோது, மேற்குறிப்பிட்ட வரிகளே எனது மனதில் தோன்றியது.
தான் ஒரு இலக்கிய ஆளுமையின் உறவினர் என்பதே தெரியாமல் வளர்ந்த ஒரு தேர்ந்த வாசகிதான் இந்த வசுந்தரா ! அத்தகைய இவர் பற்றிய அறிமுகத்தைத்தான் இம்முறை எனது தொடரான வாசகர் முற்றத்தில் வழங்கவிருக்கின்றேன்.
வீரகேசரியில் நான் பணியாற்றியபோது அங்கே வாரவெளியீட்டுப்பிரிவில் துணை ஆசிரியராகவிருந்த வசுந்தரா பகீரதன், என்னோடு உடன் பிறந்த சகோதரிபோன்று பழகியவர்.
அன்று தொடங்கிய நட்பு, சகோதர வாஞ்சையாக அவர் அவுஸ்திரேலியா சிட்னியில் குடும்பத்துடன் வசிக்கத்தொடங்கிய காலத்திலிருந்தும் தொடருகிறது.
யாழ்ப்பாணம், நல்லூர் பிரிவிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர்: சுப்பிரமணியம் – ஜெயமணி தம்பதியர்.
தனது ஆரம்பக் கல்வியை கொக்குவில் நாமகள் வித்தியாலயத்திலும், உயர்வகுப்பை அவ்வூருக்கு மகுடமாக விளங்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து தொழிற்கல்வியை பெற்றார்.
வசுந்தராவிடம், வாசிப்பு பழக்கம் எவ்வாறு தோன்றியது..? வளர்ந்தது…? எனக்கேட்டேன்.
வசுந்தரா: மிகச்சிறிய வயதிலேயே வாசிப்பு பழக்கம் எனக்கு வந்துவிட்டது. ஆரம்பக் கல்வியில் வாசிப்பு ஒரு பாடமாக
இருந்துவந்தது. எனது தந்தையார்தான் வாசிப்பை எனக்கு ஊக்குவித்தவர். என்னை மட்டுமல்லாமல், எனது தாயார், உடன்பிறந்தவர்களையும் வாசிப்பை நேசிக்க வைத்தவர். அவர்தான் எங்கள் வீட்டு நுழைவாயில் கதவின் நிலையில் வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்ற மில்க்வைற் வாசகத்தை ஒட்டி வைத்திருந்தார். அந்த வாசகமே வேதவாக்குப்போல் புத்தகங்களின் முக்கியத்துவத்தை எமக்கு உணர்த்தியது.
எமது தந்தையாருக்கு காலையில் எழுந்ததும் வீரகேசரி படிக்கின்ற பழக்கம் இருந்தது. அதனால் சிறுவயதிலேயே எங்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கம் வந்துவிட்டது. சிலவேளைகளில் அவருக்கு முன்னால் இருந்து அனைத்துச் செய்திகளையும் தனக்கு வாசித்துக் கூறும்படி கூறுவார். அவர் ஒரு புத்தகப்பிரியர். எங்கள் வீட்டில் சிறிய நூலகமே இருந்தது.
சிறுவயதில், அம்புலிமாமாவில் தொடங்கிய வாசிப்பு அனுபவம், பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள் என பலவற்றையும் தேடி வாசிக்கத்தூண்டியது. பள்ளிப் பாடப் புத்தகங்களிடையே, இவைகளும் பாடப்புத்தகங்கள்போல் சுமக்கப்பட்டன.
புத்தகப்பிரியரான எனது தந்தையார் 70 களில் வெளிவந்த வீரகேசரிப் பிரசுரங்களை ஒன்றும் தவறவிடாமல் வாங்கி சேமித்து வைத்திருந்தார். இன்றும் அந்த நினைவுகள் பசுமையாக உள்ளது.
வசுந்தராவிடம், அவரது வாசிப்பின் தேர்வு எவ்வாறிருந்தது…? எனக்கேட்டேன்.
வசுந்தரா: நான் பெரிதும் விரும்பிப் படிப்பது நாவல்களைத்தான். தந்தையார் சேகரித்த வீரகேசரிப் பிரசுரங்கள் எல்லாவற்றையும் நான் வாசித்திருக்கின்றேன். பல ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்கள் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்திருக்கின்றன. சொக்கன், டானியல், தெணியான், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், அ.பாலமனேகரன், உதயணன், கே.எஸ்.ஆனந்தன், இந்துமகேஷ், வ.அ.இராசரத்தினம், தி.ஞானசேகரன், தெளிவத்தை ஜோசப், அருள் செல்வநாயகம், நெல்லை க.பேரன், அன்னலட்சுமி ராஜதுரை, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என சிறிய வயதிலேயே இவர்களின் பெயர்கள் மனப்பாடமாகிவிட்டன.
குறிப்பாக செங்கை ஆழியானின் வாடைக்காற்று, பிரளயம், காட்டாறு, கங்கைக்கரையோரம், அ.பாலமனோகரனின் குமரபுரம், நிலக்கிளி , சொக்கனின் செல்லும் வழி இருட்டு, சீதா, உதயணனின் பொன்னான மலரல்லவோ, கே.எஸ்.ஆனந்தனின் காகிதஓடம், நெல்லை க.பேரனின் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள், அருள் செல்வநாயகத்தின்
மர்ம மாளிகை முதலான நாவல்கள் உட்பட பல பிரதேச மக்களின் வாழ்வியல்பை படம்பிடித்துக் காட்டிய அற்புதமான நாவல்களையும் அன்றே படித்துவிட்டேன்.
வசுந்தரா, எழுத்தாளர்களையும் அவர்கள் எழுதிய நாவல்களின் பெயர்களையும் நினைவில் வைத்துச்சொல்லி, தனது நினைவாற்றலையும் காண்பிக்கத் தவறவில்லை. தொடர்ந்தும் அவரைப்பேசவிட்டுக் கேட்டேன்.
அவர் மேலும் சொல்கிறார்:
“ வீரகேசரிப் பிரசுரங்கள் அந்நாளில் ஒரு கனவுலகமாக இருந்தது. எப்போது புதிய பிரசுரங்கள் வெளிவரும் என்ற ஆவலோடு காத்திருக்க வைத்த காலம் அது. வீரகேசரியை எனது தந்தையார் மிகவும் நேசித்தவர். பின்னாளில் 1980 களில் நான் வீரகேசரி பத்திரிகை காரியாலயத்தில் கடமையாற்றுவேன் என நினைத்திருக்கவில்லை. எனது வாழ்வில் அது எதிர்பாராத சம்பவம்.
நான் அங்கு கடமையாற்றியபோது எனது தந்தையார் உயிரோடு இல்லை. அவர் எண்ணங்களும் நினைவுகளும் வீரகேசரியைப்பற்றியே எப்போதும் இருக்கும். அங்கு கடமையாற்றியபோது, பல எழுத்தாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக்கள் நிறைய கிடைத்தன. அவர்களில் நீங்களும் ஒருவர். உங்களால் பலரதும் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அங்கு நான் கடமையாற்றிய காலங்கள் எனது வாழ்க்கையின் வசந்தகாலங்கள் என்றே கூறவேண்டும்.
வசுந்தரா கூறும் பின்வரும் செய்திகள் மிகவும் முக்கியமானது. அச்செய்திகளையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.
மறைந்த எழுத்தாளர் அருள் செல்வநாயகம் எனது தந்தையின் உடன்பிறந்த இளைய சகோதரர். அவர் பிறந்த ஊரான மட்டக்களப்பில் குருமண்வெளி மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றியவர். அவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மீது அளவுகடந்த அன்பும் அபிமானமும் கொண்டவர். அடிகளார் மீது கொண்ட அபிமானத்தால் அவர்பற்றி பத்து நூல்களை எழுதி வெளியிட்டவர். அவை பின்னாளில் அவரது மகள் ஜெயந்திமாலா அருள்செல்வநாயகம் அவர்களால் தொகுக்கப்பட்டு விபுலானந்த இலக்கியம் என வெளியிடப்பட்டது.
அருள் செல்வநாயகம் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் பெருமைசேர்த்தவர். மட்டக்களப்பில் பிறந்து மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலை நாடகங்களாகவும் நாவல்களாகவும் கட்டுரைகளாகவும் எழுதியவர். பல வானொலி நாடகங்களையும் கூத்து கலைவடிவங்களையும் எழுதி புகழ்பெற்றவர்.
இலண்டனில் வசிக்கும் முல்லை அமுதன் ஈழத்து எழுத்தாளர்கள்பற்றி தொகுத்த இலக்கியப்பூக்கள் நூலில் எனது சிறியதந்தை அருள் செல்வநாயகம்பற்றி நான் எழுதிய கட்டுரை வெளிவந்தது. இவரை நினைவுகூர்ந்து மட்டக்களப்பில் 2012 இல் அருள்செல்வநாயகம் நினைவு சிறுகதைப்போட்டி ஒன்றை நடத்தி, கவிஞர் மேமன்கவி தலைமையில் நடந்த விழாவில் பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தோம்.
வசுந்தராவிடம், தொடர்ந்தும் நீடித்த வாசிப்பு அனுபவம் பற்றிக்கேட்டபோது….
வாசிப்பு அனுபவம் பற்றிக்கூறும்போது, எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து யாழ்ப்பாணத்தில் அப்போது தவறாது வெளிவந்த மாத சஞ்சிகையான டொமினிக் ஜீவாவின் மல்லிகை பற்றியும் கூறவேண்டும். மல்லிகை என்றால் தனித்துவமான மணமே அந்தப்பூவினுடைய சிறப்பு. அதுபோன்று மல்லிகை இதழ் என்றால், அதன் சிறப்பு முழுவதும் தன் எண்ணமும் எழுத்தும் மல்லிகையே என வாழ்ந்த டொமினிக் ஜீவா அவர்களையே சாரும்.
ஈழத்து எழுத்தாளர்கள், கல்விமான்கள் கலைஞர்கள் என ஈழத்துக்குப் பெருமை சேர்த்தவர்களின் படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு சிறப்புச் சேர்த்தவர்.
சிறுகதைகள், கட்டுரைகள் ,கவிதைகள், துணுக்குகள் என மல்லிகை இதழ், யாழ். மண்ணில் வெளிவந்து மணம்பரப்பியது.
பின்னர் போர்க்காலத்தில் கொழும்புக்கு இடம்பெயர்ந்தது. டொமினிக் ஜீவா என்ற தனிமனிதன் ஈழத்து எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்து, மல்லிகை மூலம் ஈழத்து இலக்கியத்தில் வாசம் வீசியவர். ஈழத்து எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு வரப்பிரசாதம். மல்லிகை, சிரித்திரன், கலகலப்பு போன்றவை நான் சிறுவயது தொடக்கம் படித்துச் சுவைத்த சஞ்சிகைகள். அவை அன்று யாழ். மண்ணிலேயே வெளிவந்தது பெருமைமிக்க விடயம்.
ஈழத்து நாவல்கள், சஞ்சிகைகள் போன்று தமிழ்நாட்டு இலக்கியங்களையும் நான் பெரிதும் நேசிக்கின்றேன். லஷ்மி, சாண்டில்யன், கல்கி, சிவசங்கரி, இந்துமதி, பாலகுமாரன், ரமணிசந்திரன் ஆகியோரின் நாவல்களை நான் முன்னர் தேடிப் படிப்பேன்.
பல நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. அவற்றில் லஷ்மியின் பெண்மனம், கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், உமா சந்திரனின் முள்ளும் மலரும், மகரிஷியின் புவனா ஒரு கேள்விக்குறி, சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலாகிறது
(அவன் அவள் அது ) போன்றவை வெள்ளித்திரையிலும் சிறப்பை தேடிக்கொண்டவை.
புடவைக்கடைக்குச் சென்று தினுசு தினுசாக இருக்கும் புடவைகளை தெரிவுசெய்வததைவிட, நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தெரிவுசெய்வதையே நான் பெரிதும் விரும்புவேன். புத்தகங்கள் எனக்குப் பொக்கிஷங்கள் போன்றவை. இலக்கிய வடிவங்களின் ஆதாரங்களாக விளங்குபவை. இன்று இணையத்தளங்கள் வாயிலாக செய்திகளையும், புத்தகங்களையும் படிக்கக்கூடிய வசதி இருக்கின்றது.
ஆனால், ஒரு புத்தகத்தை கையிலெடுத்து அதன் வாசனையை நுகர்ந்து பக்கம் பக்கமாக ஆவலோடு புரட்டி முழுமூச்சோடு படிக்கின்ற சுகம் எதிலுமே கிடைக்காது. ஒரு முழுமையான வாசகருக்கு மட்டுமே புத்தகங்களின் ஸ்பரிசத்தின் உணர்வுகள் பரிபூரணமாகப் புரியும். ஒரு வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடையேயான நெருக்கத்தைப் புத்தகங்களே கொடுக்கின்றன. அதுமட்டுமல்லாது அந்தப் புத்தகங்களின் அட்டைப்படம், மற்றும் உட்பக்க ஓவியங்கள்கூட மனதைவிட்டு அகல்வதில்லை.
கனடாவில் வதியும் இலக்கிய ஆளுமை – படைப்பாளி அ. முத்துலிங்கம் உங்கள் உறவினர் என அறிகின்றேன். அத்துடன் அவருடனான திடீர் தொடர்பாடல் எவ்வாறு நிகழ்ந்தது..? அது பற்றிச்சொல்லுங்கள் எனக்கேட்டதும், வசுந்தராவின் வாக்கு மூலம் இவ்வாறு உதிர்ந்தது. கேட்க சுவாரசியமாகவும் இருந்தது.
“ அ.முத்துலிங்கம் அவர்கள் எனக்குத் தாய்வழி உறவினர் என்பதை காலம் கடந்தே அறிந்தேன். அவர், நான் பிறக்குமுன்னரே தொழில்நிமித்தம் ஊரைவிட்டு சென்றுவிட்டார். அவர் எனது உறவினர் என்பதை சமீபத்தில்தான் நான் அறிந்துகொண்டேன். அது ஒரு சுவையான சம்பவம்.
புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களாக விளங்கும் ராஜாவும் பாரதி பாஸ்கரும், இருவருடங்களுக்கு முன்னர் இணையவழி மூலம் திரு. அ.முத்துலிங்கம் அவர்களை நேர்முகம் கண்டனர். அது இணையத்தளத்தில் பெரிய அளவில் பிரபலம்பெற்றது. அதில் அவர்கள் எங்கள் கொக்குவில் ஊர்பற்றி குறிப்பிடும்போது, வீதியின் நடுவில் அமைந்த கிணறு பற்றி சுவாரசியமாக உரையாடினார்கள்.
அவர்கள் குறிப்பிட்ட கிணறு எனது தாய்வழி உறவுகள், அயலவர்களின் பாவனையில் இருந்துவந்த பழமையான கிணறாகும். எனக்கும் அந்தக்கிணறு பற்றிய நினைவு இருந்தது. அது எனது சிறுவயதிலேயே பாதுகாப்புக் கருதி மூடப்பட்டும்விட்டது. அவர் அந்தக்கிணறு பற்றிய
விபரத்தைதெரிந்துகொள்ள ஆவலோடு இருந்தார் என்பதை அறியமுடிந்தது. நான் அந்த நிகழ்ச்சியைக் கேட்டபின்னர் அவரோடு மின்னஞ்சலில் தொடர்புகொண்டேன்.
பின்னர் தொலைபேசி வாயிலாகவும் உரையாடினேன். அப்போதுதான் அவர் எனது தாய்வழி நெருங்கிய உறவினர் எனத் தெரியவந்தது. அந்த உரையாடலின் பின்னர் அவரது சிறுகதைத்தொகுதிகளையும் இதர நூல்களையும் தமிழ்நாட்டிலிருந்து வரவழைத்துப் படித்தேன். அவரது படைப்பு மொழி என்னை பிரமிக்க வைத்தது. அவரது அபிமானம் நிறைந்த வாசகியாகவும் மாறிவிட்டேன்.
எனது வாசிப்பு அனுபவத்தை மாற்றியதில் முத்துலிங்கம் அவர்களுக்கும் முக்கிய பங்கிருப்பதாக தற்போது உணருகின்றேன்.
கவிதைகள் தொடர்பாக வசுந்தராவைக்கேட்டதும், இவ்வாறு சொன்னார்:
நாவல்களை வாசிப்பதுபோல் கவிதைகளும் திரைப்படப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தமானது. பாரதியார், பாரதிதாசன் எழுதிய கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் இவர்களுடன், பழனிபாரதி, நா.முத்துக்குமார்,தாமரை ஆகியோரின் பாடல்களும் கவிதைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.
கண்ணதாசன், வாலி, அறிவுமதி, பழநிபாரதி ஆகியோர் எழுதிய புத்தகங்கள், கவிதைத்தொகுதிகள் பலவற்றையும் எனது நூலகத்தில் சேமித்து வைத்திருக்கின்றேன்.
கொரோனா முடக்கத்தின்போது இவைபெரிதும் உதவியிருக்கின்றன. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் என்விருப்பப் பாடல்கள் என்ற நிகழ்ச்சியைப் பலவருடங்களாக வழங்கிவருகின்றேன் பாடல்களைப்பற்றிய விமர்சனங்களுக்கு இந்தப்புத்தகப்படிப்பு பெரிதும் உதவியாக இருந்தது.
அறிவுப்பசிக்கு புத்தகங்களே அறுசுவை விருந்தாக உள்ளன. வாசிப்பின் அத்தியாவசியத்தை அனைவரும் உணரவேண்டும். அறிவையும் சிந்தனையில் தெளிவையும் பிறரது அறிவுரைகள் மட்டுமல்லாமல், புத்தகங்களும் பெரிதும் உணர்த்துகின்றன. வாசிப்பால் பெறுகின்ற அனுபவங்கள் எங்களை – எமது எண்ணங்களை கூர்மையாக்கும். அறிவை விசாலமாக்கும். வாழ்க்கைக்கான தேடல்களை ஊக்குவிக்கும்.
வாசிப்பின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு பெற்றோர் எடுத்துக்கூற வேண்டும். சரித்திரங்களும் வரலாறுகளும் இலக்கிய
வடிவங்களும் வாழ்வியலும் அறிவியலும் விஞ்ஞானமும் புத்தக வடிவில் கோடிக்கணக்கில் உள்ளன.
புலம்பெயர்ந்த நாட்டில் பிள்ளைகளுக்கு தாய்மொழியை கற்பிப்பது, தாய்மொழியில் பிள்ளைகளோடு உரையாடுவது மட்டுமல்லாமல் குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்குப் பொருத்தமான புத்தகங்களை பெற்றுக்கொடுத்து அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் ஊக்குவிக்கவேண்டும்.
சிறுவர்களுக்கு பரிசளிக்கும்போது அவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களைப் பரிசாக தேர்வுசெய்யுங்கள் என்ற ஆலோசனையையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன் என்றார் வசுந்தரா பகீரதன்.
“ புத்தக உலகம் என்பது வெகு சுவாரசியமானது. ஒரு புத்தகமும் தனிமையும் இருந்தால் வேறெதுவும் தேவையில்லை. “ எனச்சொல்லும் வசுந்தரா பகீரதனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். letchumananm@gmail.com
I’m very proud of you.Knowledge is power; power is wealth; you’re really wealthy. Hats off to you, my dearest Vasunthara ! 🙌👍🙏🏻
வாசகர் முற்றம் – தொடர் பதினாறில் வசுந்தரா அம்மையாரின் வாசிப்பு அனுபவம் பற்றிய நேர்காணலின் தொகுப்பை எழுத்தாளர் முருகபூபதி ஐயா மிகப் பிரமாதமாக எழுதியிருக்கிறார். வாசகர்களுக்கும் வாசிக்க நினைப்போருக்கும் வாசிப்பை தவற விடுபவர்களுக்கும் வசுந்தரா அம்மையாரின் அனுபவப் பகிர்வு பல படிப்பினைகளை முன்வைக்கின்றது. அவரது “வாசிப்பால் பெறுகின்ற அனுபவங்கள் எமது எண்ணங்களை கூர்மையாக்கும்.அறிவை விசாலமாக்கும். வாழ்க்கைக்கான தேடல்களை ஊக்குவிக்கும்” என்ற வார்த்தைகள் நிதர்சனமானவை மட்டுமல்ல வாசிக்கும் உத்வேகத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. பாடசாலை மாணவர்கள் தவறாது வாசிக்கவேண்டிய தொகுப்பு.
ஆக்கத்தை தந்த எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கும் பிரசுரித்த அக்கினிக் குஞ்சுகள் பிரசுரத்தாருக்கும் அனுபவத்தை பகிர்ந்த வசுந்தரா அம்மையாருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகட்டும்.
நல்லையா கமலநாதன்