இலக்கியச்சோலை
காலத்தை வென்ற இசைக் குரலோன் பொப் மார்லி ! நிறவெறியை எதிர்த்து போராடிய கரீபிய கலைஞன்!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
மனித நேயத்திற்காக குரல் கொடுத்த ஜமேக்கா பாடகன் !
——————————————————
சுருள் சுருளாக இருக்கும் நீண்ட தலைமுடி, வாயில் சப்பிய புகையிலை, மென்மையான இளஞ்சிரிப்பு என இருக்கும் ஜமேக்காவைச் சேர்ந்த அந்த இசைக்கலைஞனின் முகம் சம்பந்தமே இல்லாத பலருக்கும் நெருங்கிய உணர்வை இசையாய் உள்ளத்தில் ஏற்படுத்தும்.
காலத்தை வென்ற இசைக் குரலோன் பொப் மார்லி, மக்களுக்கான விடுதலையை, மானுட அன்பை இசையின் வழியாக பாடிய அந்த இசைக்கலைஞனின் பிறந்த தினம் பெப்ரவரி 6.
மனித நேயத்திற்காக குரல் கொடுத்த ஜமேக்கா பாடகனை, உலகம் முழுவதும் உள்ள இசைப் பிரியர்களுக்கு, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கும் பொப் மார்லியைப் (Bob Marley) பற்றிய அறிமுகம் அதிகம் தேவையில்லை.
வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மகனாகப் பிறந்த
நெஸ்டா ராபர்ட் மார்லி என்ற இயற்பெயருடைய பொப் மார்லி இங்கிலாந்தைச் சேர்ந்த நார்வல் சிங்ளேர் மார்லி என்பவருக்கும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த செடெல்லா என்பவருக்கும் பிறந்தவர்.
கலப்பு இனத்தில் பிறந்ததால் பொப் மார்லி `வொயிட் பாய்’ என்று கேலியாக அழைக்கப்பட்டார். இப்படி அழைக்கப்பட்டது பின்னாளில் தனக்கென ஒரு தத்துவத்தை வளர்த்துக்கொள்ள உதவியது என மார்லி தெரிவித்துள்ளார். நான் வெள்ளையின மக்களின் பக்கமோ அல்லது கறுப்பின மக்களின் பக்கமோ இல்லை. நான் கடவுளின் பக்கம் நிற்கிறேன் என்பது தான் அந்த தத்துவம்.
யார் இந்த பொப் மார்லி?
ஏன் பொப் மார்லியை உலகம் இந்தளவிற்கு கொண்டாடுகிறது?சேகுவேராவுக்கு அடுத்தபடியாக அதிகமான இளைஞர்களின் உடைகளில், நெஞ்சினில் பச்சை குத்தி இடம்பெறும் அளவுக்கு இளைய தலைமுறையை என்றும் கவர்ந்துள்ளார் எனலாம்.
பொப் மார்லியின் பாடல்களில் புதைந்திருக்கும் அரசியல் உணர்வு, விடுதலை வேட்கையே அதற்கான காரணங்களாகும். கரீபியன் தீவுகளின் சமூக மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான அவரது வெளிப்பாடு சாதாரண தொழிலாளர் வர்க்கத்திலிருந்து பணக்காரர்கள் வரை ரசிகர்களை அதிகம் தேடித்தந்திருந்தது.
ஏன், தற்போதைய காலத்துக்கும் அவரது பாடல் வரிகள் பொருந்திப் போகின்றன. மார்லியின் பாடல்களில் பிரதிபலிக்கும் விடயங்கள் அனைத்தும் அவர் சிறு வயதில் கண்ணுற்ற சாட்சியங்களாகும்.
கருப்பு – வெள்ளை தம்பதியினருக்கு 1945ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஜமைக்காவின் செயின்ட் ஏன் பாரிஸ், நைன் மைல் எனும் இடத்தில் பிறந்த பொப் மார்லி, பின்னாளில் உலகின் தலைசிறந்த பாடகனாக சரித்திரத்தில் இடம்பிடிப்பான் என கனவிலும் அவனது பெற்றோர்கள் நினைக்கவில்லை.
காதலும் கஞ்சாவும் :
1966ஆம் ஆண்டு பெப்ரவரி 10இல்
பாடகியான ரீட்டா எண்டர்சனை மார்லி திருமணம் செய்துகொண்டார்.
ரீட்டா மூலம் ரஸ்தபாரி எனும் மதம் மார்லிக்கு அறிமுகமானது.
ஜமேக்காவில் அதிகமாக கஞ்சா விளையும். அது ரஸ்தபாரி மதத்தில் புனிதப் பொருளாக பார்க்கப்பட்டது. மேலும் மூலிகையாகவும், தியான நிலைக்கு உகந்ததாகவும் கருதப்பட்டது. மார்லி மாமிசம் உண்பதை தவிர்த்து சைவ உணவுகளை உண்ணத் தொடங்கினார். 1966இல் ஜமேக்கா திரும்பிய மார்லி மீண்டும் லிவிங்ஸ்டன், டொஸ் ஆகியோருடன் இணைந்துகொண்டு மீண்டும் தனது இசை பயணத்தை ஆரம்பித்தார்.
‘ஐலண்ட்ஸ் ரெக்கோர்ட்ஸ்’ அணுசரணையுடன் முதல் தடவையாக முழு ஆல்பமொன்றை வெய்லர்ஸ் உருவாக்கினர். தீயைப் பிடி (Catch a Fire) என்ற பெயரிலேயே அந்த ஆல்பம் வெளிவந்தது. பிரித்தானியா, அமெரிக்கா சென்று இசை நிகழ்ச்சி நடாத்த இந்த ஆல்பம் உதவியது.
பின்னர் அதேயாண்டு பர்னின் (Burnin) என்ற ஆல்பமும் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தில் வரும் ‘I shot the Sheriff’’, ‘Get Up Stand UP’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமாகின. இந்தப் பாடல்கள் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை மார்லி பெற்றுக்கொண்டார். இவரது பாடல்களை இன வேறுபாடின்றி கேட்கத் தொடங்கினர்.
‘Get Up Stand UP’ பாடலில் தங்களது உரிமைகளுக்காக எழுந்து போராடுங்கள் என கருப்பின மக்களைப்பார்த்து அரைகூவல் விடுக்கிறார்.
உரிமைகளுக்காக எழுந்த பாடல்கள் :
எழுந்து நில்லுங்கள்
உங்களது உரிமைகளுக்காக…
வானத்திலிருந்து கடவுள் வந்து
அனைத்து துக்கங்களையும் எடுத்துக்கொண்டு
சந்தோஷத்தை வழங்குவாரென்று நீங்கள் அனைவரும் நினைப்பீர்கள்…
ஆனால்,
வாழ்க்கையின் பெறுமதியை புரிந்துகொண்டீர்களானால்
உங்களது வாழ்க்கையை இந்த பூமியில்தான் தேடுவீர்கள்…
அப்போது நீங்கள் வெளிச்சத்தைக் காண்பீர்கள்…
அதனால் எழுந்து நில்லுங்கள்… எனத் தொடரும் அப்பாடல் மூலம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உலகம் பூராகவும் உள்ள ரசிகர்களை அவர்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்கவைக்க மார்லியால் முடிந்தது.
1975இல் பொப் மார்லியும் வெய்லர்ஸூம் (Bob Marly & the Wailers) என குழுவின் பெயர் மாற்றப்பட்டது. இந்தக் குழு ரெகே இசையை உலகம் பூராகவும் கொண்டுசேர்க்க கடுமையாக முயற்சி செய்தது. இதன் பலனாக ‘No Woman No Cry’ என்ற பாடல் வெளியாகி மிகவும் பிரபலமானது.
உலகம் முழுவதும் கண்ணீர் சிந்தும் கோடிக்கணக்கான பெண்களுக்காக அவர் இந்த பாடலை இயற்றி பாடினார்.
தான் ஒரு கலப்பினத்தைச் சேர்ந்தவன் என தெரிந்திருந்தும் மார்லி தன்னை ஆபிரிக்க வம்சாவளிசைச் சேர்ந்த கருப்பினத்தவன் என்று அறிமுகம் செய்து அடையாளப் படுத்திக்கொள்ள விரும்பினார்.
வெள்ளையர்களால் அடிமைத்தனமாக கருப்பினத்தவர்கள் அடிமைப் படுத்தப்படுகின்றமையைக் கண்டதனாலேயே மார்லி இந்த முடிவுக்கு வந்தார். கருப்பு, வெள்ளை, என்ற அனைத்து இன மக்களும் மனிதன் என்ற அடிப்படையில் ஒன்று சேர்வதே மார்லியின் கனவாகும்.
நிறவெறிக்கு எதிராக மார்லி:
ஜமேக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய மார்க்ஸ் கிரேவின் அரசியல் செயற்பாடுகளுக்கு மார்லி உதவினார்.
ஆபிரிக்காவில் மட்டுமன்றி உலகம் பூராகவும் வாழும் நீக்ரோ மக்களின் வளர்ச்சி குறித்து மட்டுமன்றி ஆபிரிக்கா நீக்ரோ மக்களின் சுதந்திர பூமியாக விளங்கவேண்டும் என்ற இலக்குடன் பொப் மார்லி செயற்படத் தொடங்கினார்.
உலக நாடுகளில் இன்னல்களை அனுபவித்துவரும் நீக்ரோ மக்களின்
விடிவிற்காக பாடல் ஒன்றையும் பொப் மார்லி பாடியுள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட வரலாற்றை
அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது…
இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட கருப்பின மக்களின் வரலாற்றை
அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது…
‘Zion Train’ என்ற பாடலில் கருப்பின மக்களில் வரலாறு தொடர்பாக பாடியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ‘Black Surviour’, ‘Bady Lon System’ ஆகிய பாடல்கள் மூலம் வெள்ளையர்கள் கருப்பின மக்களின் உழைப்பையும் உரிமைகளையும் சுரண்டுகின்றனர் என்றும், அதற்கு எதிராக எழவேண்டும் என்றும் பொப் மார்லி மக்களிடம் விண்ணப்பித்துள்ளார்.
மரணப் படுக்கையில் பொப் மார்லி:
புற்றுநோயால் இறந்த பொப் மார்லி தன்னுடைய மரணக் கட்டிலில் இருந்தபோது மகனிடம், “பணத்தால் வாழ்க்கையை வாங்க முடியாது” என்றும் “On your way up, take me up. On your way down, don’t let me down.” என்றும் தெரிவித்தார். 1981ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி பொப் மார்லி தனது 36ஆவது வயதில் அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் மரணமடைந்தார்.
ஜமேக்கா மக்கள் பொப் மார்லியை ஒரு விடுதலைப் போராளியாகவே என்றும் கருதினர். 1981ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இறுதிக் கிரியை அரச மரியாதையுடன் நடத்தப்பட்டு மார்லியின் பிறந்த இடமான நைன் மைல் பகுதியில் உடல் புதைக்கப்பட்டது. அத்தோடு, அவரது பிறந்த தினமான பெப்ரவரி 6ஆம் திகதி ஜமேக்காவில் தேசிய விடுமுறை தினமாக அரசால் 1990ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஜமேக்காவின் நைன் மைல் பகுதியில் பொப் மார்லி வாழ்ந்துவந்த வீடு பின்னர் மார்லியின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
2018-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ் வெளியிட்ட தகவலின்படி, அதிக வருமானம் ஈட்டும் இறந்த பிரபலங்களின் பட்டியலில் பொப் மார்லி ஐந்தாவது இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் பொப் மார்லியின் ஆல்பங்கள் 75 மில்லியனுக்கும் அதிகமாக விற்றுள்ளமை பொப் மார்லியின் இசைத்திறமைக்கு வரலாற்றுச் சாட்சியாகும்.