கவிஞர் நா.தேவதாசன் அவர்களின் „திருக்குறள் கவிதைகள்’நூல் வெளியீட்டு விழா!… ஏலையா க.முருகதாசன்.
ஜேர்மனி, இராட்டிங்கன் நகரில் கடந்த 11.02.23 அன்று,கவிஞர் திரு..நா.தேவதாசன் அவர்களால் எழுதப்பட்ட திருக்குறள் கவிதைகள் என்ற நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
திருக்குறள் அதிகாரம் ஒன்றான கடவுள் வாழ்த்திலிருந்து அதிகாரம் நூற்றிமுப்பத்தி மூன்று ஊடல் உவகை வரையுள்ள குறள்களுக்கு இந்நூலில் கவிஞர் திரு.நா.தேவதாசன் அவர்கள் இரண்டடிக் குறள் வழியில்,வாசிப்போருக்கு எளிதில் பொருள் விளங்கக் கூடியதாக சிறப்பாக எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருக்குறளுக்கு பொருள் எழுதியோர் பலருண்டு.முதல் பொருள் எழுதிய பரிமேலழகரிலிருந்து டாக்டர் மு.வரதராசன், கலைஞர் கருணாநிதி எனப் பலரைச் சொல்லலாம்.
இவர்கள் அனைவரும் குறள் வரிகள் எதனைச் சுட்டிக்காட்டியதோ அதன் மையக் கருத்திலிருந்து விலகாமல் அவரவர் அதற்கான பொருளைச் சுட்டி நிற்கும் வார்த்தைகளைக் கையாண்டு எழுதியிருந்தார்கள்.
கவிஞர் திரு.நா.தேவதாசன் அவர்கள்,இவர்கள் அனைவரிலிருந்தும் வேறு;பட்டு,சிந்தித்து இப்படியும் எழுதலாம் என ஒரு புதிய வழியில் தனித்துவமிக்கதாக எழுதியிருப்பது பாராட்ட வேண்டிய ஒரு முயற்சியாகும்.
இந்நூலில் உள்ள குறள்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கையில்,திருவள்ளுவர் எவ்வாறு இரண்டடியில் பொருளுணர்த்தலாம் எனத் தனது குறள்கள் மூலம் ஒரு எழுத்துப் புரட்சி செய்தாரோ, அதைப் போன்று இந்நூலாசிரியரும் இன்றைய சமகாலத்தில் ஒரு எழுத்துப் புரட்சியைச் செய்துள்ளார் என்பதைத் துணிந்து சொல்லலாம்.
இத்தகு நூலொன்று தமிழ்நாட்டில் வெளிவந்திருந்தால் அங்கு இந்நூலின் தாக்கமே வேறாக இருந்திருக்கும்.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்க் கவிஞர் ஒருவர் எழுதிய இந்நூலைப் பெருமிதப்படுத்தும் வகையில் நாம் கொண்டாட வேண்டும்.
மண்டபநிறை சபையோர் முன்னிலையில் வெளியிடப்பட்ட இவ்விழா திருமதி.ஈஸ்வரி தேவதாசன்,திருமதி.புனிதாம்பாள் ஞானசம்பந்தன் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பித்து,அகவணக்கம் எனத் தொடர்ந்து திருமதி.சாந்தமலர் இரத்தினசிங்கம் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து,செல்வி.சுபைதா இரவீந்திரநாதன் அவர்களின் வரவேற்புரை,திரு.அம்பலவன் புவனேந்திரன் அவர்களின் ஆய்வுரை,திரு.செல்வகுமாரன் அவர்களின் வெளியீட்டுரை,திரு.நயினை விஜயன் கௌரவ விருந்தினர் உரை,திரு.ஏலையா க.முருகதாசன்,திரு.சிறீஜிவகன்
ஆகியோரின் சிறப்புரைகள்,திரு.வ.மண் சிவராஜா திரு.ந.கதிர்காமநாதன் ஆகியோரின் வாழ்த்துரைகள் நூலாசிரியரின் நன்றியுரை என உரைகள் இடம்பெற்றிருந்தன.
One Comment