கவிதைகள்
திருவிளக் கேற்றிடும் கார்த்திகைக் காலம்!…. ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
மாலயன் மருளது போக்கிய காலம்
மலரடி திருமுடி உணர்த்திய காலம்
தேவரும் தெரிசனம் கண்டநற் காலம்
திருவிளக் கேற்றிடும் கார்த்திகைக் காலம்
கந்தனை வந்தனை செய்திடு காலம்
கனற்பொறி குழந்தையாய் ஆகிய காலம்
நொந்திடு அடியவர் பவவினை போக்கிட
செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்
ஒளிர்வளர் விளக்காய் ஒளிர்ந்திடும் காலம்
தெளிவதைக் கருத்தி லமர்த்திடும் காலம்
பொலிவுடன் பேரொளி தோன்றிய காலம்
போற்றியே தீபத்தை ஏற்றுவோம் வாரீர்
ஆண்டவன் நினைப்பை அகற்றிய ஆணவம்
தாண்டவம் தகர்ந்த தகைவுடைக் காலம்
நீண்டிடும் மாயையை நிர்மல மாக்கிய
நிலைபெறு சக்தியை உணர்த்திய காலம்
நெறிபிறள் நினைப்பினை நீக்கிய காலம்
அறிவெனும் உண்மையை அமர்த்திய காலம்
பொறிபுலன் சிவனருள் புகுத்திய காலம்
போற்றிடும் கார்த்திகை பொன்னிகர் காலம்
ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிரும்
அனைவரும் தீபத்தை நாடியே நிற்பார்
வீதிகள் வீடுகள் ஒளியினை நல்கும்
விளக்குகள் ஏற்றிடும் சிறப்புடைக் காலம்
ஒளியிலே இறையினை இருத்திடும் காலம்
உவப்புடன் தீபத்தை ஏற்றிடும் காலம்
மனவிருள் போக்கிட வந்திட்ட காலம்
மண்ணிலே மலர்திட்ட மாண்புடைக் காலம்
அண்ணா மலையினை அகத்தில் அமர்த்திட
உண்ணா முலையான் ஒளிர்ந்திட்ட காலம்
அருட் பெரும்ஜோதி தனிப்பெருங் கருணை
அளவிலா ஆற்றலை அருளிய காலம்
மரத்தில் மறைந்த மாமத யானையை
பரத்தில் மறைந்த பார்முதல் பூதத்தை
இருத்தி மனத்தில் ஏற்றுவார் தீபத்தை
கொளுத்துவார் சொக்கப் பனையைக் கோவிலில்
மாதொரு பாகனை மனமதில் இருத்தி
மங்கலம் பொங்கிட தீபத்தை யேற்றி
தீமைகள் அகல கார்த்திகை விளக்கை
சிறப்புடன் ஏற்றிடச் சேருவோம் வாரீர்
விஞ்ஞான உண்மை விளக்கினில் இருக்கு
மெஞ்ஞானம் அதனுள் வியாபித்தே இருக்கு
ஒளியினை அறிவாய் கொண்டிடும் வேளை
ஒளியினை உணர்வாய் ஆக்கிடும் சமயம்
இருளது சூழின் எதுவுமே தெரியா
இருளது இருப்பு மருளவே வைக்கும்
ஒளியது வந்தால் தெளிவது பிறக்கும்
தெளிவது சிவமாய் ஒளியென ஒளிரும்
அகமதில் இருளை அகற்றிட வேண்டும்
அருளெனும் ஒளியை இருத்திட வேண்டும்
அருளெனும் ஒளியை அளிப்பது இறையே
இறையினை எண்ணி ஏற்றுவோம் விளக்கினை.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா