கவிதைகள்

பொற்புடை இறையினைப் பற்றியே பிடித்திடு!… ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

தர்மத்தின் வாழ்வுதனைச்
சூது கவ்வும்
தர்மமே தலைநிமிர்ந்து
சூது மாழும்
நல்லவைகள் நல்லவர்கள்
யாரும் நோக்கார்
நாளாகும் வேளையவர்
உணர்ந்தே  கொள்வார்
 
கொள்வார்கள் பலருள்ளும்
சிலரே வாழ்வில்
தெள்ளியராய் உள்ளமுடன்
சிறந்தே நிற்பார்
கள்ளமுடை நினைப்பதனை
மனத்தில் கொள்வார்
பள்ளமதை நோக்கியே
பார்த்தே நிற்பார்
 
நிற்பார்கள் பலபேரும்
நிலைத்தே நில்லார்
நெஞ்சமெலாம் இருளாக்கி
கரந்தே நிற்பார்
கற்பதையும் கருத்தாக
கணக்கிற் கொள்ளார்
கயமையினை முதலெனவே
வரவில் வைப்பார்
 
வைப்பதனை மனமிருத்தி
மகிழ்வு கொள்வார்
மற்றவரின் துயரெதையும்
நினைவில் வையார்
கண்ணீரின் நிலையதையும்
கருத்திற் கொள்ளார்
கருணையதை இருப்பதையும்
நினைத்தே பாரார்
 
பாராமல் பலவற்றைப்
பார்த்தே நிற்பார்
பாதகமாய் இருக்குதென்று
மனத்தே கொள்ளார்
நீதியற்ற செயலென்று
நினைக்க மாட்டார்
நிட்டூரம் நெஞ்சத்தில்
நிறைத்தே நிற்பார் 
 
நிற்பார்கள் நிரந்தரமாய்
நிற்க மாட்டார்
நீளுகின்ற வாழ்வென்று
நினைத்தே நிற்பார்
நினைக்காமல் நீள்வாழ்வு
தொடரா நிற்கும்
நெஞ்சடைத்துக் கண்செருகி
நிற்பார் மண்ணில்
 
மண்ணிலே நல்லவண்ணம்
வாழ்ந்திட  வைத்திட
எண்ணியே மொழிந்திட்ட 
இன்மொழி மறந்திட்டோம்
இறைவனை இகழ்ந்துமே
இரக்கத்தைத் துறந்துமே
இருந்திட்ட பயனதே 
இறுதியில் தெரியுதே 
 
 
கடவுளை நினைந்திடு
கடமையைச் செய்திடு
கருணையை இருத்திடு
கயமையை ஒழித்திடு
கற்பவை கற்றிடு
கசடற நின்றிடு
பொற்புடை இறையினைப்
பற்றியே பிடித்திடு  !
 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
        மெல்பேண் … அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.