குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம்… பெண்கள் மது அருந்துவது காரணமா?
போலந்தில் ஆளும் கட்சித் தலைவர் குறைந்துவரும் பிறப்பு விகிதத்திற்கு இளம் பெண்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே காரணம் என்று கூறியிருக்கிறார்.
அந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் பெண் பிரபலங்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
73 வயது ஜரோஸ்லாவ் காசின்ஸ்கி (Jaroslaw Kaczynski) யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவர் என்றும் ஆண் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர் என்றும் குறைகூறல்கள் எழுந்துள்ளன.
25 வயது வரை இளம் பெண்கள் ஒரே வயதுடைய ஆண்கள் அளவுக்கு மது அருந்தினால் பிள்ளைகள் பிறக்காது என்று சென்ற சனிக்கிழமை (5 நவம்பர்) அவர் கூறினார்.
ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகச் சராசரியாக 20 ஆண்டுகள் ஆகும் என்றும் பெண்களுக்கு 2 ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் சொன்னார்.
போலந்துப் பெண்கள் நிதிக் காரணங்களாலும் கருக்கலைப்புக் கட்டுப்பாடுகள் தொடர்பான அச்சத்தாலும் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குவதாக விமர்சகர்கள் கூறினர்.