கவிதைகள்
சொல்ல மறந்த காதல்!…. ( கவிதை ) ….. இவன்_பாவலன்.
பள்ளி பருவத்தில் பதின்ம
வயதில் துள்ளி திரிந்த
காலமதில்
கண்ணில் பட்ட பாவையர்
எல்லோரையும் காதலிக்க
தோன்றும்
தினமொரு காதல் திண்ணையில்
உட்கார்ந்து இருந்து வீதியை
நோக்கையில்
வேலி இடையே தெரிந்தவள்
பின்னால் போக மனம் ஏகும்
வீட்டில் என்ன திடீரென்று வெளியே ஓடுகிறாய்
என கேட்டு விடுவார்களோ
என்ற பயத்தில் கால்
தட்டி தடுமாறும்
பதின்ம வயது என்பது
அடுப்பில் கொதிக்கும்
பால் போன்றது
காலமும் நகர்ந்து மனம் பக்குவம்
அடைந்து
பதின்மம் கடக்கும் போது
உண்மை காதல் பூக்கும்
அந்த காதல் ஓடும் நதி
போல் திசை ஒன்றாக இருக்கும்
நதி ஓடும் திசை மாறி வந்த திசை நோக்கி திரும்பி ஓடுவதில்லை
ஒருத்தியை மனம் மனனம் செய்யும்
இரவு பகலாக அவள் நினைவுகள்
நெஞ்சில் அலை அலையாக வந்து
போகும்
பசி இல்லை தூக்கம் இல்லை
அவள் வரவுக்காக
வீதி வெளி கண் விழித்து இருக்கும்
கவிதைகள் கரு கொள்ளும்
தினமும் எண்ணங்கள்
பக்கங்களை நிரப்பும்
யார் கண்ணிலும் பட்டு
விடாமல்
பொக்கிசமாய் பதுக்கப்படும்
தினமும் அவள் பின்னால்
மனமும் உடலும் அலையும்
இன்று சொல்லி விடலாம்
என்றால் மனதில் துணிவு
இல்லை
நாளை சொல்ல நினைத்து போகையில் நாலு நண்பிகள்
கூட வந்து தொலைத்து விடுவார்கள்
காலமதில் ஏதும் நிலை இல்லை
காலம் தந்த நகர்வால் சொல்ல
நினைத்த காதல் சொல்லாமல்
சொதப்பி விட்டது
அவளுக்கு தெரியும் தன் மீது கொண்ட காதல்
ஏனோ அவள் அமைதியாக இருந்து விட்டாள்
இன்று அவள் எங்கோ மனதின் மூலையில் அந்த காதலை பாரமாய் ஒதுக்கி வைத்து உள்ளாள்
சொல்ல நினைத்து சொல்ல மறந்த காதல்
மனதுக்கு ஒரு சந்தோச வலி
அதை தினமும் சுமப்பதால்…