பலதும் பத்தும்

கள்ளச்சந்தையில் மது விற்பனை பற்றி எஸ்பியிடம் புகார் பார்வையற்றவரை தாக்கிய 3 காவலர்கள்1

கள்ளச்சந்தையில் மது விற்பனை பற்றி புகார் கூறிய பார்வையற்றவரை தாக்கிய 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டி பகவான்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சங்கர் (29). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் கவரப்பட்டி பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாகவும், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அவ்வழியே செல்லும் பெண்களுக்கு இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தனது செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.

அந்த செல்போன் நம்பரை விராலிமலை போலீசாரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியதையடுத்து, பெண் காவலர் ஒருவர் தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு பணியில் இருந்த காவலர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். உடனடியாக முதல் நிலை காவலர் செந்தில் மற்றும் காவலர்கள் பிரபு, அசோக்குமார் ஆகிய 3 பேரும் நேராக பகவான்பட்டி சென்று அங்கிருந்த சங்கரை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் எஸ்பி ஆபீசுக்கே புகார் கூறும் அளவுக்கு நீ பெரிய ஆளாகி விட்டாயா என்று கூறி தாக்கி உள்ளனர். பின்னர் வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வெளியில் இருந்த மரத்தில் சாய்த்து வைத்து லத்தியால் அடித்ததாக கூறப்படுகிறது.

மயக்கமடையும் நிலைக்கு வந்வரை வீட்டிற்கு போகும்படி அனுப்பியுள்ளனர். ஆனால், போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே அவர் படுத்து மயங்கியுள்ளார். மகனை தேடி விராலிமலை காவல் நிலையம் வந்து விசாரித்த தாய் மாரியாயியிடம் அவர் சென்று விட்டதாக காவலர்கள் கூறியுள்ளனர். அப்போது ஒருவர் சங்கரை காவலர்கள் அடித்ததை கூறியதோடு நடக்கமுடியாமல் அவர் சென்ற வழியை காட்டியுள்ளார். சிறிது தூரத்தில் மயங்கிநிலையில் கிடந்த சங்கரை அவ்வழியாக சென்றவர்கள் உதவியுடன் மீட்டு  அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதை தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளியை தாக்கிய காவலர்கள் செந்தில், பிரபு, அசோக்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.