கவிதைகள்
மதங்கடந்த மாபெரும் தைப்புத்தாண்டே மலர்க!… ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
ஆண்டு முழுதும் கழனிவாழ் உழவர் தொட்டு அனைவர்க்கும்
ஆண்டவனாய் நின்று எம்மை காத்து நிற்கும் ஆதவன் நீண்ட வானில் நீந்திவந்து நாம் நிலைத்திட அருள்பவன் தீண்டாமை கூடாதெனக்கூறி சுட்டெரிக்கும் தூயவன் நட்ட கல்லை தெய்வமென்னு நாலு பூக்கள் சூடாமலே தொட்டால் தீட்டென சட்டம் போட்டாலதற்கு அடங்காமலே எட்டாத தூரத்தில் இருக்கிறான் சமமாகவும் என்பதாலே கிட்டுவான் ஒளிக்கதிரால் நம்மைத் தொட்டும் மகிழ்ந்திட மதங்கடந்து இனங்கடந்து மாநிலத்தார் மகிழ்ந்திட இதமாயிருப்பவன் இங்கிருக்கும் இறைவன் அல்லவா பதமாய் இணைந்து பாரிலுள்ளார் தொழுதும் நிற்கிறார் நிதமும் கொண்டாடுவார் அறுவடைக்கு துணைநிற்பதால் தமிழராய் நாம் ஒன்றினைய தக்க ஒரு விழா தந்தவன் அமிழ்தினும் இனிய பொங்கலை உண்டுமகிழ வைத்தவன் கமழும் இன உணர்வாலே தமிழராய் நம்மை இணைத்தவன் எமக்கு இப்புவியில் ஏற்றதோர் புத்தாண்டை கொடுத்தவன் பொங்கலொ பொங்கலென்ற போற்றிப் புகழ் பாடுவோம் மங்கலமாய் அனைவரும் ஒன்றாய் ஆதவனை வணங்குவோம் எங்களுக்கும் காலம் வருமென்று இன்பமாய் வாழுவோம் பங்கமேதும் வந்திடாதென பகலவனைத் தொழுதிடுவோம்! -சங்கர சுப்பிரமணியன்.