கட்டுரைகள்

பாரதி தரிசனம்!…. அங்கம் 12 …. முருகபூபதி.

பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில்

எதிர்நோக்கப்படும் சவால்கள் !

குயில் கூவுமா…? கத்துமா…?

முருகபூபதி.

“ மகாகவி பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம் , ஓசை நயம் , பொருள் ஆகியவற்றை புரிந்துகொண்டு வேற்று மொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது “ என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் சுதா ஷேசய்யன் தெரிவித்திருப்பதாக அண்மையில் சென்னை தினமணி இணைய இதழில் படிக்க நேர்ந்தது.

அந்த இணைப்பினை ஒரு இலக்கிய சகோதரி எனக்கு அனுப்பியிருந்தார்.

சென்னை ரயில்வேயில் முக்கிய பதவியிலிருக்கும் பூமா வீரவல்லி , பாரதியின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதன் தொகுப்பின் வெளியீட்டு அரங்கில்தான் மருத்துவர் சுதா ஷேசய்யன் மொழிபெயர்ப்பிலிருக்கக்கூடிய சவால்கள் பற்றி பேசியிருக்கிறார்.

பாரதி, பொருள் மயக்கம் தரக்கூடிய கவிதைகளையும் எழுதியிருப்பவர் என்பதை கடந்த அங்கத்தில் பார்த்தோம்.

அவ்வாறிருந்தும், தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத பலர் பாரதியின் கவிதைகளை தமது மொழிக்கு மாற்றியிருக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு பொதுவான ஊடகமொழியாக இருந்திருப்பது ஆங்கிலம்தான்.

சோவியத் நாட்டில் உக்ரேயினை தாய்மொழியாகக்கொண்டிருந்தவர் கட்டிடத் தொழிலாளி விதாலி ஃபுர்ணிக்கா. இவர் வேலை நேரத்தில் கிடைத்த மதிய உணவு வேளையில், அருகிலிருந்த நூலகம் சென்று படித்த புத்தகம் பாரதியின் கவிதைகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

அதில் ருஷ்யப்புரட்சி பற்றிய “ ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி “ கவிதையை படித்துவிட்டே, “ அடடா… எங்கள் தேசத்தில்

எப்போதோ நடந்த புரட்சி பற்றி தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு கவிஞர் பாடியிருக்கிறாரே, அவர் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவேண்டும், அவரது மொழியை கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆவலுற்று தனது வேலைத்தலத்தின் மேலிடத்தில் விசேட அனுமதி பெற்றுக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார்.

பின்னாளில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் பதிப்பாசிரியராகவும் இலங்கை – தமிழக – சோவியத் நட்புறவுக்கு இலக்கிய ரீதியில் பாலம் அமைப்பவராகவும் மாறினார்.

தமிழ் அறிஞர் மு. வரதராசனிடம் தமிழ் கற்று பின்னாளில் ஜெயகாந்தனின் சில படைப்புகளையும் ருஷ்யமொழிக்கு மாற்றினார். தனக்கு தமிழகப்பித்தன் என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டார். தமிழகம் எங்கும் சுற்றியலைந்து, பிறப்பு முதல் இறப்பு வரையில் என்ற நூலையும் ருஷ்ய மொழியில் எழுதினார். இந்நூலை தமிழ்நாடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தின் தமிழ்ப்பிரிவில் பதிப்பாசிரியரானார். பாரதி பிறந்த நூற்றாண்டு வந்தவேளையில் ( 1982- 1983 ) சோவியத்தில் பாரதி நூற்றாண்டை கொண்டாடும் குழுவிலும் அங்கம் வகித்தார். அத்துடன் உக்ரேய்ன் மகாகவி தராஷ் ஷெவ்சென்கோவின் நூற்றாண்டையும் முன்னின்று நடத்தினார்.

பாரதி பிறந்த நூற்றாண்டு காலத்தில் ஃபுர்ணீக்கா சோவியத் ஆராய்ச்சியுலகில் பாரதி என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையின் தொடக்கம் இவ்வாறு அமைந்திருந்தது.

” இந்திய மகாகவியான சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தின நூற்றாண்டில் பாரதி பற்றிய சோவியத் யூனியனில் வெளிவந்துள்ள அவரது படைப்புக்களையும் பரிசீலிப்பது முற்றிலும் பொருத்தமேயாகும். மாஸ்கோவிலும் லெனின்கிராடிலும் உள்ள மேற்கல்வி நிலையங்களில் திராவிடவியல் அறிஞர்களைப் பயிற்றுவிக்கும் முறையான வகுப்புக்களைப் புகுத்தியதன் காரணமாகவே, பாரதி பாரம்பரியம் பற்றிய ஆராய்ச்சியும் சாத்தியமாயிற்று” ( ஆதாரம் – சோவியத் நாடு இதழ் )

இக்கட்டுரை வெளியான இதழில் சோவியத் ஓவியர் மிகையீல் பெதரோவ் என்பவர் வரைந்த மகாகவி பாரதி ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அந்தவகையில் பாரதி அங்கிருந்த கல்வியாளர்கள், அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,

படைப்பாளிகளிடம் மட்டுமன்றி ஓவியர்களிடத்திலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பது புலனாகிறது.

ஒரு கட்டிடத் தொழிலாளியான விதாலி ஃபுர்ணிக்காவை , தமிழ் ஆர்வலராக, மொழிபெயர்ப்பாளராக, பதிப்பாசிரியராக மாற்றியவர் யார்..?

பாரதியார்தான் !

அத்தகைய பாரதியின் கவிதைகளை பிறமொழிக்கு மாற்றுவதில் சிரமங்கள் இருக்கின்றன என்று துணைவேந்தர் மருத்துவர் சுதா ஷேசய்யன் சொன்னதும் வழக்கமான எனது தேடுதலில் ஈடுபட்டேன்.

மொழிபெயர்ப்பென்பது சவால்கள் நிரம்பியதுதான். சந்தேகமில்லை. தவறான மொழிபெயர்ப்பினால், நீதிமன்றங்களில் தவறான தீர்ப்புகளும் வெளிவந்துள்ளன.

கண்ணகி காதையில், பாண்டிய மன்னன் “ கொண்டு வா.. “ என்றதை “கொன்றுவா… “ என சேவகர்கள் புரிந்துகொண்டனர் என்றும் ஒரு கதையளப்பு இருக்கிறது !

Understand என்ற ஆங்கிலச்சொல்லை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தால் எத்தகைய விபரீதம் வருமோ, அவ்வாறே, எனது மண் என்பதை My Soil என்று மாற்றினாலும் சிரிப்பும் வரும்.

கனடாவில் வதியும் இலக்கியவாதி அ.முத்துலிங்கம் குமுதம் தீராநதியில், ‘எண்ணாமல் துணிக’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு தொடர்பாக அருமையான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

அதில் அவர் இரண்டுபேரின் கருத்துக்களை பதிவுசெய்கிறார். ஒருவர் – ஆங்கிலத்தில் நவீன தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து அனுபவம் பெற்றவர். அவரிடம் மொழிபெயர்ப்புகள் வெற்றிபெற என்ன செய்யவேண்டும் ? என்று கேட்கிறார்.

பதில்:-

“ தமிழ் வார்த்தை அடுக்கு ஆங்கில வார்த்தை அடுக்குக்கு எதிரானது. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதைத் தவிர்த்து அர்த்தத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ஆங்கில மரபுத்தொடரில் நல்ல பரிச்சயம் தேவை. எங்கள் மொழிபெயர்ப்புகள் அங்கேதான் சறுக்குகின்றன.”

ஒரு பேராசிரியர் முத்துலிங்கத்திற்கு அளித்த பதில் இவ்வாறு அமைந்திருக்கிறது:- “ ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது பரிச்சயமானதாகவும் அதேசமயம் அந்நியமானதாகவும் இருக்கவேண்டும். உண்மையான மொழிபெயர்ப்பு என்பது கருத்தை மட்டும் கடத்துவது அல்ல. ஒரு மொழியின் அழகையும் கடத்துவதுதான். மொழிபெயர்ப்பில், இலக்கு மொழி உயிர்த்துடிப்புடன் வரவேண்டும் என்றால் மொழிபெயர்ப்பாளரிடம் ஆழ்ந்த ஆங்கிலப்புலமையும், கற்பனையும் இருந்தாலே சாத்தியமாகும்”

ஜெயமோகன் சொல்லியிருப்பதையும் இங்கே கவனிக்கவும்:

“நல்ல மொழிபெயர்ப்பானது அழகான மொழிபெயர்ப்பு அல்லது பயனுள்ள மொழிபெயர்ப்பு என இருவகைப்படும். ஒரு படைப்பிலக்கியம் மொழியாக்கம் செய்யப்பட்டால், அதன் படைப்பூக்கத்தின் பெரும்பகுதியை நம்மில் கொண்டு வந்து சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அம்மொழியாக்குநர் செயல்பட்டிருக்கவேண்டும்” (நூல்: எதிர் முகம் – இணைய விவாதங்கள்)

இலங்கையில் எனது மூன்று இலக்கிய நண்பர்கள் பாரதியாரை சிங்கள மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இவர்களின் பணியும் பாரதி பிறந்த நூற்றாண்டு காலத்திலேயே ( 1982 – 1983 ) அங்கே முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் கண்டி கல்ஹின்னையில் தமிழ் மன்றம் என்ற அமைப்பின் ஊடாக பல நூல்களை வெளியிட்டிருக்கும் ஹனிபா, பாரதியிடத்தில் மிகுந்த பற்றுள்ளவர். தினகரனிலும் Observer இலும் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கை வானொலியிலும் நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர்.

இலங்கையில் பாரதி நூற்றாண்டு காலப்பகுதியில் சிங்கள மக்கள் எளிதாகப்புரிந்துகொள்வதற்காக ஒரு சிறிய நூலை எழுதி தமது நண்பர் கே.ஜி. அமரதாசவிடம் வழங்கி அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

பாரதியை சிங்கள மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அவர் சிறுவயதில் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்திருந்தமையினால் தோன்றியிருக்கிறது.

அவர் பிறந்து வாழ்ந்த கண்டி கல்ஹின்ன பிரதேசம் சிங்கள மக்கள் செறிந்து வாழும் இடமாகும். அங்கு தமிழ்மன்றத்தை உருவாக்கி நீண்ட

காலம் இயங்கச்செய்து, பல நூல்களையும் வெளியிட்டிருக்கும் ஹனிபா, பாரதி நூற்றாண்டு காலம் அறிந்து செய்த சேவை முன்னுதாரணமிக்கது.

பாரதியின் பக்தராகவே வாழ்ந்திருக்கும் அவர், கல்ஹின்னையில் ஆரம்ப வகுப்பு படிக்கும்வேளையில், நான்காம் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் படித்த பாரதியின் கவிதை: “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்.” வகுப்பு ஆசிரியர் அதனை அந்த சிறுவயதில் அவரை மனப்பாடம் செய்யுமாறு தூண்டியதால், பாரதியை தொடர்ந்து கருத்தூன்றி பயின்றிருக்கிறார்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கருத்தியலும் அவருடைய மனதில் வித்தாகியது. உலகமெலாம் பரவச்செய்யும் அதேசமயம் அருகே வாழும் சிங்களச் சகோதரர்களுக்கும் பாரதியின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறவேண்டும் என்ற எண்ணக்கருவும் தோன்றியிருக்கிறது.

பாரதியை தொடர்ந்து பயின்று, எழுத்தாளராகியதும் பாரதி தொடர்பான கட்டுரைகளை வீரகேசரி, தினகரன், சிங்கப்பூர் தமிழ் முரசு முதலானவற்றில் எழுதினார்.

பாரதி நூற்றாண்டின்போதாவது ” சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம் ” என்று பாடிய பாரதியைப்பற்றி சிங்களம் தெரிந்தவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு பாரதியை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் பாரதியின் சுருக்கமான வரலாற்றை முதலில் தமிழில் எழுதியதாகவும் பின்னர் அதனை தமது நண்பரும் தமிழ் அபிமானியும் மொழிபெயர்ப்பாளருமான கே.ஜி.அமரதாசவிடம் வழங்கி சிங்களத்தில் மொழிபெயர்த்ததாகவும் பதிவுசெய்திருக்கிறார்.

இவ்விடத்தில் கே.ஜி. அமரதாச பற்றிய சிறிய அறிமுகத்தையும் தரவேண்டியிருக்கிறது. இவர் இலங்கை கலாசார திணைக்களத்தின் உயர் அதிகாரியாகவும் சாகித்திய மண்டல அமைப்பின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர்.

கொழும்பில் வெளியான அனைத்து தமிழ் தினசரிகளையும் அவர் ஒழுங்காகப் படித்தார். ஈழத்து இலக்கியவாதிகளுடன் நெருக்கமான நட்புறவைப்பேணியவர்.

பேராசிரியர் கைலாசபதி மறைந்தபோது, அவர் நினைவாக ஆயுபோவன் சகோதரரே என்ற தலைப்பில் அவருக்கு பிரியாவிடை

வழங்கும் அஞ்சலிக் கவிதையை வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியவர்.

தென்னிலங்கையில் மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலத்திலேயே தமிழ்மொழியை சுயமாகக்கற்றவர். லேக்ஹவுஸ் வெளியீட்டுப்பிரிவில் பல வருடங்கள் பணியாற்றியவர். ஆரம்பத்தில் ஆனந்தவிகடன், கல்கி போன்ற தமிழக இதழ்களை விரும்பிப்படித்திருக்கும் அமரதாச, ஈழத்து இலக்கிய சிற்றேடுகளையும் ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கியங்களையும் மண்வாசனை கமழும் பிரதேச இலக்கியப்படைப்புகளையும் ஆர்வமுடன் படித்து, பல தமிழ் எழுத்தாளர்களின் நண்பரானார்.

சரளமாக தமிழில் பேசும் இயல்பும் இவருக்கிருந்தமையால் பல தமிழ் எழுத்தாளர்கள் அவர் கொழும்பில் பணியாற்றிய கலாசார திணைக்களத்திற்கு அடிக்கடி சென்றனர்.

சில சிங்கள இலக்கியப்பிரதிகளையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அதேசமயம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியிலான கவிதைகளை சிங்களத்திற்கும் வரவாக்கியிருக்கிறார். இவ்வாறு பிறமொழி இலக்கியங்களை தமது தாய்மொழியாம் சிங்களத்திற்குத் தந்துள்ள தாம், சகோதர மொழியான தமிழ் இலக்கியங்களையும் சிங்கள மக்களுக்கு தரவேண்டும் என்பதில் பெருமைப்படுவதாகவும் சொன்னவர்.

இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய மற்றும் ஒரு தமிழ் இலக்கிய அபிமானியான ரத்ன நாணயக்காரவும் அமரதாசவும் இணைந்து பாரதியின் சில கவிதைகளை சிங்களத்திற்கு மொழிபெயர்த்தனர்.

காலி ரிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் மாணவரான ரத்ன நாணயக்கார, தாம் பாரதியின் கவிதைகளில் பேரார்வம் கொள்வதற்கு மூல காரணம் தமிழகப்பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் என்று குறிப்பிட்டுள்ளார்.

1974 இல் ‘ எதர சிட லியன பெம் கவி” என்ற நூலை எழுதியிருக்கும் ரத்னநாணயக்கார, பாப்லே நெருடா, மாயகவஸ்கி ஆகியோரின் கவிதைகளை சிங்களத்திற்கு தந்திருப்பவர். அத்துடன் இஸ்ரேலிய, செக்கஸ்லவாக்கிய, ருஷ்ய சிறுகதைகளையும் சிங்களத்தில் மொழிபெயர்த்திருப்பவர்.

சிங்கள திரைப்படச்சுவடிகள், தொலைக்காட்சி நாடக வசனச்சுவடிகளும் எழுதியிருக்கும் ரத்னநாணயக்கார, தொலைதூரத்திலிருந்து எமக்கு கிடைத்தவற்றை மொழிபெயர்த்திருப்பதுபோன்று அயலில் வாழும் தமிழ் இலக்கியத்தை சிங்களத்தில் தருவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கு சிறந்த முறையில் ஆக்கப்பட்ட தமிழ் – சிங்கள பேரகராதி எம் வசம் இல்லாதிருந்ததுதான் அடிப்படைக்காரணம் எனவும் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ( ஆதாரம்: வீரகேசரி வாரவெளியீடு டிசம்பர் 1982)

கே.ஜி. அமரதாசவும் ரத்ன நாணயக்காரவும் மொழிபெயர்த்திருந்த பாரதியின் கவிதைகள் சிங்களத்தில் பாரதி பத்ய என்ற பெயரில் வெளியானது. இதனை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்டது.

ரத்னநாணயக்காரவை ஒரு தடவை அவர் பணியாற்றிய தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் அலுவலகத்தில் சந்தித்தேன்.

அப்போது, , பிரேமா நந்தகுமார் ஆங்கிலத்தில் எழுதிய பாரதி பற்றிய நூல்தான் பாரதி மீதான ஆர்வம் தனக்குத் தோன்றியதற்கு காரணம் எனவும் சொன்னார்.

முனைவர் பிரேமா நந்தகுமார் பாரதியைப்பற்றி பல நூல்களை எழுதியிருப்பவர். பாரதியின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். அத்துடன் சுப்பிரமணிய பாரதி என்ற நூலையும் ஆங்கிலத்தில் வரவாக்கியவர்.

இவற்றையே இலங்கையில் ரத்னநாணயக்கார படித்துவிட்டு, பாரதியின் சில கவிதைகளை ஆங்கில மூலத்திலிருந்து சிங்களத்திற்கு பெயர்த்துள்ளார்.

இவ்வளவு தகவல்களையும் பாரதி தரிசனம் தொடரில் சொல்ல நேர்ந்தமைக்கு இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட துணைவேந்தர் மருத்துவர் சுதா ஷேசய்யன் அவர்களே காரணம்!

பொருள் மயக்கம் பொதிந்துள்ள பாரதியின் கவிதைகளை படிப்பவர்கள் தமது வாசிப்பு அனுபவத்திற்கு ஏற்ப அர்த்தம் கற்பித்துவிடுவார்கள்.

பாரதியின் காணி நிலம் வேண்டும் கவிதையில் வரும் பின்வரும் வரிகள் பலரை தலையை பிய்த்துக்கொள்ளச்செய்திருக்கிறது ! இந்த வரிகளை கூர்ந்து கவனியுங்கள்:

முத்துச் சுடர்போல –நிலாவொளி

முன்பு வரவேணும்; அங்கு

கத்துங் குயிலோசை – சற்றே வந்து

காதிற் படவேணும் –என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே –நன்றாயிளந்

தென்றல் வரவேணும்!

குயில் கூவுமா..? கத்துமா..? என்று பலரும் முன்னர் விவாதித்தனர்.

இந்தக் கவிதையைப் பொறுத்த மட்டும் –

காணி – தூணி – காணி – கேணி

பத்து – முத்து – கத்து – சித்த – பாட்டு – கூட்டு

காட்டு – பாட்டு.

முதலான சொற்கள் அடுத்தடுத்து வருகின்றன.

இங்கே, ”கத்தும் குயிலோசை தான் சரியாக அமையுமேயன்றி, ‘கூவும் குயிலோசை”’ அமையாதல்லவா? என்று ஒரு அறிஞர் முன்னர் சொல்லியிருந்தார்.

துணைவேந்தர் மருத்துவர் சுதா ஷேசய்யன், “ பாரதியின் பாடல்களை ஒவ்வொரு முறையும் படிக்க படிக்க வெவ்வேறு அர்த்தம் தோன்றும். பாரதியாரின் பாடல்களை வெறும் பாடலாகப் பார்க்க முடியாது. அது ஒரு வடிவம். “ என்றும் சொல்லியிருந்தார்.

பொருள்மயக்கம் நிரம்பிய பாரதியின் கவிதைகள் வாசிப்பதற்கு எளிமையாக இருந்தாலும், அவற்றின் வலிமை பிரமிக்கத்தக்கது என்பதுதான் உண்மை.

அத்தகைய உன்னத வரிகளை பிறமொழிகளுக்கு பெயர்ப்பதென்பது மிகவும் கடினமானதுதான்.

அதனாலும் பாரதி பிரமிப்புக்குரியவராகின்றார் !

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.