புதுமைப்பித்தனின் ஆற்றங்கரை பிள்ளையார்!… கிறிஸ்டி நல்லரெத்தினம்.
வாசிப்பு அனுபவம் – கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன்…
சிறுகதைக்கும் நாவலுக்கும் உள்ள வேற்றுமையை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் ஒரு நகரத்தை நடுநிசியில் நெருங்குகிறீர்கள். அப்போது ஒரு மின்னல் வெட்டி மறைகிறது. அந்த ஒரு கணத்தில் நீங்கள் பார்த்ததை…. அந்த பரந்த நகரத்தில் அந்த ஒரு கணத்தில் கண்ட ஒரு காட்சியை மட்டும் விபரிக்கிறீர்கள். அதுதான் சிறுகதை.
அதே நகரம்… அதே இரவு…. ஆனால் உங்கள் கையில் ஒரு டார்ச். அந்த வெளிச்சத்தை நகரின் பல இடங்களுக்கும் நகர்த்தி ஒவ்வொரு காட்சியாய் விபரிக்கிறீர்கள்… அங்கு வாழும் ஜீவன்களை தரிசிக்கிறீர்கள்….அதுவே நாவல்!” இக்கண்ணேட்டம் புரிந்திருக்கும் என எண்ணுகிறேன். ஆனால், இங்குதான் நவீன இலக்கியத்தின் பிதாமகனான புதுமைப்பித்தன் தனது “ஆற்றங்கரை பிள்ளையார் ” எனும் சிறுகதையில் வேறுபடுகிறார். மின்னல் வெட்டும் இரவில் கையில் டார்ச் விளக்குடன் நகரத்தை நெருங்கி கதை சொல்கிறார். சிறுகதைக்குள் ஒரு நாவலை அடக்கும் யுக்தியை இக்கதையை படித்ததும் வாசகர் புரிந்துகொள்வார். கதை ஊழிக்காலத்தில் தொடங்கி, இந்து சமய வழிபாட்டில் ஏற்பட்ட மாற்றங்களை உருவகப்படுத்தி ஒரு பிள்ளையார் சிலையை சுற்றி நடக்கும் மாற்றங்களை எம் கண்முன்னே துகிலுரிக்கிறார்.
கதையில் ஒட்டுமொத்தமாக இந்து சமயத்தில் நடக்கும் மாற்றங்களையே இப்படி உருவகக் கதையாக எழுதிவைத்தார். ஒரு புது வகையான எழுத்துமுறை இது. ஒரு கமராவை ஒரு கார் பார்க்கிங் தளத்தில் பொருத்தி அங்கு காலை முதல் மாலை வரை படம் பிடித்து அத்தொடர் காட்சிகளை பார்த்தால் எப்படியிருக்கும்.? அது போலவே ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் பிள்ளையாரைச் சுற்றி நடப்பவற்றை தம் பேனா மூலம் படம் பிடித்து சமர்ப்பிக்கிறார் புதுமைப்பித்தன். இப்படி ஆரம்பிக்கிறது கதை….. “ஊழிக் காலத்திற்கு முன்… ‘கி.மு.’க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு
எட்டாத சரித்திரத்தின் அடிவானம். அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது. கரையில் ஒரு பிள்ளையார். வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும் மணற்குன்றுகளும் அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.
ஒரு கிழவர் வந்தார். பிள்ளையாரின் கதியைக் கண்டு மனம் வருந்தினார். பிள்ளையாரைக் காப்பாற்ற அவருக்கு ஒரு வழி தோன்றிற்று. ‘சமூகம்’ என்ற ஒரு மேடையைக் கட்டி, அதன் மேல் பிள்ளையாரைக் குடியேற்றினார். அவருக்கு நிழலுக்காகவும், அவரைப் பேய் பிடியாதிருக்கவும், ‘சமய தர்மம்’ என அரச மரத்தையும், ‘ராஜ தர்மம்’ என்ற வேப்ப மரத்தையும் நட்டுவைத்தார். வெள்ளத்தின் அமோகமான வண்டல்களினால் இரண்டு மரங்களும் செழித்தோங்கி வளர்ந்தன…….” இப்படிப் போகிறது கதை. மரத்தின் மேல் பறவைகள் வந்து எச்சமிடுவதால் அழுக்கடைகிறார் பிள்ளையார். பின்னர் இரு கிழவர்கள் வந்து அவரை கழுவி சுத்தம் செய்கிறார்கள். பிள்ளையார் கண்திறந்து அவர்கள் பெயரை கேட்கிறார். ஒருவர் பெயர்: புத்தன். மற்றவர்: ஜீனன். அவர்களில் ஒருவர் கிளைகளை வெட்டி சுத்தம் செய்கிறார். நிழலில் இருந்த பிள்ளையார் வெய்யிலில் சுடுபட்டு ஆத்திரமடைந்து அவரைத் தூக்கி மேற்கே எறிகிறார். பின்னர் மரங்கள் வளர்ந்து அவற்றின் வேர்களிலும் விழுதுகளிலும் மாட்டிக்கொள்கிறார். இதன் பின்பு பல கிழவர்கள் வந்து பிள்ளையாருக்கு பல வசதிகள் செய்து கொடுக்க முனைந்தாலும் அவை அசம்பாவிதமாகவே முடிகின்றன. இயேசுநாதரையும் புதுமைப்பித்தன் விட்டுவைக்கவில்லை. அவர் வருகையை இப்படி எழுதிவைத்தார்…… “அவன் நீண்ட அங்கியும், கணுக்கால் வரை வரும் தோல் பாதரட்சையும் அணிந்திருந்தான். அவனது வலது கையில் கருப்புத்தோல் அட்டை போட்ட ஒரு பெரிய புத்தகமும் ஒரு நீண்ட சிலுவையும் இருந்தன. ” இந்து சமயத்தின் பரிணாம வாளர்ச்சியை மட்டுமல்லாது மாற்று
சமயங்களின் வருகையையும் அதனால் இந்து சமயத்திற்கு எற்பட்ட பாதிப்புகளையும் நாசுக்காக பல குறியீடுகள் மூலமாக சொல்லிப் போகிறார் இந்த ஞானி. இன்னும் பல கிழவர்கள் வந்து பல மாற்றங்களை அந்த ஆற்றங்கரையில் செய்து மறைகின்றனர்.
இப்படி முடிகிறது கதை:
“உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது. விச்வரூபமா? பிள்ளையார் விடுவிக்கப்படுவாரா? அல்லது அவர் கனவு நனவாகி, விடுவித்துக்கொள்ளுவாரா? இக்கதையின் ஆழத்தை புரிந்துகொள்ள பலமுறை இதை படித்தாகவேண்டும். ஒவ்வொருமுறையும் வாசகன் கதையின் ஒரு புதிய பரிமாணத்தை கண்டுகொள்வான். மிட்டாய் கடைக்குள் நுழைந்த சிறுவனின் மகிழ்ச்சி வாசகனுக்கு ஏற்படும் என்பதில் ஐயமில்லை! இக்கதையை மணிக்கொடி, 22-04-1934 இதழில் எழுதினார் என நம்பமுடியுமா? சிறுகதை, நாவல் என வரைவிலக்கணம் வகுத்து எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே காற்றிற்கும் கதைகளுக்கும் வேலியில்லை என எமக்கு உணர்த்திப்போனார் இந்த புரட்சிப்பித்தன். இவரின் 42 ஆவது வயதிலேயே ‘எனக்கும் கதையெழுது’ என இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டான். நவீன இலக்கியத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு நம்மை விட்டுப்பிரிந்த இப் படைப்பாளி விட்டுச் சென்ற வெற்றிடம் என்றும் நிரப்பப்படாது! ஆற்றங்கரை பிள்ளையார்.- புதுமைப்பித்தன் https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/may/28/aatrangaraip-pillaiar-puthumaippitthan-3420490.html
: “ஞானம்” டிசம்பர் 2021 இதழில் வெளிவந்தது “