கவிதைகள்
கல்வித் தெய்வமானவளே கருணையுடன் அருள்புரிவாய்!…. ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
கற்பனையாய் வருவாய் கவிதையாய் வருவாய்
காவியமாய் வருவாய் கருத்துப் பெட்டகமாவாய்
சொற்பதமாய் வருவாய் சுந்தரமாய் வருவாய்
நற்பதத்து நாயகியே நாளுமெமக் கருள்புரிவாய்
வெள்ளைக் கமலத்தை விரும்பியே ஏற்றாயே
வீணையினைக் கரமேந்தி மீட்டுகிறாய் அறிவிசையை
தெள்ளுதமிழ் நாம்பாட செய்தவளும் நீயன்றோ
நல்லதமிழ் கொண்டுன்னை நாம்பரவி நிற்கின்றோம்
குழந்தை மொழியினிலும் குயிலின் குரலினிலும்
கொஞ்சும் கிளியினிலும் குடிபுகுவாய் நீயென்றும்
வஞ்ச மனமுடையார் வண்ணமுற வருவதற்கு
வாண்மையுடை கல்வியினை வழங்கிடுவாய் கலைமகளே
கல்வியினை நாடாதார் கணக்கின்றி இருக்கின்றார்
கல்விகற்க விருப்புடையார் வசதியின்றித் தவிக்கின்றார்
கல்வியினைக் காசாக்கும் கசடர்பலர் பெருகிவிட்டார்
கல்வியினைப் பெற்றுநிற்க கருணைகாட்டு கலைமகளே
கல்வியெனப் பலபட்டம் பெற்றிட்டார் நாட்டினிலே
கண்ணியத்தைக் குழிதோண்டி புதைத்துமே நிற்கின்றார்
கல்வியதன் பெறுமதியைக் கருத்திலவர் கொள்ளாமல்
கயமைக்குணம் கொண்டுள்ளார் கண்பாராய் கலைமகளே
குருவாகி நிற்கின்றார் குறைகளையும் கொண்டுள்ளார்
குருநாடிப் போவோர்க்கு குந்தகமும் கொடுக்கின்றார்
குருமாரின் குறைகளைய கொடுத்திடுவாய் நற்பாடம்
குருவாகி இருக்கின்ற குணக்குன்றே வேண்டுகிறோம்
கல்வியெனும் பெருங்கடலில் கசடுபல கலக்கின்றார்
கல்வியெனும் பெருங்கடலின் கசடறுப்பாய் கலைமகளே
கல்வியெனும் பாற்கடலை கருத்துடனே சுவைப்பதற்கு
கல்வித் தெய்வமானவளே கருணையுடன் அருள்புரிவாய்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேர்ண் …… அவுஸ்திரேலியா