கவிதைகள்

நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்!…. கவிதை…. [ மலைமகளுக்குப் பிராத்தனை ] மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்
பொற்பதத்தைத் தினம்பரவி நற்கருணை வேண்டுகிறோம்
நிற்பதுவும் நடப்பதுவும் நீநினைத்தால் நடந்துவிடும்
உற்பதங்கள் வாராமல் உதவிடுவாய் மலைமகளே 
 
நாடழிக்கும் பேரரக்கன் தாண்டவத்தை ஆடுகிறான்
நீயெழுந்து பேரரக்கன் நிட்டூரம் அழித்திடுவாய்
கோரமுடை முகமுடைய கொரனோவாம் கொடியரக்கன்
கொட்டமதை அடக்குதற்கு விரைந்துதிடுவாய் மலைமகளே
 
துர்க்கையெனப் பெயர்தாங்கும் தூயவளே மலைமகளே
துயர்துடைக்க நீவருவாய் எனநம்பி இருக்கின்றோம்
பற்பலவே துன்பவலை படர்ந்தெம்மை சூழ்கிறது
பார்காக்க கடைக்கண்ணால் பார்த்திடுவாய் மலைமகளே 
 
தளாரா மனந்தந்து தயைதருவாய் மலைமகளே
தயைகருணை மனமுறைய தானருள்வாய் மலைமகளே
நிலையான ஆரோக்கியம் நீயருள வேண்டுகிறோம்
நின்பாதம் தொழுகின்றோம் நீயருள்வாய் மலைமகளே 
 
வீரமெனப் பலரெண்ணி வீழ்த்துகிறார் மானுடத்தை
வீரமதைப் பலபதர்கள் வீணாக்க வந்துள்ளார்
வீரமதைச் சக்தியாய் கொண்டியங்கும் மலைமகளே
தாரணியில் வீரமதை தர்மமாய் காட்டிடம்மா 
 
நின்பாதம் சரணடைந்தோம் நீதருவாய் நல்வீரம்
நின்னருளால் நல்நினைப்பை நெஞ்சமெலாம் நிறைத்துவிடு 
நீதிநிறை வீரமதை நிலவுகில் நிறுத்திவிடு
நின்சக்தி நிச்சயமாய் காத்துவிடும் மலைமகளே.
 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
   மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 

 

Loading

One Comment

  1. உலகம் உய்ய உகந்த கவிதை!பாராட்டுக்கள் ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.