விதைத்தது முளைத்திடல் வழி!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
விதையொன்று போட செடியொன்று
முளைக்குமா
இதை இங்கு அறியா மாந்தர் சொல் நிலைக்குமா
அதைப்பற்றி உரையாது கதை வேறிங்கு செய்தால்
பதைத்துமே மாந்தர் பரிதாபமாய் நின்று பலவழி செல்வர்
ஓருயிர் கொண்டு ஆறுயிர்வரை இங்கே வரையறை ஒன்றே
இயற்கையின் நியதியில் நிலைதடுமற்றம் நிரந்தரமாயில்லை
விதைத்தது முளைக்கும் முளைத்தது வளர்ந்துமே முற்றும்
முற்றிய பின்னே முதிர்ந்திடு முறையை மாற்ற இயலுமா
காக்கை கூட்டில் குயிலிடும் முட்டையை காத்து
போக்கென காணும் பொழிழுறு செயலை மாற்றிட இயலுமா
யாக்கையின் இயக்கமாய் மூத்து முதிர்ந்து நோயுறல் மாறுமா
தூக்கி நிறுத்தலாம் தோதுசெய்யலாம் மற்றேதுமியலா
பக்குவம் செய்து அற்புதம் நடத்தலாம் எனும் பதறான எண்ணம்
தக்கவும் எதையும் வைத்திடாதிங்கு இயற்கை என்றும்
சொக்கிடும் வாழ்வில் சுகமென வீழும் சொற்பமே வாழ்வு
மக்கிமாய்ந்து மண்ணில் புதைவதில் மறையேதும் ஆக்கலாகா
வந்தது இருக்கும் வாழ்ந்து செழிக்கும் வேறு தந்திரமேதுமுண்டோ
நிந்தித்து நின்றாலும் நின்று நீ தொழுதாலும் நிலையது மாறிடா
அந்திமகாலத்தில் அதுவங்கு நடப்பதை திருத்திட இயலா
நொந்து நொடிந்து விதியென வீண்பழி சொலும் நிலை களைவீர்
-சங்கர சுப்பிரமணியன்.