நாளெலாம் உன்நடிப்பை நாமெண்ணி நிற்கின்றோம்!… ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
சிம்மக் குரலோனே
சினிமாவை ஆண்டவனே
சிவாஜியே நீஇல்லா
சினிமாவும் அழுகிறது
நீசிரித்தல் நாம்சிரித்தோம்
நீஅழுதால் நாமழுதோம்
நீஇன்றி சினிமாவை
நினைக்கவே முடியவில்லை
நடிப்புலகாய் இருந்தாயே
நல்லபடம் தந்தாயே
நாடிநரம்பு எல்லாம்
நடித்தனவே உன்னிடத்தில்
நடந்தாலும் நடிப்புத்தான்
கிடந்தாலும் நடிப்புத்தான்
நாட்டிலுள்ளோர் அனைவரையும்
நடிப்பாலே பிடித்துவைத்தாய்
உன்நாவில் தமிழன்னை
உட்கார்ந்து இருந்ததனால்
உயிர்த்துடிப்பாய் வசனங்கள்
உள்ளின்று வந்தனவே
நீபேசும் தமிழ்கேட்டு
நீதிபதி திகைத்தாரே
பராசக்தி வசமானாய்
பாசமலர் ஆகிவிட்டாய்
அப்பராய் வந்தாய்
ஆண்டவன் ஆகிவந்தாய்
அன்ரனியாய் வந்தாய்
அசடனாயும் வந்தாயே
தங்கப் பதக்கமானாய்
தடியெடுத்தும் சண்டைசெய்தாய்
வில்லனாய் வந்துநின்றாய்
விதம்விதமாய் நடித்தாயே
நவரசத்தைக் காட்டியே
நடிகருள் திலமானாய்
நாட்டியமும் ஆடிநின்று
நடராஜ வடிவமானாய்
பானா வரிசையிலே
பலபடங்கள் தந்தாயே
பார்த்தவர்கள் எல்லோரும்
பரவசத்தில் நின்றாரே
உன்நடிப்பைத் தொட்டுவிட
ஒருவருமே வரவில்லை
உயரத்தில் இருக்கின்றாய்
உனைநினைந்து நிற்கின்றோம்
கப்பலை ஓட்டினாய்
கட்டபொம்மன் ஆகிநின்றாய்
தொப்பை நீபோட்டாலும்
சுவையாக நடித்தாயே
இங்கிதமா யிருக்குமங்கே
தப்பாமல் நடிப்பாயே
தமிழ்நடிகன் நீயன்றோ
காலத்தால் அழியாத
காவியங்கள் பலதந்தாய்
கண்ணாலே நடித்துஎமை
கட்டிநீ போட்டாயே
நல்லதொரு நூலானாய்
நாளெலாம் உன்நடிப்பை
நாமெண்ணி நிற்கின்றோம்….