கவிதைகள்
இதயம் காப்போம் இன்பம் பெறுவோம்!…. ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
வாழ்ந்திடும் காலம் நீண்டிட வேணும்
வாழ்வினில் வசந்தம் வீசிட வேணும்
சொந்தங்கள் யாவும் சேர்ந்திட வேணும்
சொர்க்கமாய் வாழ்வு ஆகிட வேணும்
சோலையாய் வாழ்வு ஆகிட வேணும்
சுகமெலாம் அங்கு நிறைந்திட வேணும்
மாலையும் காலையாய் வந்திட வேணும்
மகிழ்வது மழையாய் கொட்டிட வேணும்
கட்டிய கோட்டைகள் எழுந்திட வேணும்
கற்பனை என்றும் கருத்தாக வேணும்
அற்புதம் என்றும் நிகழ்ந்திட வேணும்
ஆனந்தம் மலராய் மலர்ந்திட வேணும்
கேட்பது யாவும் கிடைத்திட வேணும்
கிட்டிய யாவும் நிலைத்திட வேணும்
வாட்டிய யாவும் மடிந்திட வேணும்
வாசல் வெளிச்சம் ஆகிட வேணும்
இதயம் நல்லாய் இருந்திடு மாயின்
எல்லாம் நல்லாய் வந்துமே யமையும்
இதயம் அமைதி இழந்திடு மாயின்
எல்லாம் இழந்து இருப்புமே குலையும்
இதயம் காத்தால் எல்லா மமையும்
இதயம் கெடுத்தால் எதுவும் நிலையா
இதயம் காப்போம் இன்பம் பெருகும்
இதயம் காப்போம் இகமும் சிறக்கும்
மதுவை மறப்போம் வாழ்வு மலரும்
புகையை விடுவோம் பொழுது விடியும்
உணவைத் தேர்வோம் உடலும் சிறக்கும்
உணர்வில் உயர்வை இருத்துவோம் நாளும்
கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா
அறம் வெல்லும் பாவம் தோற்கும். நல்லத செய்வோம்; அல்லது தவிர்ப்போம்.