ஓடிய கால்கள் உழைத்திட்ட கைகள்
தேடியே செல்வம் திரட்டிய உள்ளம்
வாடியே நில்லா வதங்கிடா வதனம்
வதங்கியே மூலை இருப்பது முறையா
தூக்கிய சுமைகள் சுகமென வெண்ணி
சாப்பிடு நேரம் தனையுமே மறந்து
காப்பிடு நோக்கில் களிப்புற்ற உள்ளம்
கண்ணீரை உகுப்பது கருணையின் நிலையா
தடுக்கியே விழுவதை தடுத்திட நினைத்து
அணைத்திடும் நோக்கில் அன்பினைச் சொரிந்து
விடுப்புகள் இழந்து விருந்துகள் கொடுத்த
வியப்புடை உள்ளம் வேதனை உறுவதா
விடியலை வழங்க விரைத்திட்டார் நாளும்
தலையிடி என்று தவிர்த்திலார் வாழ்வில்
உலையிடை பட்ட இரும்பென உருகி
உழைத்தவர் இப்போ உழலுறார் வாழ்வில்
தோழினிற் ஏற்றி சாமியைக் காட்டினார்
தோழனாய் மாறி சுறுசுறுப் பூட்டினார்
வாழ்வினில் வசந்தம் காட்டிட முனைந்தார்
வதங்கிய நிலையில் இருப்பது முறையா
கைபிடித் தழைத்து பள்ளியில் சேர்த்தார்
கணக்கொழுத் தென்று பலபல காட்டினார்
மெய்யினில் வருத்தம் மேவிடா நின்றார்
மேதினி மீதினில் விக்கித்து நிற்கிறார்
கற்பனை பலபல கண்டுமே நின்றார்
கற்றவர் அவையினில் நிற்கவும் வைத்தார்
நிற்பதும் நடப்பதும் நெஞ்சுரம் என்றார்
நிற்கவே முடியா கிடக்கிறார் இப்போ
பள்ளியின் வாசலைப் பார்த்துமே நிற்பார்
துள்ளியே வந்ததும் தூக்கியே கொஞ்சுவார்
அள்ளியே அணைத்து அன்பினைப் பொழிவார்
அள்ளியே அணைத்திடா அவரிப்போ தவிக்கிறார்
அம்மாவும் அப்பாவும் பாட்டியும் தாத்தாவும்
அன்புடை மாமியும் மாமாவும் இப்போ
அழகெலாம் குலைந்து அயர்விலே உழன்று
ஆறுதல் தேடுறார் அவர்நிலை உணர்வோம்
காவோலை விழுவதும் குருத்தோலை சிரிப்பதும்
காதாலே கேட்க களிப்பாக இருக்கும்
காலத்தின் மாற்றம் எப்போதும் நிகழும்
களிப்பினைத் தந்தவர் கண்ணீரைத் துடைப்போம்
முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்
ஒதுக்கிட நினைத்தல் உயர்குணம் அன்று
அவரது ஆசியை அனைவரும் பெறுவோம்
ஆண்டவன் எமக்கு அருளினை அளிப்பான்….
கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. ஆஸ்திரேலியா