கவிதைகள்
இன்றவன் எங்கு மறைந்தான்?…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
அன்றொரு காலம் வசதியற்ற ஒரு ஆண்டி
ஆண்டியாய் இருந்தவனுமுமே முயன்றான்
முயற்சி திருவினை ஆக்கிடும் என்பதால்
பலன்கிட்ட அரசனுக்கிணையாய் ஆனான்
ஆண்டியாயிருந்தவன் அரசை ஆண்டதால்
வளமாய் வாழ்ந்திடவே வளம்பல சேர்த்தான்
ஏழேழு தலைமைறை இன்புற்றிருக்கவே
இயன்ற வகையில் செல்வமும் சேர்த்தான்
சேர்த்த செல்வம் நல்வழியாய் இருக்குமோ
அவ்வழி நல்வழியா என்பதை நாமறியோம்
நேர்வழிவாழ்ந்த நிலையுறு அரசனொருவன்
தன்நிலை தாழ்ந்தும் தடம் புரளாதிருந்தான்
அரசனாய் இருந்தவன் ஆண்டியாய் ஆனான்
மனைவி மகனென அவர்களைப் பிரிந்தான்
இடுகாட்டினிலே இருக்கும் நிலைவந்தாலும்
தடுக்கி விழாதிருந்து தனது நிலை காத்தான்
தன்மகன் இறந்தும் தனயனென எண்ணிடாது
பொருளின்றி அடக்கம் செய்யவும் மறுத்தான்
அன்று கடவுளும் ஓடோடி வந்து உதவினான்
இன்று ஆறுகால பூசையிலவன் மகிழ்கிறான்!
-சங்கர சுப்பிரமணியன்.