கவிதைகள்

வாழ்ந்திடும் நாளில் வாழ்த்தியே மகிழ்வோம்!…. ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

ஆதவன் எழுந்தனன் 
அனைவரும் விழித்தனர்
அவரவர் பணிசெய்ய

ஆயத்தம் ஆயினர்           

ஆடின கட்டடம்
அலறினர் அனைவரும்
வீடுகள் அதிர்ந்தன
வெடிப்புகள் நிறைந்தன
 
இருந்தவர் பயந்தனர்
எழுந்துமே ஓடினார்
கட்டிலும் தொட்டிலும்
ஊஞ்சலாய் ஆனது
 
பாத்திரம் உருண்டது
பண்டங்கள் சிதறின
பதைபதைப் பென்பது
பரவியே நின்றது
 
நிமிர்ந்திடு கட்டடம்
நிமிடத்தில் உடைந்தது
தெரிவினில் கல்லுகள்
சிதறியே கிடந்தன
 
சீனாவின் சீதனம்
சிக்கலாய் இருக்கையில்
நிலமது அதிர்ந்துமே
நிம்மதி கெடுத்தது 
 
மெல்பேணில் நிலமது
நர்த்தனம் செய்தது
வீதியைத் தேடியே
அனைவரும் ஓடினார்
 
பார்த்திரா வேளையில்
பதறிடச் செய்திட்ட
பதட்டமோ மனமெல்லாம்
படிந்துமே இருக்குது 
 
இயற்கையின் சீற்றம் 
எப்படி வருமே
எப்போது வருமோ
எவருக்கும் தெரியா
 
இன்றும் வரலாம்
நாளையும் வரலாம்
என்பதை எண்ணி
இருப்பதே இயல்பு
 
தேடிய செல்வம்
திரண்டநல் சுற்றம்
ஆடிடும் சுழலில்
ஆடியே போகும்
 
வாழ்ந்திடும் நாளில்
வாழ்த்தியே மகிழ்வோம்
வீழ்த்திடும் நினைப்பை
விரட்டியே விடுவோம்  

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.