சேவடி அருள்வாய்!…. ( கவிதை ) ….. சைவப்புலவர் முரு.சேமகரன், மெல்பேண்
யாது நினைந்தாய் யந்திர தநுவிலென்
ஆன்மா யாண்டு மிருக்குமோ
ஏது மறியேன் ஆணவ மறைப்பும்
என்றும் நீங்கா திருக்குமோ
தீது நன்மை தருமென் வினைகள்
சங்கிலி யாகிப் பிணைக்குமோ
மாது மற்றை மயக்க மெல்லாம்
மதியை மூடி மறைக்குமோ ?
பிறந்து மீண்டும் பிறந் திறந்தும்
பிறவிப் பிணியில் திளைப்பனோ
மறந்தும் வாழ்வை மீள விரும்பி
வளருந் துயரில் களைப்பனோ
சிறந்த பேற்றைத் தேடும் பணியைச்
சிதைத்து வீணில் கழிப்பனோ
உறழ்ந்து மிந்த உண்மை அறிவை
உணர்ந்து ஓர்நாள் களிப்பனோ ?
பாசம் வைத்துப் பற்றில் படர்ந்தும்
பாழும் குழியில் வீழ்வனோ
நாசம் செய்யும் நாகம் போலும்
நீசர் உறவால் மாள்வனோ
வேசம் போன்ற விந்தை வாழ்வை
விழைந்து வீணே வாழ்வனோ
வாசம் வீசும் ஆசைப் பூக்கள்
மயக்கி லிருந்தும் மீழ்வனோ ?
பின்னைக் கருவிற் பிறப்பு வேண்டாப்
பெருமை அருள்வாய் பிஞ்ஞகனே
உன்னைத் தினமும் உள்ளத் திருத்தி
உருகச் செய்வாய் மன்னவனே
என்னைப் படைத்து உயிரை ஊட்டி
என்றுங் காப்பாய் என்னவனே
தன்னைத் தெளிந்து தீவினை அறுத்துச்
சேவடி யருள்வாய் தென்னவனே !
( சைவப்புலவர் முரு.சேமகரன், மெல்பேண் )