இலண்டனில் தமிழ்த்துறை அமைக்க; உலக தமிழர்கள் ஒன்றுகூடல்!
உலகின் பரப்புகளில் விழும் வெளிச்சத்தின் அழகோ அதனூடாக வரும் அறிவோ அதைக் காண்பவருக்கே தெரிவதைப்போல் மொழியதன் சிறப்புகூட வாசிப்பவருக்கே முழுதாய் அதன் நன்மையை உணர்த்துகிறது. என்றாலும் தமிழ் என்பதன் சிறப்பு உச்சரிப்பின் அழகு ஒரு புறம் இருப்பினும் அதன் வாழ்வியலுக்குள் அடங்கும் வரலாற்றின் கம்பீரமும் அறத்தின் முதன்மையும்தான் இன்றுவரை தமிழ்தனை உணர்வு குறையாது உயர்வாக எங்கும் பெருமதிப்போடும் அதன் இலக்கியங்களின் தனிதன்மையோடும் வைத்துள்ளதை உலகம் அறியும்.
அத்தகு மொழியின் அழகியலை உணர்த்தும் வகையில் தமிழின் தொன்மைக்கு மதிப்புக்கூட்டும் விதமாக உலகளவிலான ஒரு கல்வியமைப்பினை உருவாக்கி உலகநாடுகளின் பார்வையில் முத்தாய்ப்பாக தெரியத்தகுந்தவாறு இலண்டன் மாநகரில் நிறுவி எதிர்கால இளைஞர்களுக்கு இனம் கடந்து கடல் கடந்து கண்டம் தாண்டிப் போயினும்கூட தமிழின் பெருமையை அறியத்தரும் நோக்கத்தில் தமிழ் ஐக்கிய இராச்சிய சபை ஒரு பெரு முயற்சியை எடுத்துள்ளது.
பொதுவாக வர்த்தகம் மட்டுமில்லாது பழமையிலும் முக்கியத்துவம் வாய்ந்த இலண்டன் மாநகரில் ஏறத்தாழ 1916-ஆம் ஆண்டுதனில் தமிழ்வழிக் கல்வியோடு துவங்கப்பட்ட SOAS பல்கலைக்கழகத்தில் இடைப்பட்ட காலத்தில் பணயிருப்பு குறைந்தமைக் காரணமாக நிறுத்தப்பட்டு தமிழ்வழிக் கல்வி தொடர இயலாமல் போனதைக் கண்டு வருத்தமுற்ற பிரித்தன் வாழ் தமிழர்களின் முன்னெடுப்பினாலும் உலகத் தமிழர்களின் பேராதரவினாலும் அங்கே மீண்டும் தமிழ்த்துறை அமைக்கப்பட்டு தமிழ்வழிக் கல்வி தொடர்வதற்கான ஒரு பெரு முயற்சியைத்தான் தற்போது எல்லோருமாய்ச் சேர்ந்து எடுதுள்ளனர்.
அதற்கான சீரிய பணிகளை திறமாக ஆற்றிவருவதோடு, அதன் தொடர் முயற்சியாக இலண்டன் ஐக்கிய இராச்சிய தமிழ்ச் சபை பலவாறான களப்பணிகளை ஆற்றி வருகிறது. மிகக் குறிப்பாக எச்செயலுக்கும் அதன் நிலைப்புத்தன்மைக்கான ஒரு பொருட்தேவையும் சரியான திட்டமிடுதலும் இன்றியமையாத ஒன்றென்பதை நாம் மறுப்பதற்கில்லை. அங்ஙனம், இந்த இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைக்க சற்றேறக்குறைய ஐம்பதாயிரம் பிரித்தானிய பவுன்ஸ்கள் தேவைப்படுகிறது என்பதால் அதை உலகத் தமிழரிடத்தில் முறையே தெரிவித்து உலகத்தரத்தோடு தமிழ்க்கல்வியை நிறுவும் பொறுப்பில் எல்லோரையும் உலகந்தோறும் இணைத்து வருகிறது “இலண்டன் தமிழ் ஐக்கிய இராச்சிய சபை” என்னும் இவ்வமைப்பு.
குறிப்பாக, பிரித்தன், தமிழகம், இலங்கை, மலேசியா, ஜப்பான், அமெரிக்கா மொரிசியஸ் மற்றும் குவைத் என இதுவரை பல நாடுகளிலிருந்து தமிழர்கள் நேரடியாக உள்ளிறங்கி செயலாற்றி வந்தாலும் இலண்டன் ஐக்கிய இராச்சிய சபையானது இப்பணியை உலகளவில் திறந்துவைக்க வேண்டி பல பரப்புரைகள், கருத்தாடல்கள் மற்றும் அறிவுசார் இணையவழி நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது. அதன் இரண்டாம் பன்னாட்டு பரப்புரை நிகழ்வினை சென்ற மாதம் 27.09.2020 அன்று குவைத்திலுருந்து தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அதன் நிலைப்பிற்கும் பாடுபட்டுவரும் கவிஞரும் எழுத்தாளருமான திரு. வித்யாசாகர் அவர்கள் முன்னெடுத்து உலகநாடுகளின் சிறந்த மற்றும் தொடர்ந்து மொழிக்கென இயங்கும் பல தமிழறிஞர்களை இணைய வழியே ஒன்றிணைத்து சிறந்ததொரு இலக்கிய நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தார்.
தமிழத்தாய் வாழ்த்தினோடு நிகழ்வு கம்பீரமாக தொடங்கியதும் சிறார்கள் முகில்வண்ணன் வித்யாசாகர் மற்றும் வித்யா பொற்குழலி வித்யாசாகர் இருவரும் திருக்குறள் சொல்லி பொருள்விளக்கமும் தந்து நிகழ்ச்சிக்கு அழகு சேர்த்தனர். திரு. சிவா பிள்ளை வரவேற்புரையும், திரு. செலின் சார்ஜ் அவர்கள் பரப்புரை குறித்தும் விளக்கத்தையும் வழங்க திரு. சு. தர்மேந்திரன் அவர்கள் நிகழ்ச்சி விளக்கம் தந்து வாழ்த்த தமிழ் பாடல் ஓதி பேராசிரியர் திரு இறையரசன் அவர்கள் நிகழ்ச்சியை செம்மையாக தமிழ்மணத்தோடு தொடங்கிவைத்தார். தமிழாராய்ச்சி நிறுவனர் முனைவர். கோ விஜயராகவன் அவர்கள் முன்னிலை வகித்து இப்பரப்புரை நிகழ்விற்கு பெருமை சேர்த்துத் தந்தார். உடன் இலண்டனிலிருந்து திரு சத்தியமூர்த்தி, அமெரிக்காவிலிருந்து திரு. சுரேஷ் மற்றும் மலேசியாவிலிருந்து திரு. சுப நற்குணன் போன்றோர் இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.
உலகெங்கிலுமிருந்து பத்து தமிழறிஞர்கள் தமிழ்க்கல்வி பற்றியும் மொழியின் தொன்மை, சிறப்பு மற்றும் தமிழின வரலாறு குறித்தும் எண்ணற்ற தகவல்களை மிக குறைந்த நேரத்திற்குள் செறிவாகப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் “தமிழே தமிழரின் முகவரி” என்னும் தலைப்பில் திரு.கலியமூர்த்தி, திரு.தஞ்சை கோ.கண்ணன், திரு.இஸ்மாயில் அச்சு முகம்மது, திரு.ஒரிசா பாலு மற்றும் திரு.முகம்மது சுலைமான் ஹமம்த் அல்-பஹ்லானி போன்றோர் சிறப்புரையும், திரு.முருகன் கண்ணன், திரு.பாஸ்கரன், திரு.இன்பத்தமிழ்இளங்கோவன், திரு.தி.தாயுமானவர் போன்றோர் வாழ்த்துரையும் வழங்கி சிறப்பிக்க திருமதி. சிவானந்தி கணேசராயன் அவர்கள் இலண்டனிலிருந்து மிகச் சிறப்பாக நன்றியுரை வழங்கி எல்லோரையும் ஈழத் தமிழின் இனிப்பில் ஆழ்த்தினார்.
நிகழ்வை தொகுத்துவழங்கிய கவிஞர் எழுத்தாளர் திரு.வித்யாசாகர் அவர்கள் இறுதியில் ‘உலகெங்கிலும் பன்னிரண்டு கோடிகளுக்கும் மேலாக தமிழர்கள் பெருஞ்செல்வத்தோடு வாழ்வதாகவும், குறைந்தது தமிழகத்தில் ஏழு கோடி தமிழர்களும் சென்னையில் மட்டுமே ஒரு கோடிக்கு மேலும் தமிழர்கள் வசித்திருக்க யாரும் இந்த மகத்தான தமிழ்ப்பணிக்கு கோடியோ இலட்சமோ எல்லாம் தரவேண்டாம், மாறாக, உலகெங்கிலும் இருக்கும் கோடானக்கோடி தமிழர்கள் ஒன்றுசேர்ந்து அவரவர் பங்கிற்கு ஒரு பவுண்ட் கொடுத்து உதவினாலே போதும் நாளைக்கே கூட நமது கல்விக்கான தமிழ்த்துறை செவ்வனே உலகெங்கிலும் அமைந்துவிடும். அது எதிர்கால தலைமுறையினரை தமிழறிவோடும் நல்லறத்தோடும் வாழவைப்பதோடு நில்லாமல், தமிழர் வரலாற்றின் சிறப்புமிக்கதொரு இடத்தை இக்காலத் தமிழர்கள் பெறுவர்’ என்றும் கூறி அனைவரையும் உதவ முன்வருமாறு பணித்து நிகழ்வை நிறைவு செய்தார்.
_இலண்டன் தமிழ் ஐக்கிய இராச்சியச் சபை, இங்கிலாந்து.