கேசி தமிழ்மன்றத்தின் மூத்த பிரஜைகள் ஒன்றுகூடலில் சகுந்தலம் நாடகப் பிரதி சமர்ப்பணம்!…. நவரட்ணம் வைத்திலிங்கம்.
சைவப்புலவர் கல்லோடைக்கரன் நிகழ்த்திய இலக்கியவுரை !
இளையோரும் இணைந்த இணையவழி காணொளி நிகழ்ச்சி.
மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் மூத்தபிரஜைகளின் வாராந்த ஒன்றுகூடல் வழக்கம்போன்று நேற்று ஓகஸ்ட் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இணைய வழி காணொளி அரங்காக நடைபெற்றது.
அங்கத்தவர்கள் அனைவரும் அரங்க முற்றத்தில் ஒன்றுகூடி சுகநலன்கள் மற்றும் நாட்டு நடப்புகள் பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டிருந்த வேளையில், எழுத்தாளர் திரு ஆவூரான் சந்திரன் நிகழ்ச்சியில் இணைந்து, பொங்கும் பூம்புனல் வானொலியை இயக்கினார்.
ஒரு பாடலுடன் ஆரம்பித்து, அங்கத்தவர் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வினை தொடக்கிவைத்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமது பிறந்தநாளைக் கொண்டாடிய திருமதி தேவராணி சாம்பசிவம் அவர்களை வாழ்த்தி அவருக்காக ஒரு பாடலையும் வழங்கி கலகலப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார்.
அதையடுத்து வந்த மூத்த அங்கத்தவர்கள் கலந்து கொள்ளும் முதியோர் பங்களிப்பின்வேளையில், திருமதி சிவயோகராணி, புலம் பெயர் வாழ்க்கையில் தான் சந்தித்த சாதகமான அனுபவங்களையும் , சவாலான விடயங்களையும் சுவாரசியமாக தெரிவித்தார்.
அவர் தமது உரையில், “ இங்கு வந்த ஆரம்ப நாட்களில் வர்ணமயமான காட்சிகளால் கவரப்பட்டதாகவும், பின்னர், ஊர் நினைவுகளின் பாதிப்பினால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும், நாட்கள் செல்லச்செல்ல நண்பர்கள், உறவினர்கள் தொடர்பினாலும், தனக்கிருக்கும் வாசிப்பு, மற்றும் எழுத்து ஆர்வத்திற்கு தேவையான நேரங்கள் கிடைத்தமையாலும் அதிலே கருத்தூன்றி இந்த வாழ்க்கையை வசப்படுத்திக் கொண்டதாகவும் “ தெரிவித்தார். எனினும், இடையிடையே ஊர் ஞாபகங்களும் தவிர்க்க முடியாதுள்ளதாகவும் கூறினார்.
அதேவேளை நன்மை எனக்கூறுவதானால் இங்குள்ள வைத்திய வசதிகள், வைத்திய ஊழியர்களின் அன்பான பராமரிப்புகள், இன்முகத்துடனும், நட்புடனும் அவர்கள் ஆற்றும் சேவைகள் ஊரிலே காணக்கிடைக்காதவை எனக்கூறித் தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார். தன்னுடைய தமிழ் ஆர்வத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது தான் படிக்கும் காலத்தில் தனக்குத் தமிழ்ப் பாடம் எடுத்த தமிழாசிரியரின் உந்துதலினால் சிறு கதைகள், கட்டுரைகள் எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாகவும் தெரிவித்து, ஆசிரியரையும் நினைவுகூர்ந்து எடுத்துரைத்தார்.
அவரைத்தொடர்ந்து அதேதலைப்பில் பேசவந்த திருமதி சகுந்தலாதேவி, தற்போது ஊரில் துர்க்கை அம்மன் கோவில் திருவிழா நடந்துவருவதாகவும் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கு போய் திருவிழாவில் கலந்து கொள்ள இயலாத தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மறுபக்கத்தைக் கூறவந்த அவர், இங்கு வயது போனவர்களுக்கு வழங்கும் முதியோர் உதவித் தொகை ஊரில் கிடைக்காத ஒன்றென்றும், இங்குகிடைக்கும் அந்த உதவியினால் எவருக்குமே பாரமில்லாமல் தைரியமாக வாழக் கூடியதாகவும், தேவைப்பட்டபோது பிள்ளைகளுக்கும் உதவி செய்யக் கூடியதாகவும், அதுதவிர ஊரில் இருக்கும் உறவினர்களுக்கோ அன்றி உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தவிர இங்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் அரசாங்கம் மொழிபெயர்ப்பாளர்களை ஒழுங்கு செய்து தேவையான உதவிகளைச்செய்வதையும் குறிப்பிட்டார்.
அவருக்கு முன்பு கூறியவர் குறிப்பிட்ட வைத்திய வசதிகளையும் இவர் தனது பேச்சிலே குறிப்பிடத் தவறவில்லை.
அவரைத்தொடர்ந்து பேச வந்த திரு சாம்பசிவம் அவர்கள், “ இருக்கும் இடத்தைச் சொர்க்கமாக அமைத்துக் கொள்வது அவரவர் மனதுதான் என்பதாகத் தனது உரையை ஆரம்பித்து, சொர்க்கமே ஆனாலும் அது தன் ஊரு போலாகுமா என்பதையும் பாட்டாகக் கூறி முடித்தார்.
அடுத்து வாசகர் முற்றம் எனும் தலைப்பில் பேசவந்த திருமதி சரோஜினி தான் ஆபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலத்தில் படித்த சாகுந்தலம் எனும் காவியத்தை அங்கு வசித்த நண்பர்கள் சிறுவர்களை வைத்து தமிழ் நாடகமாக மேடை ஏற்றிய அனுபவங்களை கூறினார்.
குறிப்பிட்ட நாடகப்பிரதியை தாம் ஆங்கிலத்தில் எழுதியதாகவும், அத்துடன் அரங்க நிர்மாணம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை அந்தப்பிரதியில் எழுதிவைத்து நாடகத்தை இயக்கியதாகவும் சொன்னார்.
சகுந்தலம் கதையின் சாரத்தை ஒவ்வொரு பகுதி பகுதியாக சபையோருக்கு எடுத்துரைத்து, அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டார்.
அவரையடுத்து தனது தமிழ்ப் பேச்சினால் பலராலும் அறியப்பட்டவரும் சைவப்புலவருமான கவிஞர் திரு. கல்லோடைக்கரன், தனது பேச்சை ஆரம்பித்தார்.
“ வண்ணம் “ எனும் தலைப்பில் தான் உரையாற்ற உள்ளதாகக் கூறிய அவர், கவிச்சக்கரவர்த்தி கம்பரின் “ எவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்” என்று தொடங்கும் பாடலைப்பாடி, அப்பாடலிலே கம்பன் எட்டு இடத்திலே வண்ணம் எனும் சொல் வரும்படி இயற்றிய அக்கவிதையின் நயத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக மிகவும் அழகாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார்.
அவர் மேலும் பேசமாட்டாரா என அனைவரும் எதிர்பார்த்தபோதும், நேரம்கருதி மீண்டும் ஒருதடவை வந்து இது பற்றிப் பேசுவோம் எனக்கூறி விடை பெற்றார்.
அடுத்து செல்வி அபிதாரணி சந்திரனின் நெறிப்படுத்தலில் சிறுவர் முற்றம் நிகழ்விலே செல்விகள் ஹரினி, மதுவந்தினி, திரிஷா, யதுஷா, மற்றும் செல்வன் ரூஜித் ஆகியோர் கலந்து கொண்டனர். செல்வி ஹரினி தாம் தொடர்ந்தும் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தினார். தான் இலங்கை சென்ற போது அங்குள்ள உறவினர்கள், நண்பர்கள் ஏனையோருடனும் தமிழில் கதைத்த அனுபவத்தையும் வெளிப்படுத்தினார்.
அவர் பார்த்த சினிமாவைப் பற்றி கூறமுடியுமா..? என கேட்கப்பட்டபோது, தான் பார்த்த விசுவாசம் படத்தையும், அப்படத்திலே குடும்ப பாசத்தை வெளிக்காட்டிய விபரங்களையும் குறிப்பிட்டார்.
தான் இசைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடலையும் பாடி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார். அடுத்து தனது தம்பி செல்வன் ரூஜித் சகிதம் முன்வந்த செல்வி மதுவந்தினி இந்தோனேசிய நாட்டில் தாங்கள் வாழ்ந்த காலங்களில் தாம் பெற்ற அனுபவங்களை நினைவுபடுத்தி எடுத்துரைத்தார்கள்.
அந்த நாடு அழகானதாக இருந்தபோதிலும், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்போது, அதுவும் இரவாக இருந்தால் நித்திரையிலிருந்து எழுந்து வெளியே ஓடும் அவலங்களையும், அதனால் வந்த பயத்தையும் விபரமாக கூறினார்கள்.
தங்களுக்கும் தமிழ் படிப்பதில் பெரிதும் ஆர்வமிருப்பதனால் விரும்பிப்படித்து வருவதையும் குறிப்பிட்டார்கள். செல்வி மதுவந்தி, சமீபத்தில் தான் பார்த்த சகோதர பாசத்தை வெளிப்படுத்திய சொக்கத்தங்கம் படத்தைப்பற்றியும் குறிப்பிட்டார்.
அவரையடத்துப் பேசவந்த சகோதரிகளான திரிஷா, யதுஷா ஆகிய இருவரும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களிடம் “ மாலை “ எனும் தலைப்பில் ஏதாவது கூறமுடியமா எனக்கேட்டபோது, செல்வி திரிஷா மாலை நேரத்தைப்பற்றிக் கூறினார், அதே நேரத்தில் செல்வி யதுஷா பூ மாலை பற்றியும் அதன் பயன்களையும் குறிப்பிட்டார்.
சிறுவர் அரங்கில் பங்கு பற்றிய சிறுவர்களை சபையோர் அனைவரும் ஒரு சேரப் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தனர். திரு ஆவூரான் சந்திரன் நிகழ்த்திய வானொலி நிகழ்வானது இனிய நிகழ்வாக, இடையிடையே அவரால் காட்சிப்படுத்தப்பட்ட சினிமாப் பாடல்களினாலும் இனிய பொன் மாலைப் பொழுதாகவும் அமைந்தது. அனைவரும், அவரையும், அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் உதவிய செல்வி அபிதாரணியையும் பாராட்டி விடைபெற்றனர்.
—0—