மூத்த பிரஜைகளின் வாராந்த ஒன்று கூடலில் இளையோர் சங்கமம்!… நவரத்தினம் வயித்திலிங்கம்.
மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் மூத்த பிரஜைகளின் வாராந்த ஒன்று கூடல் சந்திப்பு கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமைபோன்று மாலை மூன்று மணிக்கு இணைய வழி காணொளி அரங்காக நடைபெற்றது.
அங்கத்தவர்கள் ஒவ்வொருவராக அரங்கு முற்றத்தில் கூடி தத்தமக்குள்ளே சுக நலன்களை விசாரித்தவண்ணம் அமர்ந்த வேளை தற்போதைய கொரோனாப் பாதிப்புப் பற்றிய தகவல்களையும் பரிமாறிக்கொண்டார்கள்.
சென்னையில் சுகவீனமுற்றுள்ள பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களைப்பற்றிய கவலையை அனைவரினது உரையாடல்களின் ஊடாக
அறியக்கூடியதாக இருந்தது.
இவ்விதம் பல விடயங்களையும் பற்றிய உரையாடல்களின் மத்தியில் நான்கு மணியானபோது திரு. ஆவூரான் சந்திரன் அவர்கள் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி மூலம் ஒரு பாடலுடன் வந்து அனைவருக்கும் வணக்கம் கூறினார்.
பிறந்தநாள் நிகழ்வாக மூத்தோர் கழக அங்கத்தவரும் அன்றைய தினம் பிறந்த நாள் தினத்தைக் கொண்டவருமான திருமதி தவமணி மாணிக்கவாசகர் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கூறி அவருக்காக ஒரு பாடலையும் ஒலிக்கச்செய்தார்.
அடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்களை நோக்கி, திரு ஆவூரான் அவர்கள் முதல் நாள் 15 ஆம் திகதி சனிக்கிழமை இணையவழி மூலம் மெல்பேர்னில் நடந்த போர்க்கால இலக்கியம்: போருக்கு முன்பும், பின்பும் எனும் கருத்தரங்கு பற்றிய விபரங்களை அனைவரும் அறியும்படி உரைக்கும்படி கேட்டபோது, திரு முருகபூபதி அவர்களும் நேரம் கருதி சிறு குறிப்பாகக் கூறி அமர்ந்தார்.
அடுத்து வாசகர் வட்டம் நிகழ்வின்போது மெல்பேர்னில் வதியும் எழுத்தாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட
“பசி” எனும் கதையை, அக்கதையில் வரும் பின்னணியைக் கொண்ட சிவா விஷ்ணு ஆலயத்தின் காட்சிகளுடன் கூடிய ஒளியமைப்புடன், வாசித்தளித்து, அக்கதையை எழுதிய திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி அவருடனான உரையாடல் மூலம் அக்கதையை அவர் எழுதியதன் பின்னணி, எழுதிய காலம் போன்ற பல விடயங்களை அனைவரும் அறியும் வண்ணம் ஒளிபரப்புச் செய்தார்.
அங்கத்தவர்களும் அக்கதைபற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து அவரை வாழ்த்தினர்.
பாரதியார் பாடலான “ஓடி விளையாடு பாப்பா” எனும் பாடலுடன் சிறுவர் அரங்க நிகழ்ச்சியில் முதலில் தோன்றிய செல்வி சுவாதி, பாரதியார் பாடலின் தொடர்களை ஒழுங்காகப்பாடி அதனோடிணைவாக திருக்குறள் ஒன்றையும் கூறி நிகழ்ச்சியின் நெறியாளரான செல்வி அபிதாரணியின் கேள்விகளுக்கும் பாடலின் பொருள் விளக்கம் கூறி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டார்.
அவரையடுத்து தனது இலங்கைப்பிரயாண அனுபவங்களைக் கூறமுன்வந்த செல்வன் கவின், தாங்கள் குடும்பத்தினராக வாகனத்தில் வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்தபோது தாங்கள் பயணித்த வாகனத்தின் குறுக்கே ஒரு பெரிய யானை வந்து தங்கள் பிரயாணம் சிலமணி நேரம் தடைப்பட்டதாகவும், அந்தப் பெரிய உருவத்தைப்
பார்த்து தான் பெரிதும் பயந்ததாகவும், அங்கிருந்த காலத்தில் பல ஆலயங்கள், கடற்கரைகள், உறவினர் வீடுகள் என தான் சென்று வந்த விபரத்தையும் கூறினார்.
செல்வி அபிதாரணியின் கேள்வியின்போது, தனக்கு அங்கு தங்கி வந்தது மிகவும் பிடித்திருந்ததாகவும், மீண்டும் அங்கு போவதாயின் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் எனவும் கூறிமுடித்தார்.
அவருடைய பேச்சை நன்கு ரசித்த அனைவரும் அவரைப் பாராட்டி வாழ்த்தினர். அச்சமில்லை, அச்சமில்லை எனப் பாரதியாரின் பாடலுடன் அட்டகாசமாக அடுத்து வந்த செல்வன் ஹரிஸ் , பாரதியாரின் அப்பாடல் முழுவதையும் அதே வீராவேசத்துடன் பாடி அப்பாடல்களின் பொருளையும் விளக்கி ஒருங்கிணைப்பாளர் செல்வி அபிதாரணியின் கேள்விக்கு இடமின்றிக் கூறிமுடித்தார்.
அவரது உரையையும், பாவனையையும் நன்கு ரசித்து மகிழ்ந்த அனைவரும் அவரை பாராட்டி வாழ்த்தினர். தமிழர் வாழ்வின்
சுவடுகள் எனும் தலைப்பில் இளையோர்கள் நிகழ்வாக அடுத்த நிகழ்வு “தமிழர் வாழ்வின் சுவடுகள்” எனும் தலைப்பில் ஆரம்பமானது.
இந்நிகழ்விற்காக இலங்கையிலிருந்து இணைந்து கொண்ட செல்வன் துஷான் சிவலிங்கம்
கணியன்பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத்தொடங்கும் பாடலை முழுவதும் எடுத்துரைத்து, இக்காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் அன்று ஐயாயிரம் வருடங்களுக்கு முன் கவிஞன் எழுதி வைத்த தீர்க்கதரிசனத்தை வியந்துரைத்து, தீதும் நன்றும் பிறர் தர வாரா எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இலங்கையிலிருந்து இணைந்து கொண்ட மற்றும் ஒரு இளையவரான செல்வன் ஜனகன் சாரங்கன் உரையாற்றும்போது, புறநானூற்றில் வரும் மாங்குடி மருதனாரின் பாடல்வரிகளை வெளிக்கொணர்ந்து அன்றைய காலத்தில் இன்று காணப்படுவதுபோல் சமயங்கள், கடவுளர்கள் வழிபாடுகள் இருக்கவில்லையெனவும், மாறாக போரில் இறந்த வீரனைப்
புதைத்த இடத்தில் கல் ஒன்றை நாட்டி “நடு கல்” வழிபாட்டு முறைமையே இருந்தது என்பதை அறியக்கூடியதாக இருப்பதாகவும் கூறினார்.
சிட்னி நகரத்திலிருந்து அடுத்துப் பேசிய செல்வி மாதுமை கோணேஸ்வரன், வாழ்க்கை அழகாக இருக்க ஔவையார் பாடல், திருமூலர் அருளிய திருமந்திரம், திருவள்ளுவர் நமக்களித்த திருக்குறள் முதலியவற்றிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டி ஆசைதான் அழிவிற்கு காரணம் எனவே ஆசையை விடுத்து அளவோடு அழகாக வாழுங்கள் என்று தனது உரையை நிறைவு செய்தார்.
இளையோர் மூவரது உரையைக் கேட்டு , அவர்களின் ஆழமான தமிழ்ப் புலமை கண்டு மகிழ்ந்த அனைவரும் அவர்களை வாழ்த்தி நன்றி கூறி விடைகொடுத்தனர்.
அன்றைய நிகழ்வு இவ்விதம் இனிமையானபொழுதாகவும் நிறைவான நிகழ்வாகவும் ஆவூரான் சந்திரன் அவர்களால் செல்வன் துவாரகன் உதவியுடன் புதிய பழைய பாடல்களுடன் இடம்பெற்றது.
—0—