அன்னை பூபதி ஒரு குடும்பத்தின் சொத்தல்ல உலகத்தமிழர்களின் உன்னத சொத்து!
பட்டிருப்பு தொகுதித்
தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.அன்னை பூபதியின் 32 வது நினைவு அவரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட மட்டக்களப்பு நாவலடி அன்னை பூபதி நினைவு முற்றத்தில் நேற்று(20) இடம்பெற்றது. அதில் நினைவு சுடர்கள் 32 ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறுகையில்,
இன்று 32வது நினைவு தினத்தை நாம் நினைவுகூறும் வேளையில் நாட்டில் கொரோனா நோய் தாக்கத்தால் ஊரடங்கு சட்டம் ஒருபுறம் மக்கள் அதிகமாக கூடமுடியாத நிலை மறுபுறம் இந்த சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினராகிய நாம் அவர்களின் குடும்ப உறவினர்கள் அன்னை பூபதியின் பிள்ளைகளுடன் மட்டுப்படுத்தி இந்த நினைவு வணக்கத்தை அனுஷ்டிக்கின்றோம்.
தியாகிகள் சாகலாம் தியாகம் சாகாது என்ற உயர்ந்த தத்துவத்துக்கு இணங்க அன்னை பூபதி தாயார் மரணித்தாலும் அவரின் தியாகம் தமிழன் உள்ளவரை இந்த மண்ணில் வாழும். தியாக தீபம் அன்னை பூபதியினை பொதுவாக ஒரு தியாக தாயாகவே நாங்கள் அவரை நினைவு கூருகின்றோம். அவர் பொதுவான ஒரு குடும்பத்தினருக்கோ ஒரு மாவட்டத்திற்கோ ஒரு பிரதேசத்திற்கோ உள்ள தாய் அல்ல.
உலக தமிழர்களின் உன்னத தாயாக போற்றி வணங்கும் இந்த உன்னத நேரத்தில் இந்த நிகழ்வினை மக்களை அணி திரட்டி கடந்த வருடங்களை போல் நினைவு கூராவிட்டாலும் காலத்தின் சூழல் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு எப்படியும் அவரின் நினைவு முற்றத்தில் செய்ய வேண்டும் என்ற ஓர்மத்துடன் இதனை நினைவு கூருவதில் நாம் பெருமை அடைகின்றோம்.
அன்னைபூபதி, கடந்த 32 வருடங்களுக்கு முன் இந்திய அமைதிப்படை இம்மண்ணில் நிலை கொண்டிருந்த வேளையில் முக்கியமாக தியாகி திலீபன் காட்டிய வழியில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதென அன்னையர் முன்னணி முடிவு செய்தது.
இந்தியப்படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும், விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற இந்த இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து மாமாங்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக குருந்தமர நிழலில் அன்னையர் முன்னணியின் உண்ணா நோன்புப் போராட்டம்
தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் இதை அலட்சியப்படுத்தினர். ஆனால் உண்ணா போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு நகரில் மட்டுமன்று மாவட்டம் முழுவதிலும் உள்ள பெண்களும் மாணவிகளும் ஆர்த்தெழுந்ததைப் பார்த்தவுடன் இந்திய இராணுவ அதிகாரிகள் திகைத்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தைப் பார்க்கவும் ஆதரவு தரவும் மக்கள் அணி அணியாக அங்கு வரத்தொடங்கினார்கள். இப்போராட்டத்தை திசை திருப்ப பல வழிகளில் ஈடுபட்டனர்.
அன்னையர் முன்னணி தங்கள் உண்ணாநோன்பு போராட்டத்தை தொடர் உண்ணாநோன்புப் போராட்டமாக மாற்றித் தீவிரப்படுத்தியது. நாள்தோறும் ஏராளமான பெண்களும் மாணவிகளும் போராட்டத்தில் புதிய உத்வேகத்துடன் குதித்தனர். இது ஒரு மக்கள் போராட்டமாக வெடித்தது கண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அதிர்ச்சியடைந்தார்.
“இந்திய அமைதிப்படை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை
விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே போராடுகிறது” என வானொலி மூலம் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அவருடைய அறியாமையைக் காட்டியது. மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறல்ல. மக்களிலிருந்தே புலிகள் தோன்றி மக்களைக்காக்கப் போராடுகிறார்கள் என்ற உண்மையை அவர் உணரவில்லை. எனவே அவருடைய அறிவிப்பால் அன்னையர்கள் மனம்மாறிவிடவில்லை.
1988 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் நாளன்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி அன்னையர் முன்னணியை இந்திய இராணுவத்தினர் அழைத்தனர். அதனை ஏற்று அன்னையர்கள் திருகோணமலைக்குச் சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
பிரிகேடியர் சண்டேஸ் என்னும் உயர் அதிகாரி இந்திய அரசு சார்பில் கலந்துகொண்டு “புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும். அதற்குப்பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும்”என்று கூறினார்.
“எங்கள் நகைகளைக்கொடுத்து எங்களைக்காக்க எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்?”என்ற சூடான வினா அன்னையரிடமிருந்து கிளம்பியது.
பிரிகேடியர் சண்டேஸ் வாயடைத்துப் போனார். பேச்சுவார்த்தை முறிந்தது. உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
அன்னையர் முன்னணியினர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். பெப்ரவரி 10 ஆம் நாளன்று கொழும்பில் இந்தியத் தூதுவர் டிக்சிற் அன்னையர் முன்னணியினர்களுடன் பேசினார். ஆயுதங்களைக்கொடுக்க வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடினார். அவருடைய மிரட்டலுக்கு அன்னையர் அஞ்சவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை முறிந்தது.
ஆத்திரமடைந்த இந்திய இராணுவம் மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தைச் சுற்றி வளைத்தது. அப்பகுதியில் இராணுவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டது. பெப்ரவரி 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களும் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. யாரும் வெளியில் நடமாடக்கூடாது. நடமாடுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டது. அன்னையர் முன்னணிக்கு எதிரான இராணுவ அழுத்தங்கள் நாளுக்குநாள் அதிகரித்தன. அன்னையர்களும் பதிலடி கொடுக்கத் திட்டமிட்டார்கள்.
அடுத்த கட்டப் போராட்டமாக சாகும் வரை உண்ணா நோன்பு இருப்பதென முடிவுசெய்தார்கள்.
இவ்வாறான இக்கட்டுகளை சந்தித்து 31 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து தியாக மரணம் அடைந்த உன்னத தாயாரை இன்று 32 வருடங்கள் சென்று மீட்டுப்பார்ப்பது எல்லோரின் கடமை எனவும் மேலும் கூறினார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாரகர முதல்வர் தியாகராசா சரவணபவான், மாநகரசபை உறுப்பினர் வே.தவராசா மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.