Featureநிகழ்வுகள்
தமிழினத் தாய் பூபதி அம்மாவுக்கு வவுனியாவில் நினைவேந்தல்!
“ஈழத்தமிழர்களின் பாதுகாவலர்களாக வருகிறோம்” என்று கூறிக்கொண்டு ஈழத்துக்குள் புகுந்த இந்திய அமைதிப் படையினர், தாம் வருகை தந்த நோக்கத்துக்கு மாறாக ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருந்த மனிதகுலப் படுகொலைகளையும், வன்முறைகளையும் கண்டித்து, தனது 56ஆவது வயதில் 1988ஆம் ஆண்டு மார்ச் 19 முதல் ஏப்ரல் 19 வரை ஒரு மாத காலமாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிகழ்த்தி
தென்தமிழீழத்தில் தியாகச் சாவடைந்த பூபதி அம்மா அவர்களின் 32ம் ஆண்டு நினைவேந்தல் வடதமிழீழம் வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியாவில் ஆயிரத்து நூற்று ஐம்பது நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
ஏ9 வீதிக்கு அருகே அமையப்பெற்றுள்ள தமது போராட்டப் பந்தலில் இன்று 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை 1157 ஆவது போராட்ட நாளில், தமிழினத்தின் தாய் பூபதி அம்மா அவர்களின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி, தமிழர் தாயக சங்கத்தினர்
அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
‘ஒட்டுமொத்த தமிழினமே நிரந்தரமான பாதுகாப்பான சுதந்திரத்தை, இதயபூர்வமாக நேசித்தார்கள் என்பதன் வரலாற்று அடையாளம் தான்
தமிழினத்தாய் பூபதி அம்மா ஆவார்’ என்று தமிழர் தாயக சங்கத்தின் செயலாளரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவருமாகிய கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.