Featureநிகழ்வுகள்

பாடும் மீன் புத்தகத் திருவிழா!…. மனப் பதிவுகள்… பேராசிரியர் சி. மௌனகுரு.

பாடும் மீன் புத்தகக் கண்காட்சி காண  தேவநாயகம் மண்டபம் சென்றிருந் தேன்,சித்திரலேகாவும் தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாது என்னுடன் வந்திருந்தார். புதிய புத்தகங்கள் காண அவரும் அவாவினார், அவரும் ஓர் புத்தக ஆர்வலர்

நாம் அங்கு போகும் போது மேடையில் நின்று ஜிப்றி ஹசன் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நூல் பற்றிய அறிமுகம் அது.

ஹசன் காத்திரமான மனிதர் ஏலவே எனக்கு அறிமுகமானவர் அவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வாசித்தமையினால் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அவர் உரையைச் செவி மடுத்தவண்ணம் தேவநாயகம் மண்டபத்தினுள் நுழைந்தோம்,

அவரைப்பற்றி சித்திராவிடமும் கூறினேன்.

தேவநாயகம் அரங்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்ததுமேடையும் அதனை ஒட்டிய பகுதியும்முதலாவது பகுதி அதற்கு இப்பால் இரண்டாவது பகுதி கண்காட்சிப்பகுதி.

மேடையில் யில் நின்று ஹசன் உரையாற்றினார்

அதனோடு ஒட்டியிருந்த கதிரைகளில் ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் இருந்து அவர் உரையைச் செவி மடுத்துகொண்டிருந்தனர்.

மிக அதிகமானோர் அது பற்றி எதுவித கவலை யுமின்றி அதே ஹாலில் பரப்பி வைக்கப்பட்டி ருந்த நூல்களை பார்வையிட்டுக்கொண்டிருந்தனர்,

நான்கைந்து நீள் வரிசைகளில் இரு புறமும் பன்னூற்று கண்க்கான பல வித நூல்கள் வரிசையாகப் பரப்பி வைக்கப்பட்டிருந்தன

பலர் எம்மை வரவேற்றனர். பத்திநாதன், திலிப்குமார், பிரான்சிலிருந்து வந்திருந்த வாசுதேவன், ஸ்டலின் ஞானம்

கிளிநொச்சிகருணாகரன், மலர்செல்வன், மணிசேகரன், அக்கரைப்பற்று சிராஜ் மசூர் ஆகியோர் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

அனைவரிடமும் ஒரு சில வார்த்தைகள் அளவளாவி விட்டு “ விரைவில் நான் போக வேண்டும் முழு நூல்களையும் ஒரு பருந்துப்பார்வையில் அளைந்து விட்டு வருகிறேன்” என என்னை விடுவித்துக்கொண்டேன்

நூல்களை மேயத் தொடங்கினேன்.

முறையான ஓர் ஒழுங்கு முறைக்குள் அவை பரப்பப்படவிலையாயினும் சிறிதளவு ஓர் முறைமை மேற்கொள்ளப்பட்டும் இருந்த து என்பதற்கு பெரியார் நூல்கள், மார்க்ஸிஸ நூல்கள், அம்பேத்கார் நூல்கள் தனித் தனியாக ஒரு வரிசையில் இருந்தமையை உதாரணமாகக் கூறலாம். ஏனைய நூல்கல் அங்கொன்று இங்கொன்றாக பரம்பியிருந்தன

இடைக்கிடை மிக அருமையான நூல்கள் பளிச் பளிச் என்று மின்னின. ஜிப்றி ஹசனின் உரையையும் பின்னர் பேசிய கருணாகரன் உரையையும் காதில் வாங்கிய வண்ணம் நூல்களை மேய்ந்து கொண்டிருந்தேன். முக்கிய மான நூல்களைக் கையில் எடுத்தபோது உரையிலிருந்து கவனம் நூல்களுக்குள் சென்று விட்டது

முதலில் கண்ணைக் கவர்ந்த நூல்:

அலெக்ஸி ஹெஸ்ஸ்லியின் மிகபெரிய நாவலான அளவிலும் தரத்திலும் மிகப்பெரிய நூலான ROOTS எனும் நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பான வேர்கள் எனும் நூல்.

ஆயிரக்கண்க்கான பக்கங்களைக்கொண்ட அந்த நூலின் விலையும் மிக அதிகம்தான். அவரது தலை முறைகள் நூலும் அருகில் இருந்தது. உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் வாழும் ஆபிரிக்க சமூகத்தை அறிய அந்நூல்கள் மிக மிக உதவும்

ஹார்ட் கிறைவின் புகழ் பெற்ற ஆய்வான Nadars of Tamil Nadu எனும் ஆங்கில நூலின் மொழி பெயர்ப்பான

தமிழகத்தில் நாடார் எனும் நூல் என்னைகவர்ந்த

இன்னொரு நூல். கடந்த 150 வருட காலமாக நடந்த சமூக பொருளாதார மாற்றத்திற்கு நுண்ணுணர்வுடன் எதிர் வினை ஆற்றி மிகவும் மேலெழுந்து.

இன்று தமிழக அரசியல் பொருளாதாரத்தில் பெரும் சக்தியுடன் இருக்கும் சமூகம் நாடர் சமூகம். தம் நிலையிலிருந்து தாங்கள் உயர்ந்து

செல்வதர்காக அவர்கள் செய்த போராட் டத்தை இந்ந்நூலில் கூறுகிறார் அமரிக்க பேராசிரியரான ஹார்ட் கிறேவ்.

அடுத்து என்னை ஈர்த்த் நூல் பேராசிரியர் சர்மாவின்

பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் – கி.பி.600 வரையிலான அடித்தட்டு வகுப்பின் சமூக வரலாறு : எனும் நூல்

பண்டைய இந்தியாவின் சூத்திரர்களின் வரலாறு குறித்த ஒரு அசலான ஆய்வு நூல் இது . பண்டைய இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்று ஆய்வில் நிகரற்ற ஆளுமையான பேராசிரியர் ஆர்.எஸ்.சர்மா அவர்கள் எழுதிய இந்நூல் பல பதிப்புகள் கண் ட து இலக்கிய, தொல்பொருள் ஆய்வு அனைத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு கறாராக அறிவியல் பூர்வமாக அணுகி எழுதப்ப்ட்ட நூல் இது.

சூத்திரர்களது பண்டைய வரலாற்றை மட்டும் கூறுவதாக இல்லாமல் அதனை அவர்களுடைய பிற்கால மற்றும் சமகால நிலையோடும் இணைத்து விளக்கும் நூல்.

இவை தமிழில் வந்திருப்பது தீவிர அறிவியல் நூல் வாசகர்களுக்கு ஓர் வரப்பிரசாதம். இந்நூல்கள் பற்றியும் கண்காட்சியை ஒழுங்கு செய்தோர் அறிமுக உரைகள் வைத்திருக்கலாமே என எண்ணிக் கொண்டேன்

சுருங்கச் சொன்னால் கண்காட்சி என்னை பொதுவாக ஏமாற்றவில்லை

இலங்கையில் நடக்கும் பெரும்பாலான புத்தக் கண்காசிகளில் புனைகதை, கவிதை என்பன பற்றிய நூல்களும் அது சம்பந்தமான உரையாடல்களுமே அதிகம் புழக்கத்தில் இருக்கும்

இப்பின்னணியில் அறிவியல் நூல்களுக்கு பாடும் மீன் புத்தகக் கண்காட்சியில் அதிக முக்கியம் அளித்திருந்தமை ஒரு குறிப்பிடப்பட்ட ஓர் முக்கிய அம்சமாக எனக்குத் தெரிந்தது.

ஈழத்து நூல்கள் அதிகம் இல்லாமை பெரும் ஏமாற்றம் தந்தது.

இருந்த சில நூல்களும் தமிழ் நாட்டில் அச்சானவை.

இலக்கிய நூல்கள் மாத்திரமன்றி அறிவியல் நூல்களும் இலங்கையில் வந்துள்ளன. அவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கலாம்.

ஒன்றைரை மணி நேரம் கழித்திருப்பேன் மனைவி சிறிது களைப்படைந்து விட்டார் . போவதற்குப் புறப்பட்டோம்

இடையில் சிறாஜ் மசூர் எதிப்பட்டார்.

மனைவி மக்களுடன் கண்காட்சிக்கு வந்திருந்தார், மனைவியையும் பிள்ளைகளையும் எமக்கு அறிமுகம் செய்து வைத்தார் அவர் சிறிய மகள் எனக்கு கைதந்தாள்

திடீரென எனக்கு முன் வந்த இரண்டு இளைஞர் சேர் நாம் உங்களின் முகநூல் வாசகர் எனக்கூறி தம்முடன் படம் எடுத்துக்கொண்டனர். தம்மை திவா செல்வநாயகம், மிது முதுர்சன் என அறிமுகம் செய்துகொண்டனர். ஹாலை விட்டு நானும் சித்திராவும் வெளியில் வந்தோம்.

வெளியே மூன்று ஸ்டோல்கள் இருந்தன. ஒன்று மூன்றாவது கண்ணின் வெளியீடுகள். மற்றது சூரியா பெண்கள் நிலைய வெளியிடுகள். அவற்றில்தான் மட்டக்களப்பு வெளியீடுகள் காணப்பட்டன அதுவும் அந்த அந்த அந்த நிறுவனங்களின் வெளியீடுகள்.

வெளியே இருந்த இன்னொரு ஸ்டோல் வைத்திருந்தவர் மொஹமட் சப்ரி.

பாத்திமா புத்தக நிலையம் அது. சிரித்துக்கொன்டே அவரிடம்

“இலங்கை நூல்கள் இல்லையே இங்கு உண்டா” எனக் கேட்டேன்

ஓம் சேர் என்றார். அவர் கடையிலிருந்த நூல்களை அழைந்தேன்.

நல்ல புனைகதை நூல்கள் சில அங்கு இருந்தன.

மிகபெரும்பாலானவை தமிழக எழுத்தாளர் எழுதிய நூல்கள்.

“ ஈழத்து எழுத்தாளர் நூல்கள் இல்லையா..? “ என்றேன்

அவை இன்னும் வெளியே எனறு சிரித்துக்கொண்டே வரந்தாவுக்கு வெளிப்பக்கம் காட்டினார். வரந்தாவுக்கும் வெளியே அவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“ இன்னமும் வெளியேதானா..?. “ என்றேன்

அவர் சிரித்துக்கொண்டார். அவரிடம் அ,மு பரமசிவனின் ஒரு நூலும் ,வெளி ரங்கராஜனின் ஒரு நூலும் வாங்கிக்கொண்டேன்

மறு நாள் வந்து சில நூல்கள் வாங்குவதாகத் திட்டம்.

அத்தோடு என்னை மறு நாள்ஒழுங்கமைப்பாளர்கள் சார்பில் பத்திநாதன் ஓர் உரையாற்றுமாறு அழைத்திருந்தார். நான் ஓர் தலைப்பும் கொடுத்திருந்தேன்

தலைப்பு: ஈழத்து இலக்கியம் என்ற கருத்துருவாக்கம்-

— ஓர் கதை கூறல் என்பதாகும்.

1960 களிலிருந்து ஈழத்து நவீன இலக்கியம் என்ற எண்ணக் கரு உருவாகியது. எமது வாழ்வை எமது அனுபவங்களை எமது பேச்சு நடையில் நாம் கூற வேண்டும் என ஒர் இயக்கமாகவே அது ஆரம்பித்தது.

தேசிய இலக்கியம் ,பிரதேச இலக்கியம், மண்வாசனை

என அது பல முகங்களைக் கொண்டிருந்தது. மக்கள் பேச்சு நடையிலே, அடிமட்ட மக்களின் பிரச்சனைகளை அவ்விலக்கியங்கள் பேசியபோது அப்பேச்சு வழக்கை இழிசனர் வழக்கு என்றும் அவ்விலக்கிய நூல்களை இழிசனர் இலக்கியம் எனவும் கேலி பேசினர் பழம் பண்டிதர்கள் சிறு கதை அல்ல அது சிறு கத்தை எனக்கேலி பேசியோரும் உண்டு. அது தமிழ் இலக்கிய மரபுக்குத் தகாது எனவும் கண்டித்தனர் பாரம்பரியம் பேசியோர், இதற்கு உரை எழுதுங்கள் விளங்கிக் கொள்கிறோம் என்று கிண்டல் பண்ணினர் தமிழக எழுத்தாளார்களான அகிலனும் கி,வா ஜகந்நாதனும் இன்னும் பலரும்.

அந்தக் கிண்டல்கள் இன்னும் ஓயவில்லை. அதற்கு எதிராக அன்று போராடி எழுந்த இலக்கியமே ஈழத்து இலக்கியம்

ஈழம் என்ற சொல் அன்று இலங்கை என்ற அர்த்தத்தில் பிரயோகிக்கப்பட் டது. அக்காலத்தில் நாம் இளைஞர்களாயிருந்தோம் இலட்சியம் பேசும் இள வயது

1960 களில் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான

இலங்கையர்கோன், சம்பந்தன் வைத்திலிங்கம்

பித்தன் ஷா ஆகியோருடன் எமக்கு நேரடித் தொடர்பு இருந்தது.

யாழ்ப்பாணத்தில் நான் வைத்திலிங்கம் மகள் வீட்டில்தான் குடியிருந்தேன். ,வாடகை வாங்க மாதம் தோறு வரும் அவர் எமது வீட்டில் இளைப்பாறி தேநீர் அருந்தி இலக்கிய உரையாடல் செய்து செல்வார்.

பின்னாளில் தமிழில் கவிதையில் ஈழத்து பேச்சோசையை பயன் படுத்திய நீலாவணன் , மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராஜன் ஆகியோருடனும் அடிமட்ட வாழ்க்கையை ஈழத்து இலக்கியத்தில் கொணர்ந்த டானியல், ரகுநாதன், டொமினிக் ஜீவா போன்ற முன்னோடிகளுடன் மற்றும்

அஸ அப்துல் சமது, எம் எஸ்,எம் இக்பால் , நுஃமான், மருதூர்க் கனி, மருதூர்க்கொத்தன் ஆகியோருடனும் 1970,1980 களில் மிக நெருக்கமான தொடர்பு இருந்தது.

ஈழத்து இலக்கியம் என்ற கருத்துருவை முன் வைத்து வளர்த்த விமர்சகர்களான ஏ,ஜே கனகரத்தினா, கைலாசபதி, சிவத்தம்பி வித்தியானந்தன், சுபைர் இளங்கீரன் , காவலூர் ராஜதுரை, எஸ் பொன்னுதுரை, தளைய சிங்கம், எச் எம் பி, முகைதீன் அனைவருடனும் எனக்கு நல்ல உறவு இருந்தமை நான் செய்த பாக்கியம்.

இன்று ஈழத்து இலக்கியம் என்ற ராஜபாட்டையில் செல்லும் ஈழத்து எழுத்தாளர்களுக்கு….. அன்று உடலில் ரணகாயப்பட்டு முள்ளுக்காடுகளை வெட்டி பாதை சீராக்கி கொடுத்த இம்முன்னோடிகளையும் அவர்களின் பிரயாசங்களையும் துன்பங்களையும் இன்றைய தலை முறையில் எத்தனை பேர் அறிவார்?

இந்தப்பழங்கதையை ,அந்த அனுபவங்களை,

கதை கூறும் பாணியில் இளம் தலைமுறைக்குக் கூற எண்ணித்தான் அந்த தலைப்பைகொடுத்திருந்தேன்

முதல் நாள் ஜிப்றி ஹசனின் உரையை சிலர் செவி மடுக்க அதனைக் கவனியாது சிலர் நின்றமை அங்கு உரையால் ஏதும் பயனில்லை என்ற எண்ணத்தை எனக்குத் தந்தது.

என் உரையை ஒரு சடங்காக நிகழ்த்த நான் விரும்பவில்லை. ஏற்பாட்டாளர்களும் என்னைப் போன்ற மனோநிலையில்தான் இருந்தனர். ஆனால், என்னிடம் கூறத் தயங்கியிருந்தனர்.

எனக்கு பத்திநாதன், ஞாயிறு பின்னேரம் போன் பண்ணி “ சேர் இந்த உரையை இன்னோரு நாள் வைத்துக்கொள்ள முடியுமா? நாங்களே இன்னும் திறமாக ஒழுங்கு செய்கிறோம் “ எனக்கேட்டார்.

மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன். அவர்கள் பட்ட பெரும் சிரமங்களையும் நான் அறிவேன்,இதில் பெற்ற அனுபவம் அவர்களுக்கு இதனை விடச் சிறப்பாக இன்னொரு புத்தகத் திருவிழா நடத்த உதவும். அனைவரையும் அங்கு ஒன்றுசேரக் கணடது பெரு மகிழ்சி தந்தது

இவ்வண்ணமாகப் பாடும் மீன் புத்தகத் திருவிழா நடந்து முடிந்தது.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.