அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதா? நடந்தது என்ன?
கஜகஸ்தான் விமான விபத்து: கஜகஸ்தான் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த ஆரம்ப விசாரணையில், பறவை மோதியதால் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
எனினும், விபத்துக்குள்ளான விமானத்தின் மீது ரஷ்ய வான் பாதுகாப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது குறித்த விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.
அஜர்பைஜானின் பாகுவிலிருந்து செச்சினியாவில் உள்ள ரஷ்ய நகரமான க்ரோஸ்னிக்கு புறப்பட்ட விமானத்தில் 67 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர்.
42 அஜர்பைஜான் குடிமக்கள், 16 ரஷ்யர்கள், ஆறு கஜகஸ்தான் மக்கள் மற்றும் மூன்று கிர்கிஸ் குடிமக்கள் உட்பட 67 பேர் விமானத்தில் இருந்தனர். சமீபத்திய தகவலின்படி, விபத்தில் முப்பத்தெட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், விபத்தின் போது 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை மேற்கு கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் அருகே நடந்தது.
அவசர தரையிறக்கத்திற்கான அனுமதிக்காக காத்திருந்தபோது அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் எம்ப்ரேயர் EMB 190 விமானம் அக்டாவ் விமான நிலையத்தின் மீது வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
அவசர தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
வைரலாகும் காணொளிகள்
குறித்த விமானம் விபத்துக்குள்ளானபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், விமானத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான துளைகள் விமானத்தை ரஷ்யர்கள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்ற வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளன.
இந்த துளைகள் “சிதைவு சேதத்தால்” ஏற்பட்டதாகத் தெரிகிறது என்று பலரும் கூறிவருகின்றனர்.
டிசம்பர் 25 அன்று காலை செச்சினியா மீது ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பல தகவல்களுடன் வான் பாதுகாப்பு அமைப்புகளின் தாக்குதல் சாத்தியமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஏதோ ஒன்றின் மீது மோதியதா?
அத்தகைய ஒரு காணொளியில் விமானத்தின் உள்ளே இருந்த லைஃப் ஜாக்கெட்டுகளில் தோட்டா போன்ற துளைகள் இருந்தன. டெய்லி மெயில் அறிக்கையின்படி, விமானம் மிகவும் கடினமான ஏதோ ஒன்றின் மீது மோதியதாக கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில், இது பறவைகளின் கூட்டத்தின் தாக்குதல் என்று நம்பப்பட்டது. ஆனால் பின்னர் அது ஒக்ஸிஜன் தொட்டியில் ஏற்பட்ட வெடிப்பு என்றும் கூறப்பட்டது.
விபத்தின் பின்னர் விமானத்தின் காட்சிகள், விமானத்தின் வால் பகுதியில் தரையிலிருந்து வான்வழி ஏவுகணை தாக்குதலின் பெரிய தடயங்கள் இருப்பதைக் காட்டுகின்றன என்று ரஷ்ய சுயாதீன ஊடக நிறுவனமான மெடுசா தெரிவித்துள்ளது.
தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இராணுவ மற்றும் சிவிலியன் விமானங்களின் ஏராளமான படங்கள் மற்றும் காணொளிகளில் உடற்பகுதியில் இதே போன்ற தோற்றமுடைய துளைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
விபத்திற்குப் பின்னால் ரஷ்யா
க்ரோஸ்னியில் தரையிறங்கும் முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, வெடிச்சத்தம் கேட்டதை உயிர் பிழைத்தவர்கள் நினைவு கூர்ந்ததாக, சுயாதீன ரஷ்ய ஊடகமான மீடியாசோனா தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு விமானத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் அது துண்டுகளாக உடைந்ததாகவும் அறிக்கை கூறியது.
ரஷ்யாவின் ஃபெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி (ரோசாவியாட்சியா) ஆரம்பத்தில் விமானம் பறவைக் கூட்டத்துடன் மோதியதாகக் கூறியது, இதனால் விமானி அவசரமாக தரையிறங்க முயன்ற போது விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஜேம்ஸ் ஜே மார்லோவின் எக்ஸ் தளப் பதிவில், ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் க்ரோஸ்னியில் உக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.
தீவிரமடையும் வாதங்கள்
ஃப்ளைட் ரேடார் 24 இல் விமானத்தின் பாதையின்படி, விமானம் முதலில் தாகெஸ்தான் குடியரசின் மீது பறந்து கொண்டிருந்தது, அதன் பின்னர் விமானம் ரேடர் தொடர்பில் இருந்து மறைந்துவிட்டது
இது விமானம் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பினால் தாக்கப்பட்டதை குறிக்கிறது என்று கூறப்படுகிறது.
இருப்பினும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு விமானம் மீண்டும் ரேடாரின் இணைப்பில் வந்துள்ளது. மேலும் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு மேற்கு கஜகஸ்தானின் மீது பறந்து கொண்டிருந்தது.
இதற்கிடையில், விபத்துக்கு முந்தைய கடைசி தருணங்களின் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
விமானத்தில் இருந்த ஒரு பயணி, விபத்துக்கு முன்னும் பின்னும் நடந்த பயங்கரமான தருணங்களைப் படம் பிடித்தார், இது விமானத்திற்குள் நிலைமை எவ்வளவு குழப்பமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.
ரஷ்ய ஊடகமான RT பகிர்ந்து கொண்ட காட்சிகளில், ஒரு பயணி தலையில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்ததையும், மற்றொரு பயணி விமானத்திலிருந்து வெளியேற முயன்றதையும் காண முடிந்தது.
விபத்துக்கு முன் ஒரு நபர் பிரார்த்தனை செய்வதையும் காணொளி காட்டுகிறது.
இதேவேளை, விபத்து நடந்த இடத்திலிருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக அஜர்பைஜான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் பகுப்பாய்வு விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.