அது ஒரு சிறப்பாகும்!… கவிதை … சங்கர சுப்பிரமணியன்
பூச்செடி ஒன்று வாங்கிடவே நானும்
பலநாட்களாய் காத்திருந்தேன்
நண்பனிடம் ஆசையை சொன்னவுடன்
ஒருநாள் சந்தை செல்வோமென்றான்
சொன்னபடியே நாங்கள் சந்தை சென்றோம்
பூச்செடிகள் பலவற்றை பார்வையிட்டோம்
செழிப்பான ரோஜா செடியை இருவரும்
ஆளுக்கு ஒன்றென வாங்கி வந்தோம்
மாதங்கள் சிலவும் கடந்து சென்றன
பூச்செடிகளும் நன்றாய் பூத்தன
என் வீட்டுச் செடி பூத்ததில் ஒரு மகிழ்ச்சி
நண்பன் வீட்டில் பூத்ததில் பெருமகிழ்ச்சி
பெருமகிழ்ச்சிக்கு காரணம் என்னவெனில்
அவன் வீட்டில் பூத்துக் குலுங்கியதுதான்
அவர் வீட்டிலோ பூத்துக் குலுங்கும்போது
நம்வீட்டில் ஏன் இப்படி என்றாள் தங்கை
பொறாமை படுகின்றாயா என கேட்டதற்கு
இல்லை பொதுவாக கேட்டேன் என்றாள்
உண்மை காரணத்தை சொல்லுகின்றேன்
உணர்ந்து கொள்வாய் நீயும் என்றேன்
நானும் செடிநட்டேன் தண்ணீரும் விட்டேன்
அதைத்தவிர வேறேதும் செய்யவில்லை
போதுமென்ற மனம் பொன்செயும் மருந்தென
எதிர்பார்த்து எதையும் நான் செய்யவில்லை
முயற்சி திருவினையாக்கும் என்பதனால்
செடியை நன்றே நண்பன் பாதுகாத்தான்
வாடிடாமல் தண்ணீர் விட்டு காத்து வந்தான்
வகை வகையாய் உரமும் போட்டு வந்தான்
நண்பன் அனைத்தையும் செய்ததினாலேயே
அவன் வீட்டில் பூக்கள் பூத்து குலங்கியது
பூக்களை எல்லோரையும் தேடி கொடுத்தான்
பூச்செடியை புகழ்ந்தும் சொல்லிவந்தான்
பூக்களை பெற்றவர்கள் ஆர்வமாய் கேட்டனர்
நண்பனை பாராட்டவும் செய்தனர்
நம் வீட்டில் பூச்செடி வளர்ப்பதைப் போலவே
அவன் வீட்டிலும் பூச்செடி வளர்க்கிறான்
நான் செடி வளர்ப்பது மன மகிழ்ச்சிக்காகவே
அவன் வளர்ப்பது மனமகிழ்வுக்கு மட்டுமல்ல
அவரவர் எண்ணத்தில் ஆயிரமாயிரம் காரணங்கள்
அவர் செயல்கள் கூறிடும் வெவ்வேறு நோக்கங்கள்
அது ஒரு கற்பனை புது வெள்ளம்
நினைவிலே வந்து வந்து அலை பாயும்
அது ஒரு கற்பனை புது வெள்ளம்
நினைவிலே வந்து வந்து அலை பாயும்
பூச்செடிகளும் பலவாய் பூத்து நிற்பதே
அது ஒரு சிறப்பாகும்!