சுனாமி ஆழிப்பேரலையால் உயிர் நீத்தோரின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் (Photos)
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்த காலங்கள் கடந்துள்ளன.
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி நாட்டில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர்.
கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் உள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரி மலர் தூவி, தீபமேற்றி, உணவுப் பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மத வழிபாடுகளும் நடைபெற்றன.
மேலும், இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் இராஜஜோகினி ஜெயக்குமார், முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் நடராசா தசரத ராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான 20ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் பிரார்த்தனை நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நினைவுத்தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட சுனாமி தூபியாகவும் விளங்குகிறது.
தற்போது இந்த நினைவுத்தூபி நகர சபையால் புனர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
நரசிங்கர்ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன், முத்துமுகமது மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.