மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் ஒப்படைக்கப்படுமெனவும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் குழுவை அமைத்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அந்த தீர்மானங்களை நாங்கள் பிரச்சினைக்கு உட்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் புரிதல் இருக்கின்றதா என்பதில் எமக்கு சந்தேகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவர்களுடைய தீர்மானங்களை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் ஏற்றுக்கொள்வார்களானால் அது அவர்களுடைய தீர்மானமாகும். எனவே அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எங்களுக்கு எப்போதும் மக்களுடைய ஆசீர்வாதமும் பாதுகாப்பும் இருக்கின்றது. எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு புத்தரின் ஆசீர்வாதம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.