கிறிஸ்மஸ் மரம் எரிப்பு; சிரியாவில் வெடித்தது போராட்டம்!
சிரியாவில் கிறிஸ்மஸ் மரத்தை எரித்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நகரமான சுகைலாபியாவின் (Suqaylabiyah) பிரதான சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிவதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி காட்டுகிறது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு போராளிகள் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்திய எழுச்சிக்கு தலைமை தாங்கிய முக்கிய இஸ்லாமியப் பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கூறியுள்ளது.
அதேநேரம், சிரியாவில் மத மற்றும் இன சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.
கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாட சிரியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராவதற்கு முந்தைய நாள் இரவு, முகமூடி அணிந்தவர்கள் கிறிஸ்துமஸ் மரத்தில் மர்மமான திரவத்தை ஊற்றுவதை சமூக ஊடகங்களில் காண முடிந்தது.
அவர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார்களா அல்லது அது கொழுந்து விட்டு எரிவதற்கு வழிவகுத்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எவ்வாறெனினும், கிறிஸ்மஸ் மர தீ வைப்புக்கு எதிராக செவ்வாயன்று (24) தலைநகர் டமாஸ்கஸின் சில பகுதிகள் உட்பட பல தெருக்களில் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
டமாஸ்கஸின் கஸ்ஸா (Kassa) சுற்றுப்புறத்தில் சிலர் சிரியாவிலுள்ள வெளிநாட்டு போராளிகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.
டமாஸ்கஸின் பாப் டூமா சுற்றுப்புறத்தில், எதிர்ப்பாளர்கள் சிலுவை மற்றும் சிரியக் கொடிகளை ஏந்தி, “எங்கள் சிலுவைக்காக எங்கள் ஆன்மாக்களை தியாகம் செய்வோம்” என்று கோஷமிட்டனர்.
குர்துகள், ஆர்மேனியர்கள், அசிரியர்கள், கிறிஸ்தவர்கள், ட்ரூஸ், அலவைட் ஷியா மற்றும் அரபு சுன்னிகள் உட்பட பல இன மற்றும் மத குழுக்களின் தாயகமாக சிரியா உள்ளது.
இவர்களில் இறுதியாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பஷர் அல்-அசாத்தின் ஜனாதிபதி பதவி கிளர்ச்சிப் படைகளிடம் வீழ்ந்தது, அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி முடிவுக்கு வந்தது.
அதன் பின்னர் பல இடம்பெயர்ந்த சிரியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர் – செவ்வாயன்று, 25,000 க்கும் மேற்பட்ட சிரியர்கள் நாட்டிற்குத் திரும்பியதாக துருக்கி கூறியது.