கச்சதீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசுடன் பேசுவதற்குத் தயார்
கச்சதீவை மீள இந்தியாவுக்கு ஒப்படைக்குமாறு எவ்வித கோரிக்கையும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு விடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு ஏதாவது கோரிக்கை விடுக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாட தயார் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கச்சதீவை மீள இந்தியாவுக்கு ஒப்படைக்க வேண்டுமென்று தமிழக ஆளும் கட்சியான தி.மு.க. எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கச்சதீவு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இதுவரை எழவில்லை. எங்களிடம் அது தொடர்பில் எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவும் இல்லை. இந்திய அரசியல் கட்சியொன்றே கூறுகின்றது. இதனால் இதனை முக்கியத்துவமாக பார்க்க முடியாது. ஆனால் இந்திய அரசாங்கம் ஏதாவது கோரிக்கை விடுக்குமாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாடலாம் என்றார்.