சிலிண்டர் சின்னத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை! – தேசியப் பட்டியல் சர்ச்சைக்கு கஞ்சன விளக்கம்
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களை வென்றது. இதில் சில கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தாலும் அவர்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமையே தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பதில் சர்ச்சைகள் எழக் காரணமாக அமைந்துள்ளது.
பிரதான சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துக்கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பத்திலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு பதிலளித்திருந்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகரவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு கூட்டணியின் எந்த கட்சியும் மறுப்பு தெரிவித்திருக்கவில்லை.
எனினும், அதன் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு ரவிகருணாநாயக்க மற்றும் பைசர் முஸ்தப்பா ஆகியோரை நியமித்திருந்தாலும் யாரை நியமிப்பது என்பதில் பல இழுபறிகளும் நியமித்ததன் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியில் கூட்டணியமைத்துள்ள கட்சிகள் சில அதனை மறுத்திருந்தன.
எதிர்ப்பார்ப்புகளின் படி, கஞ்சன விஜேசேகர நியமிக்கப்படாமை தொடர்பில் குறித்த அரசியல் நிகழ்வில் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
“ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து இரண்டு வாரத்தில் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பித்திருந்தோம். நாங்கள் யாரும் தேசியப் பட்டியலை எதிர்ப்பார்த்து போட்டியிடவில்லை” எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட்ட குழு பிரிந்து வெவ்வேறாக தனியாக போட்டியிடுவதா அல்லது ஒரு கூட்டணியாக போட்டியிடுவதா என்பதே எங்களுடைய முதலாவது காரணியாக அமைந்திருந்தது.
ஒரு கூட்டணியாக போட்டியிட தீர்மானிக்கும் போது எங்களுக்கு மூன்று யோசனைகள் முன்மொழியப்பட்டன. அதில், முதலாவது ரணில் விக்கிரமசிங்க சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடுவது, இரண்டாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கதிரை சின்னத்தில் போட்டியிடுவது, மூன்றாவதாக பொதுச் சின்னம் ஒன்றில் கூட்டணியாக போட்டியிடுவது அவையாகும்.
யானை சின்னத்தில் போட்டியிட பெரும்பாலானோர் விரும்பவில்லை. கதிரை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் போட்டியிட விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய பொதுச்சின்னம் சிலிண்டர் சின்னம் என்பதால் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தோம்.
கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் ஷியாமளி பெரேரா அவர் விரும்பிய இருவரின் பெயரை முன்வைத்துள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளருக்கே தேசியப் பட்டியல் ஆசனங்களை நியமிக்க உரிமை உண்டு.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வந்து ஆதரவு தெரிவித்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கருத்தாக இருந்தது.
எனது பெயரை தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு முன்மொழிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.