தீபாவளி பண்டிகையை தமிழர் கொண்டாடத் தொடங்கியது எப்படி?… சங்கர சுப்பிரமணியன்
தீபாவளி என்ற பண்டிகைபற்றி பலவகையான கதைகள் வழங்கி வருகின்றன. எதைப்பற்றி கருத்து கூற வேண்டுமென்றாலும் சான்றுகளுடன் கூறவேண்டும். கற்றறிந்த பெருமக்களிடையே ஒன்றைக் கூறவேண்டுமெனில் எவ்வித ஆதாரங்களும் இன்றி எடுத்து வைப்பது சற்றும் பொருத்தமல்ல.
நம்பிக்கை என்பது வேறு ஆதாரம் என்பது வேறு. தீபாவளிப் பண்டிகை என்பது தமிழர் பண்டிகை அல்ல. சில பழக்கங்களை காரணம் தெரியாமலேயே வழக்கமாக செய்துவருவோம். வாலை இலையில் சாப்பிடும்போது இலையை சுற்றி தண்ணீர் தெளித்து அதன் பின்னரே சாப்பிடும் வழக்கம் இருந்தது. இன்னும் இருக்கிறது.
இதன் காரணத்தை சரியாக சொல்ல முடியுமா? இதற்கு பலர் பல காரணங்களைச்
சொன்னாலும் ஒரு காரணம் எனக்கு சரியெனப்பட்டது. அதை உங்களிடம் பகிர்கிறேன். அதாவது காடுகளில் வாழ்ந்த மனிதன் காய், கனி மற்றும் கிழங்குகளை பச்சையாக கைகளில் ஏந்தியே சாப்பிட்டு வந்தான். அதன்பின் நெருப்பைக் கண்டுபிடித்தான்.
நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் சமைக்க ஆரம்பித்தான். சமைத்த உணவினை காய் கனிகளை கையில் ஏந்திச் சாப்பிடுவது போல சாப்பிட முடியாது. சமைத்த உணவு சூடாக இருந்ததால்
சூடுதாளாமல் இலையை தரையில் விரித்து அதில் உணவை வைத்தான். அவ்வாறு வைத்தபின் சாப்பிடுமுன் தரையிலுள்ள புழு பூச்சிகள் இலைக்குள் வந்துவிடாதபடி அகழிபோல் இலையைச்சுற்றி தண்ணீரை விட்டான்.
அப்படிச் செய்ததில் பொருள் உள்ளது. ஆனால் அதையே இன்று நாகரிகம் அடைந்து சாப்பாட்டு மேஜையில் உண்ணும் போதும் இலையைச் சுற்றி தண்ணீரை ஊற்றிக்கொண்டு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? அவசியம் என்றால் அது அவரவர் விருப்பம்.
அதேபோல் தான் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும் அவரவர் சம்பந்தப்பட்டது. ஆனால் தீபாவளி என்பது தமிழர் பண்டிகையே அல்ல என்பது மட்டும் உண்மை. இதற்கான ஆய்வு மற்றும் வரலாற்று உண்மை மூலம் இதைக் காணலாம்.
தீ என்பது தமிழின் வேர்ச்சொல். அதை விளக்கில் ஏற்றும்போது தீவிளக்கு என்று நாம் சொல்வதில்லை. தீயை விளக்கில் ஏற்றினாலும் ஏற்றாவிடினும் விளக்கை விளக்கென்றே சொல்கிறோம். ஆதாரம் குன்றிலிட்ட விளக்கு. அகல்விளக்கு மற்றும் பாவைவிளக்கு.
இந்த தீ என்ற சொல் வடக்கில் சென்று விளக்கில் ஏற்றும்போது விளக்கு தீப் ஆனது. அடுத்ததாக ஆவுளி என்றால் வரிசை எனப் பொருள். தீப் மற்றும் ஆவுளி இரண்டும் இணந்து தீபாவளி ஆனது. அதாவது விளக்குகளை வரிசையாக வைப்பது ஆகும். இப்படி விளக்குகளை வரிசையாக வைத்து கொண்டாடும் விழாதான் தீபாவளிப் பண்டிகையாகும்.
இது தமிழர் பண்டிகை அல்ல என்றாலும் இப்பண்டிகையைக் கொண்டாடும் வழக்கம்
தமிழரிடம் உள்ளது. இவ்வழக்கம் தமிழரிடம் எவ்வாறு வந்தது? இதற்கு தமிழர் வரலாற்றையும் வாழ்வியல் முறையையும் நன்கு அறிதல் வேண்டும். தமிழரின் வாழ்வியல் முறையான ஆசீவகத்தை விட்டு ஜைன மதத்தை நிறுவினார் மகாவீரர்.
இவர் மதத்தை பரப்பிவரும்போது பீகாரிலுள்ள பாவாபுரியிலுள்ள அரசனின் அரண்மனையில் தங்கி அறச்சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். சொற்பொழிவு விடியவிடிய நடந்தது. சொற்பொழிவில் கலந்துகொண்ட மக்கள் ஆங்காங்கே நித்திரையில் ஆழ்ந்தனர். விடிந்து பார்த்தபோது மகாவீரர் அதிகாலையில் காலமாகியிருந்தார்.
இதையறிந்த மன்னன் மக்களுக்கு ஞான ஒளி ஏற்றிவைத்த மகாவீரர் இறந்தநாளை விளக்குகளை ஏற்றிவைத்து கொண்டாடும்படி வேண்டினார். அவரது வேண்டுகோளின்படி மக்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றிவைத்து கொண்டாடினர். மகாவீரர் அதிகாலையில் மறைந்ததால் தீபாவளி பண்டிகையையும் அதிகாலை கொண்டாடப்படுகிறது.
ஜைனம் மற்றும் புத்தமதம் வீழ்ச்சியடைந்த நேரம் அப்போது ஜைன மதத்திலிழுந்து பலர் இந்து மதத்தோடு இணைந்தனர். இப்படி இந்து மதத்தில் இணைந்தாலும் ஜைனர்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதை நிறுத்தவில்லை.
ஜைனர்கள் கொண்டாடுவதைப் பார்த்து இந்துக்களும் கொண்டாடினர். இப்படி வட இந்தியாவில் கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகையை வட இந்தியர் தெற்கு நோக்கி வந்ததும் தென்னிந்தியாவிலும் கொண்டாடினர்.
ஜைன மதத்தினரும் வட இந்தியரும் ஒரு பண்டிகையை புத்தாடை உடுத்தி இனிப்பு பலகாரங்களை உண்டு பட்டாசு வெடித்து மகழ்ச்சியாக கொண்டாடும் போது நாமும் குடும்பத்தோடு மற்றவர்களோடு இணைந்து மகிழ்வாக இருக்கலாமே என்ற நல்லெண்ணமும் பரந்த மனப்பான்மையும் மட்டுமே தமிழரையும் இப்பண்டிகையை கொண்டாட வைத்தது.