2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது; பந்தயத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பேர்!
சிறந்த பாடல் மற்றும் சிறந்த இசை ஆகிய பிரிவுகளில், மேற்கு வங்கத்தை சேர்ந்த இசையமைப்பாளர்கள் உட்பட ஐந்து பேர், 2025ம் ஆண்டு ஆஸ்கர் விருது போட்டியில் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். இந்தியாவில் இந்த விருதை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்ஸார் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.
போட்டியில் இருக்கும் படங்கள், பாடல்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவை பற்றிய விவரம் வெளியாகி வருகிறது. சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் 89 பாடல்களில் ‘பேண்ட் ஆப் மஹாராஜாஸ்’ படத்தின் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பாடல்களை பாடிய மற்றும் இசையமைத்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சயான் கங்குலி, இமான் சக்ரவர்த்தி, பண்டிட் பிக்ரம் கோஷ், ஷமீக் குண்டு மற்றும் தாலியா மைதி பா ஆகிய ஐந்து பேர் போட்டியில் உள்ளனர்.
டிசம்பர் 9ம் தேதி தொடங்கும் முதல் சுற்று வாக்கெடுப்பின் போது 15 பாடல்கள் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட பாடல்கள் விவரம் டிசம்பர் 17ம் தேதி அறிவிக்கப்படும்.
இது குறித்து பாடகர் பிக்ரம் கோஷ் கூறியதாவது; என்னுடைய ஒரு பஞ்சாபி பாடல், படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது ஒரு மரியாதைக்குரிய விஷயம் என்றார்.