முச்சந்தி
அலெப்போ நகரை கைப்பற்றிய கிளர்ச்சி படை: சிரியாவுக்கு ஆதரவாக ஈரான் களமிறங்குமா? …. ஐங்கரன் விக்கினேஸ்வரா
( சிரியாவுக்குள் திடீரென கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியதன் பின்புலத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன என்றும், ஈரானைக் கட்டுக்குள் கொண்டு வரவே இத்தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது)
மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் – காசா மோதலாகும். இந்த மோதல் தற்போது போராக மாறி உள்ளது. அதேபோல் இஸ்ரேல் – ஈரான் மற்றும் இஸ்ரேல் – லெபானின் ஹெஸ்புல்லா இடையேயும் மோதல் இன்னமும் நீடித்து வருகிறது.
புதிய போர் வெடித்துள்ளது:
சிரியாவில் தற்போது புதிய போர் வெடித்துள்ளது. சிரியா அதிபர் பஷிர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பின் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் போரை தொடங்கி உள்ளனர்.
இந்த போர் சிரியா மட்டுமின்றி ஈரானுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஈரான், சிரியாவுக்கு ஆதரவாக படைகளை இறக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சிரிய அரசாங்கம் 2016ம் ஆண்டு அலெப்போ (Aleppo) நகரத்தை கைப்பற்றிய பிறகு, மீண்டும் சிரிய கிளர்ச்சி படை அலெப்போ நகரத்தை கைப்பற்றியுள்ளனர்.
தற்போது ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(Hayat Tahrir al-Sham) என்ற கிளர்ச்சி படை அலப்போ நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் புதன்கிழமை (27/11/24)அதிர்ச்சி தாக்குதலை தொடங்கியவர்கள், வழியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை ஆக்கிரமித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஷ்ய ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் இராணுவ உபகரணங்களை உள்ளடக்கிய பாரிய கிடங்கை சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ரஷ்ய போர் விமான குண்டு வீச்சு:
அலெப்போ நகரை கைப்பற்றியதால் சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. இந்நிலையில் சிரியாவின் இட்லிப் (Idlib) மற்றும் சர்மடா (Sarmada) பகுதிகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன.
உள்ளூர் ஊடக தகவல் படி, ரஷ்ய வீரர்கள் வான்வழி தாக்குதல் மூலம் எரிவாயு நிலையத்தை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
2020ல் வடமேற்கு சிரியாவில் இந்த பகுதியில் தீவிரமான சண்டை நிகழ்ந்தது. முன்பு எதிர்க்கட்சி போராளிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அரசாங்கப் படைகள் கைப்பற்றியிருந்தனர்.
அத்துடன் துருக்கிய எல்லைக்கு அருகே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடமேற்கு பகுதிகளை ரஷ்ய மற்றும் சிரிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்கி உள்ளன.
அசாத் எதிர்ப்பு கிளர்ச்சி படைகள்:
சிரிய நாட்டின் வடமேற்கில் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள நிலைகள் மீது கிளர்ச்சிப் படைகள் தங்கள் தாக்குதலை அதிகரித்துள்ளன. கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமை இரண்டு கார் குண்டுத் தாக்குதல்களை நடத்திய பின்னர் அலெப்போ நகரத்தின் மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கினர்.
மேலும் நகரின் மேற்கு எல்லையில் அரசாங்கப் படைகளுடன் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. நகரத்தின் மீதான பெரும் தாக்குதலை முறியடித்ததாக சிரிய இராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
Hay’et Tahrir al-Shams ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் ஒரு தாக்குதலைத் தொடங்கி வடமேற்கு மாகாணமான அலெப்போவில் 47க்கும் மேற்பட்ட கிராமங்களின் கட்டுப்பாட்டை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. கிளர்ச்சியாளர்கள் M5 நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டனர்.
பின்புலத்தில் இஸ்ரேல் – அமெரிக்கா:
இந்த மோதல்களால் தற்போது ஈரானிலிருந்து சிரியாவுக்குள் ஆயுத தளபாடங்களைக் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வழி ஊடாகவே ஆயுதங்கள் மாற்றப்பட்டு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குகின்றது.
சிரியாவுக்குள் திடீரென கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்த பின்புலத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இருக்கின்றன என கருதப்படுகிறது. ஈரானைக் கட்டுக்குள் கொண்டு வரவே இத்தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் தான் தற்போது சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கி உள்ளது.
இந்த உள்நாட்டு போர் என்பது சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக தொடங்கி உள்ளது. அதாவது சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். அவ்வப் போது அவருக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வந்துள்ளனர்.
சிரிய உள்நாட்டு போர்:
2011ல் உள்நாட்டு போர் சிரியாவுல் தீவிரமாகியது. கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரை கைப்பற்றினர். அதன்பிறகு ஈரான், ரஷ்யா உதவியுடன் 2016ல் அந்த நகரை அதிபர் பஷிர் அல் அசாத் கைப்பற்றினார். தற்போது அந்த நகரில் தான் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது.
இந்த முறையும் அதிபர் பஷிர் அல் அசாத்துக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பின் தலைமையில் அந்த நகரை கைப்பற்றி உள்ளனர். இந்த நகரில் தற்போது அதிபர் ஆதரவு படை மற்றும் கிளர்ச்சி படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் தற்போது வரை வெளிநாடுகள் எதுவும் தலையிடவில்லை. ஏனென்றால் உள்நாட்டு போர் இப்போது தான் தொடங்கி உள்ளது. விரைவில் வெளிநாடுகளின் தலையீடு என்பது இந்த போரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவுக்கு ஆதரவாக ஈரான் களமிறங்குமா ?
சிரியா அதிபர் பஷிர் அல் அசாத்துக்கு ஆதரவாக ஈரான் அலெப்போ நகருக்கு படைகளை அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முதலில் ஈரான் முதலில் களமிறங்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதன்படி ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் செயல்பட்டு வரும் கதைப் ஹெஸ்புல்லா (kata’ib Hezbollah), அசைப் அல் ஹக் ( Asaib Ahl Al Haq), அன்சார் அல்லா அல் அஃபியா (Ansar Allah al – Awfiya) ஆயுத தாங்கி சண்டையிலும் படைகளை அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படைகளை சில நாடுகள் பயங்கவாத அமைப்பாக அறிவித்துள்ளன. விரைவில் இந்த படைகள் சிரியாவுக்குள் நுழைந்து அதிபர் பஷிர் அல் அசாத்துக்கு ஆதரவாக அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடலாம் என்று சொல்லப்படுகிறது.
வெடித்த போரால் ஈரானுக்கு சிக்கல்:
சிரியாவில் வெடித்த போரால் ஈரானுக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது ஈரான் அதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு லெபனான் நாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு மூலம் தான் காசா போருக்கு பழித்தீர்க்கும் வகையில் இஸ்ரேலை, ஈரான் தாக்கி வருகிறது. அதோடு இஸ்ரேலை தாக்குவதற்கு தேவையான ஆயுத உதவிகள் உள்ளிட்டவை சிரியா வழியாக தான் ஹெஸ்புல்லாவுக்கு செல்கிறது.
தற்போது சிரியா உள்நாட்டு போரில் அதிபர் பஷிர் அல் அசாத் ஆட்சி கவிழும் பட்சத்தில் ஈரானால் ஹெஸ்புல்லாவுக்கு ஆயுத சப்ளை செய்வதில் சிரமம் ஏற்படும். இதனால் ஈரான் நிச்சயமாக சிரியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் என சொல்லப்படுகிறது.