பலமான எதிர்க்கட்சியும்; ஜேவிபியின் கட்டமைப்பு மாற்றமும்
கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசாங்கத்தை நடத்துவதற்கு தேவையான நாடாளுமன்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென அவரது கட்சியும் சில விமர்சகர்களும் கூறுகின்றனர். முரண்பாட்டில் உடன்பாடாக இந்த அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சில எதிர்க்கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் கூட இந்த அரசாங்கம் அதிக அதிகாரத்தைப் பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று வெளிப்படுத்துகின்றனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை சமர்பித்துள்ள 8361 வேட்பாளர்களுள் 1000க்கும் குறைவான வேட்பாளர்கள் மாத்திரமே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இவ்வாறு பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள பல வேட்பாளர்கள் பலமான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்ற தொனிப் பொருளில் பிரசாரம் செய்வதை தற்போது காணக்கூடியதாக உள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் கூட ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதியளித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த தடையற்ற நாடாளுமன்ற அதிகாரம் அல்லது அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் எந்த சிக்கல்களும் இல்லை. எனினும், நாடாளுமன்றம் என்பது ஆளும் கட்சி மட்டும் இருக்கும் இடம் அல்ல.
இப் பின்னணியில்தான் ‘நாடாளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்புவோம்’ என மேற்கொள்ளும் பிரசாரங்கள் அடிப்படை தன்மை அற்றவையாக பார்க்கப்படுகின்றன.
நாடாளுமன்றம் என்பது ஒரு தனித்துவமான விவாத மைதானமாக பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மாத்திரம் இருக்குமானால் அவ்வாறான அரசாங்கம் அதிகாரமிக்க சர்வாதிகார அரசாங்கமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அத்தகைய அரசாங்கங்கள் நாட்டிற்கு அழிவுகரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலுமில்லை.
எனவே, புதிய நாடாளுமன்றம் பற்றி சிந்திக்கும் போது பலமான எதிர்க்கட்சி பற்றி பேசுவதிலும் தவறுகள் எதுவும் இல்லை.
‘இது எதிர்க்கட்சி அல்ல, ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு’ என்ற தொனியில் பிரசாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வெளியேற்ற வேண்டும் என கடந்த காலங்களில் கோஷங்கள் எழுப்பப்பட்ட போது கூட தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் கூட தங்களை ஆட்சி அமைக்க அழைத்தால், ஊழலற்ற ஏனைய கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் கூட்டி, அமைச்சரவையை அமைத்து, ஆட்சி அமைப்போம் என, பலமுறை தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கூறினர்.
ஆக, ஒரு கூட்டுறவு அரசாங்கத்தை நடத்துங்கள் என்பதே மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றில் நான்காவது அதிகாரம் எதிர்க்கட்சி தலைவருக்கு உரியது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் உள்ள குழுக்களின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சியினரிடம் உள்ளது.
கடந்த காலங்களில், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இத்தகைய குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அதற்குக் காரணம் எதிர்க்கட்சிகளின் பிரதான பங்கு.
எனவே, அதிகாரப் பேராசை இல்லாவிட்டால், பலமான ஆட்சியைக் கட்டியெழுப்பவும், வலுவான எதிர்க்கட்சியைத் தக்கவைக்கவும் எங்களைப் போன்ற பொருத்தமானவர்களை எதிர்க்கட்சிக்குத் தெரிவு செய்யுங்கள் என்று தேசிய மக்கள் சக்தி பிரசாரம் செய்தால் அது அரசியல் அறமாக இருக்கும்.
எவ்வாறாயினும், பிரசாரம் செய்யும் வேட்பாளர்களும் அதனை புரிந்து பலமான ஒரு எதிர்க்கட்சியை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதும் வரவேற்கத்தக்கது. ஏனெனில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு பலமான எதிர்க்கட்சி அத்தியாவசியம்!
அதேநேரம் தேசிய மக்கள் சக்தி தங்கள் அடிப்படை அமைப்பான ஜேவிபியின் கொள்கை மற்றும் கட்டமைப்பிலும் மாற்றங்களை உருவாக்க வேண்டும். இலங்கைத்தீவில் ”பன்மைத்துவ அரசு” என்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும் அது தமிழர்களின் சுயநிர்யண உரிமைக்கு வழி சமைக்கவும் வேண்டும்.
மலையகத் தமிழர்கள், முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் எது என்பதிலும் அவதானம் தேவை.
ஜேவிபிவியின் ஆரம்பகால ”கொள்கை” ”கட்டமைப்பு” என்பது தற்போது இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் மலையகத் தமிழர்கள் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் போன்றவற்றை ஏற்றுக் கொண்டதாக இருக்கவில்லை.
தற்போது தேசிய மக்கள் சக்தி என்று மாற்றமடைந்திருந்தாலும் ஜேவிபியின் அடிப்படைக் கொள்கைகளில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லவும் முடியாது.
தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் பலமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கும் நிலையில் ஏனைய சமூகங்களின் அரசியல் உரிமைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேசிய மக்கள் சக்தியிடம் உருவாக வேண்டும்.
அரசியல் தூய்மைவாதம் பேசுவது போன்று அரசியல் அறத்துக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.