ஆகாயப் பந்தல்… (பகுதி 5)… ஏலையா க.முருகதாசன்
வீட்டின் பின்புற வீட்டுச்சுவரோடு சுவர் தவிர்ந்து இருபுறமும் சுவர் எழுப்பப்பட்டு ஒரு பக்கம் அரைச்சுவர் மட்டுமே எழுப்பப்பட்டிருந்த அறை போன்ற ஒரு இடத்தில் கதிரையில் இருந்தபடி பூந்தி லட்டைச் சாப்பிட்டுக் கொண்டும்,தேத்தண்ணியைக் குடிச்சுக் கொண்டுமிருந்த சரவணனின் கதிரைக் கைபிடியில் ஒரு பறவை பறந்து வந்து உட்கார்ந்திருந்தது.
பறந்து வரும் போது செம்மஞ்சள் நிறத்திலிருந்த அந்தப் பறவை உட்கார்ந்தவுடன் நீலநிறமாக மாறியதை மேல்மாடியிலிருந்து யன்னல் வழியாகப் பார்த்த மதுசா வியப்படைய அவள் வியப்படைவதைப் பார்த்த சாரிணி மதுசாவையும் கூட்டிக் கொண்டு சரவணன் இருந்த இடத்திற்கு வருகிறாள்.
மதுசாவையும் சாரிணியையும் கண்ட சரவணன் அங்கையிருந்த இன்னொரு கதிரையில் மதுசாவை இருக்கச் சொல்கிறான்.
சாரிணி அரைச்சுவரில் ஏறி உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டு இயல்பாக இருந்தாள்.
ஆனால் அவள் மதுசாவையும்,சரவணனையும்,சரவணன் இருந்த கதிரைக் கைப்பிடியில இருந்த பறவையையும் பார்த்தவள்,பறவையைப் பற்றி மதுசா வில்லங்கமாக ஏதாவது கேட்டாலும் கேட்பாள் என்று யோசிக்கும் போதே பறவை மஞ்சள் நிறமாக மாறியது.
இதைக் கவனிச்ச மதுசா ஆச்சரியத்தில் கண்கள் விரிய பறவையைப் பார்க்க தேவதையே உங்களுக்கு விருப்பமான நிறத்தில் பறவை மாறிவிட்டது ஒரு வேளை பறவைக்கு உங்களைப் பிடித்துவிட்டதோ,உங்களக்கு மஞ்சள் நிறம் அதிகம் பிடிக்கும் என்பது அதுக்கும் தெரிந்திருக்கலாம் என்கிறாள் சாரிணி.
ராணுகே எலோ வத்திவ மதுசாவத்தி ஆனிற மகதி கணோத்திவ என்று தங்கச்சியாரைப் பார்த்துச் சொல்ல மதுசா திகைச்சபடி சரவணனைப் பார்க்க என்னண்ணை நீங்கள் என்பது போல சாரிணி மெதுவாக நாக்கைக் கடித்தபடியே மதுசாவைப் பார்க்கிறாள்.
சரவணனனையே மதுசா பார்த்துக் கொண்டிருந்ததால் சாரிணி நாக்கைக் கடித்தபடி தன்னைத் திரும்பிப் பார்த்ததைக் கவனிக்கவில்லை.
சரவணன் வீட்டில் தானும் தகப்பனும் தாயும் தங்களை மறந்து தங்களுடைய கிரகத்து மொழியைப் பேசுவதைத் தவிர்க்க முடியாமல் திணறுகின்றனர்.
மதுசா தங்கள் மீது ஏதோ ஒரு சந்தேகம் கொள்கிறாள் என்பதை உணர்ந்த சரவணன் தேவையில்லாமல் தானும் தங்கச்சியும் ஒரு மொழியைக் கண்டுபிடிக்கிறோம் என இறங்கி உங்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறம் என்று மதுசாவைச் சமாளிப்பதற்காக பொய் சொல்கிறான்.
சரவணன் தங்கச்சியாரிடம் என்ன சொல்லியிருப்பான் என்பதை அறிய ஆவலான மதுசா நீங்கள் கண்டுபிடிச்ச மொழியில் இப்ப என்ன சொன்னனீங்கள் என்று கேட்க சரவணன் ராணுகே என்றால் சாரிணி எலோ என்றால் குடிக்க வத்திவ என்றால் எனக்கும் மதுசாவ என்றால் மதுசாவுக்கும் ஆனிற என்றால் ஏதாவது மகதிவு கணேளதி என்றால் கொண்டு வா என்பதாகும் என விளக்குகிறான்.
ஆனால் மதுசா அவன் சொன்னதைக் கேட்டு திருப்தியடையவே இல்லை என்பது அவளின் முகத்தில் தெரிகிறது.
சில நிமிடங்கள் மூவரும் எதுவும் பேசவில்லை.மதுசா நிறம் மாறிக் கொண்டிருந்த பறவையை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
திடீரென அந்தப் பறவை அரைச்சுவரில் இருந்து காலாட்டிக் கொண்டிருந்த சாரிணிக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்ததும் பறவையின் தலைப்பகுதி பச்சை நிறத்திலும் உடல் பகுதி வெள்ளையாகவும் மாறியது.
மதுசாவுக்கு வியப்புக்கு மேல் வியப்பு.அவள் எதிர்பாரத விதமாக அந்தப் பறவை பறந்து போய் தனது மடியில் உட்கார்ந்ததும் மதுசாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.பறவையை விரட்டவோ அது வந்து உட்கார்ந்ததை விரும்பாதவாறு இருக்கவோ அவளால் முடியவில்லை..
தாங்கள் வளர்க்கும் அந்த வினோதமான பறவை மதுசாவின் மடியில் போய் உட்காருமென சரவணனோ சாரிணியோ எதிர்பார்க்கவேயில்லை.தன்னோடு சார்ந்தவர்களைத் தவிர அந்தப் பறவை வேறு யாரோடும் சேராது.அது சாரிணி சரவணன் வீட்டினருக்கே தெரியும்.
மதுசாவின் மடியில் அந்தப் பறவை இருந்ததைக் கவனிச்ச சாரிணி அர்த்தப் புன்னகையுடன் தமையனைப் பார்த்தாள்.
அவனுக்குள்ளும் தான் மதுசாவுடன் வெறும் நட்புடனேதான் பழகிறேன் என்ற எண்ணத்தைத் தாண்டி அவளை அவன் விரும்பத் தொடங்கியதை உணரத் தொடங்கினான்.;.அதற்குக் காரணம் அந்தப் பறவைதான். .
மதுசாவின் மடியில் உட்கார்ந்த அந்த விநோதமான பறவை அவளை நிமிர்ந்து பார்த்தது.கண்கள் பறவைகளின் கண்கள் போலல்லாது மனிதக் கண்களாக அந்தப் பறவைக்கு இருந்தது மதுசாவக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சிரயத்தைக் கொடுக்க பறவையின் பார்வை அன்பு கலந்த பார்வையாக இருந்தது.
மதுசா மஞ்சள் ரோஜாப் பூக்கள் போட்ட வெளிர்மஞ்சள் சீலை உடுத்திருந்ததால் பறவையின் நிறமும் வெளிர் மஞ்சளாகவும் கடும் மஞ்சளாகவும் மாறிக் கொண்டிருந்தது.
புறவை மதுசாவின் மடியில் தனது தலையைச் சுருக்கி தாயின் மடியில் குழந்தை நித்திரை கொள்வது போல கண்களை மூடி நித்திரைக் கொள்ளத் தொடங்கியது.
மதுசா அதனுடைய முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டேயிருந்தாள். போய் ஏதாவது குடிக்க கொண்டு வா என்பது போல மீண்டும் சரவணன் பெருவிரலை வாயருகே கொண்டு போய் சாரிணிக்கு சைகை காட்டினான்.
பொறு கொண்டு வருகிறேன் அடுத்து பற்வை என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம் என்பது போல சாரிணியும் தமையனுக்குச் சைகை செய்தாள்.
அவர்கள் இருந்த இடம் அறைபோலில்லாமல் இருந்தது.பறவை இருப்பதற்கு கூடு எதுவும் அங்கிருக்கவில்லை.ஆனால் இரண்டு கெவர் உள்ள தடி சீமெந்தினால் கட்டப்பட்டிருந்தது.
பறவையின் நித்திரை குழம்பக்கூடாதென்பதற்காக சத்தமில்லாமல,; மதுசா இந்தப் பறவைக்கு கூடு எதுவும் இல்லையா என்றவள் இப்படி ஒரு பறவையை அதுவும் அடிக்கடி நிறம் மாறும் பறவையை நான் எந்த வீடியோவிலும் பார்க்கவில்லையே ஆபிரிக்க தென்னாமரிக்க நாடுகளில் இப்படி ஒரு பறவை இருப்பதாக எதையும் பார்க்கவில்லை என்கிறாள்.
அவள் கேட்டதும் தமையனைப் பார்க்கிறாள் சாரிணி,சரவணன் உடனே இது பூமிக்குரிய பறவையல்ல என்று ஏதோ சொல்ல நினைச்சவன் சமாளித்து நான் உங்கடை வீட்டுக்கு வந்த போது சொன்னேனே மேகக்கூட்டங்களுக்கு மேலே பவியீர்ப்புக்கு அப்பால் பறக்கும் பறவைகள் என்று அவைகளில் ஒன்றுதான் இவை எனச் சொல்லும் போதே சரவணன் எதையோ மறைக்கிறான் என்பதை மதுசா புரிந்து கொள்கிறாள்.
அவன் சொல்லி முடிக்க காமிகா இந்தத் தடியிலிருப்பது குறைவு,வீட்டுக்குள்ளை எங்களுடந்தான் இருக்கும்.சிலவேளைகளில் அப்பா அம்மாவுடனோ இல்லாவிட்டால் என்னுடனோ அண்ணையுடனோ வந்து படுத்துவிடும் என்கிறாள் சாரிணி.
சாரிணி காமிகா என்று சொன்னதை அவதானிச்ச மதுசா இந்தப் பறவைக்கு காமிகா என்றா பெயர் வைச்சிருக்கிறீர்கள் என்று கேட்க இல்லை காமிகா என்றால் பறவை சொறி சொறி நாங்கள் எவ்வளவோ கட்டுப்படுத்துகிறோம்,எங்களையும் மீறி நாங்கள் உருவாக்கிய மொழி வந்தவிடுகிறது என்கிறாள் சாரிணி.
அப்பொழுது கண்விழித்த அந்தப் பறவை மதுசாவின் தோளில் பறந்து போய் இருந்து கொண்டே அவளின் காதில் ஏதோ தன் மொழியில் சொல்லியத:
அந்தப் பறவையின் மொழியும் ஒலியும் ஒரு இசை போல மதுசாவுக்கு இருநத்து.அடுத்த விநாடி அந்hதப் பறவை எழுந்து வானத்தை நோக்கிப் பறக்கத் தொடங்கியது.
மதுசா,சாரிணி,சரவணன் என மூவரும் எழுந்து வந்து பறவை பறந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அது உயர உயரப் பறந்து கொண்டிருந்தது முகில்களைக் கடந்து பறந்து கொண்டிருந்தது.
பறவைகள் மேல்நோக்கிப் பறக்கும் போது சிறகுகளை அடித்துப் பறப்பதுண்டு.ஆனால் இந்தப்: பறவை சிறகுகளை கீழ்நோக்கி ஒடுக்கி ஒரு ரொக்கட் வேகமாக மேல்நோக்கிப் போவது போலப் போய்க் கொண்டிருந்தது.
கழுகுகள்தான் அதிக உயரம் பறக்கும் பறவைகள்,ஆனால் இந்தப் பறவை அதையும் மிஞ்சியதாக இருந்தது.
தான் வேறோர் உலகத்தில் நிற்பதாக உணர்ந்தாள் மதுசா.பறவை திரும்பி வருமா எனக் கேட்ட மதுசாவுக்கு சாரிணி நீங்கள் உங்களுடைய வீட்டுக்குப் போவதற்கு முன்பே திரும்பிவந்துவிடும் என்றாள் சாரிணி.
மதுசா தான் உண்மையில் பூமியில்தான் இருக்கிறேனா எனக் குழும்பத் தொடங்கினாள்.
(தொடரும்)