இலங்கை

தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்

நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர் கொள்ள முடியும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய மக்கள் சக்தியை கேடயமாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தை தமதாக்குவதற்கு முன்பே வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக தேசிய அரசியலுக்கு எதிரான போரை ஆரம்பித்துள்ளது.

அன்றைய ஆயுத யுத்த காலத்தில் சிங்கள பௌத்த இனப்படுகொலை ஆட்சியாளர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களை பாவித்ததை போன்று எம் மத்தியில் தமிழ் தேசியத்துக்கு எதிரான சக்திகளை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளனர்.

இன்னும் பலர் திருவிழா கால வியாபாரிகள் போன்று உழைப்புக்காக சுயமாகவும் இறங்கி உள்ளனர். அவர்களோடு சேர்ந்து சுயநல சுக போக அரசியல்வாதிகளும் போலி தேசியம் பேசி வாக்கு வேட்டையாட முற்படுகின்றனர்.

இவர்களை வடக்கு கிழக்கு தமிழ் தேசிய பற்றாளர்கள் தமது வாக்கினால் வீழ்த்த வேண்டும். அதுவே மாவீரர் மாதத்தில் மாவீரர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும்.எம் தேச விடுதலைக்காக தீரமுடன் செயல்படுவோர்க்கு வாக்களித்து தேசம் காக்குமாறும் வேண்டுகோள் விடுகின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி தனது பதவிக்கதிரையில் அமரும் முன்பே “யுத்த குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டிலேயே விசாரணை நடக்கும்.

ஆனால் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்” என்றார். அதிபர் பதவியில் அவர் அந்த பின் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்; முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பின்பற்றி “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51/1 தீர்மானத்தை ஏற்க மாட்டோம்” எனக் கூறினார். அவரே தற்போது “சமஸ்டி தீர்வுக்கு இடமே இல்லை” எனவும் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் “13 திருத்தமும் அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு தேவை இல்லை.

பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வே அவசியம்” என்றார். இவை எல்லாம் தமிழர்களை அரசியல் போருக்கு அழைப்பதாகவே பொருள்கோடல் வேண்டும். இவற்றிற்கு எதிராக அரசியல் போர் தொடுக்க கூடியவர்களையே எம் தேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

போதாக்குறைக்கு மொட்டு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சரத் விஜேசேகர அவர்கள் “தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு சமஸ்டியை கொடுக்க போகின்றது அதற்கு இடமளிக்க மாட்டோம்” என கூறியிருப்பது அவருடைய அரசியல் அறியாமையும் வாக்கு வேட்டை காண பிரகடனமாகவே நாம் உணர்கின்றோம்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் இன்றைய ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2015-2019 காலப்பகுதியில் நாடாளுமன்ற அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட வரைவின் அடிப்படையில் அரசியல் தீர்வு தொடர்பில் பேசித்திருப்போம் என கூறுகின்றார்.

அதில் ஏக்கிய ராஜ்ய(ஒற்றை ஆட்சி) ஆட்சியை அவர்களை வலியுறுத்தியதோடு வடகிழக்கு இணைய விடாது தடுப்பதற்கான முன் மொழிவையும் மக்கள் விடுதலை முன்னணி கொடுத்துள்ளது.தற்செயலாக தற்போதைய ஆட்சியாளர் காலத்தில் ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட்டாலும் நியமிக்கப்படும் ஆளுநர்கள் மூலம் அவர்களின் அதிகாரத்தை பாவித்து மகாணசபைகளை கட்டுப்படுத்தும் முன் மொழிவுகளையும் கொடுதுள்ளதோடு இவர்களால் பிரிக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் இணைவதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் கொடுகப் போவதில்லை.

அதனாலேயே டில்வின் சில்வா வடக்கு மக்களுக்கு 13 தேவை இல்லை என்பது கிழக்கை பிரித்து விட்டே. என்கிறார்.இதுவே தமிழர்களின் அரசியலுக்கு எதிரான அவர்களின் அரசியல் மனநிலை.

வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தேசியத்தின் அரசியலுக்கு எதிரான புல்லுருவிகள் தமிழர் தேசம் என்றும் வியாபித்துள்ளனர். அவர்களை சரியான வகையில் நாம் அடையாளம் கண்டு களைதல் வேண்டும். அவர்களோடு தமிழ் தேசியம் பேசி பேசிய நாடாளுமன்றம் சென்றவர்கள் சுகபோகங்களை மட்டும் அனுபவித்து சிங்கள பௌத்த பெரும் தேசியவாதிகளுக்கு துணைநின்று சர்வதேச ரீதியில் போர் குற்றங்களுக்கான விசாரணைகளையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்னொரு பக்கம் 13 அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்தவர்கள் தற்போது தேர்தல் களத்திலே நிற்கின்றனர். தமிழர்களின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மிகவும் பயங்கரமானது. தெற்கின் பெரும் தேசிய வாதத்திற்கு எதிராகவும் எம் மத்தியிலே தோன்றியுள்ள எம் தேச அரசியலுக்கு எதிரான சக்திகளையும் நேரடியாக மோதி தோற்கடிக்க வேண்டிய நிலையிலே நாம் உள்ளோம்.

இம்முறை நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு எதிரானவர்கள் புள்ளடியினால் தோற்கடிக்க வேண்டும். எமக்காக நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க வல்லவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர் கொள்ள முடியும்.

அத்தகைய பெரும் சக்தியாக அணி திரண்டு எமது எழுச்சியை தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தி மாவீரர் மாவீரர்களுக்கு சுடரேற்றுவோம். அது தேசத்தின் ஒளியாகட்டும் சர்வதேசமெங்கும் வியாபிக்கட்டும். நாம் ஓர் அணியாக திரண்டு எதிர்கொள்ளும் போர் இறுதியானது.

இதுவரை நாட்டை ஆண்ட பேரினவாத சக்திகள் பேச்சு வார்த்தை என்றும் தீர்வு என்றும் ஏமாற்றினார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள் மாற்றம் என மக்களை கவர்த்து நாடாளுமன்றில் பெரும்பான்மை பெற்று ஊழலுக்கு எதிரான போரை ஒரு பக்கம் நடத்தி க்கொண்டு இன்னொரு பக்கம் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரையும் தொடுக்க உள்ள நிலையில் இதற்கு முகம் கொடுக்க எமது வாக்குகளை பயன்படுத்துவோம். எமது சக்தியை வெளிப்படுத்துவோம். என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.