கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறி
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 26 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 924 வேட்பாளர்கள் போட்டி யிட்ட நிலையில் பொதுஜன பெரமுன 12 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.
இதில் பொதுஜன பெரமுன ,தேசிய மக்கள் சக்தியில் எந்தவொரு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் மரிக்கார்,முஜிபுர் ரஹ்மான் ,மனோ கணேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் அலை அடிப்பதனாலும் கொழும்பு மாவட்ட ஆசனங்கள் 1 ஆல் குறைக்கப்பட்டதாலும் கடந்த முறை 19 ஆசனங்களுக்கு 924 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இம்முறை 18 ஆசனங்களுக்கு 966 வேட்பாளர்கள் போட்டியிடுவதனாலும் வாக்குகள் பிரிந்து செல்ல தமிழ் பிரதிநிதித்துவமே பறிபோகக்கூடிய நிலைமை ஏற்படுள்ளதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற ஆசனங்களில் 1 குறைக்கப்பட்டுள்ள நிலையில் 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 19 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதுமட்டுமன்றி கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் இதுவரையான அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொண்டுள்ள நிலையில் இம்முறை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவையும் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளதுடன் மக்கள் செல்வாக்குள்ளவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதனால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு இதுவரை கிடைத்து வந்த தமிழர் பிரதிநிதித்துவம் இம்முறை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அரிது எனவும் இந்த அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.