வளமான புதிய யுகத்தை படைத்து இளைஞர்களிடம் நாட்டை கையளிப்பதே எமது நோக்கம்
எமக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உறவுகள் ஒன்றிணைந்து எமது நாட்டினை முன்னேற்றுவதற்கு முன்வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமக்குக் கிடைத்த வெற்றி என்பது மக்களுக்கு கிடைத்த பெரியதொரு வெற்றியாகவே கருதப்பட வேண்டும். ஏனென்றால், இதுவரை காலமும் இருந்த அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பின் காரணமாகவும், அவர்களது பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவும், அரசு நிறுவனங்களை வினைத்திறமின்மை காரணமாக இயக்கியதன் காரணமாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நாட்டில் ஓர் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையுடனும் மக்கள் இந்த வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.
இந்தத் தேர்தலில் எமக்கு பல தொழிற்சங்கங்கள் உதவி செய்திருக்கின்றன. அந்த தொழிற்சங்கங்களுக்கும் மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.
புதிய ஒரு யுகத்தை படைத்து, வளமான ஒரு சூழலை உருவாக்கி, தொழில் துறையை உருவாக்கி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்து இளைஞர்களிடம் கையளிப்போம்.
இதற்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றவர்கள் உதவி செய்வதற்கு முன்வர வேண்டும். இன்று வெளிநாட்டு உதவி இல்லாத யாழ்ப்பாணம் என்பது பூஜ்ஜியமாக காணப்படுகிறது. வெளிநாட்டு உதவிகளின் நிமித்தம்தான் பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தொழிற்சாலைகளை நிறுவி, வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிக்கு முன்னிலை கொடுத்து, நாங்கள் ஓர் இன ஐக்கியத்துடன் நாட்டை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.