முச்சந்தி

இஸ்ரேலின் நீண்டகால கனவு: ஈரான் அரசை அழிக்கும் இரகசிய திட்டம் ! … – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(மத்திய கிழக்கில் ஈரான்- இஸ்ரேல் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. ஈரானை தாக்கி அழித்திடும் இஸ்ரேலின் இரகசிய திட்டம் பல காலமாக மூடி மறைக்கப்பட்டு இருந்தாலும், தற்போது இரகசியங்கள் பல கசிந்துள்ளன. இரு நாடுகளும் போருக்கு தயாராகி வருவதாக அறிவித்தாலும் மற்றய அரபு நாடுகள் மௌனம் காத்து வருகின்றன)

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையே எப்போது வேண்டுமானாலும் பாரிய போர் வெடிக்கலாம் என்ற சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரானை முழுமையாகத் தாக்கி அழிக்கும் சில மோசமான ஆயுதங்களை இஸ்ரேல் தன்வசம் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காகவே கடந்த பல ஆண்டுகள் இரகசிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் மேற்கொண்டு வந்துள்ளது. மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இது அந்த பிராந்தியத்தில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் சில முக்கிய இடங்கள் மீது தாக்குதல் அண்மையில் நடத்தாப்பட்டது. ஆயினும் பாரிய தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் எப்போது இந்தத் தாக்குதல் முழுமையாக நடக்கும் எந்த இடங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த இருபது ஆண்டுகளாக ஈரானை வீழ்த்த இஸ்ரேல் போட்டுவைத்துள்ள
தகவல்கள் பல வெளியாகியுள்ளது. ஜெருசலேம் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது. ஈரானை தாக்கி அழிக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் இதுவரை பல பில்லியன் டாலரை செலவழித்துள்ளது. பல அதிநவீன மற்றும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆயுதங்களை பெற்றுள்ளது.

இதில் சில ஏவுகணைகளை அதிநவீன ரேடார் மூலமாகக் கூட கண்டுபிடிக்க முடியாதாம். இவை நிச்சயம் ஈரானுக்கு பெருந்தலைவலியாகவே மாறும்.

அதி வலிமையான ஆயுதங்கள்:

இஸ்ரேல் இந்த சில ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தபோது தான் இஸ்ரேலிடம் இந்தளவுக்குப் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. அதேநேரம் இஸ்ரேலிடம் இன்னும் கூட வலிமையான ஆயுதங்கள் பல இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதில் பெரும்பாலான ஆயுதங்கள் ஈரானைக் குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளியே வராமல் ஆகாமல் இருக்கவும் இஸ்ரேல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் யேமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதுபோன்ற ஒரு ஆயுதம் தான் பயன்படுத்தப்பட்டது. அதுவே ஈரானுக்கு கிட்டதட்ட ஒரு எச்சரிக்கை போலவே இருந்தது. மேலும், இஸ்ரேல் தங்களிடம் உள்ள F-15 போர் விமானங்களையும் ஈரான் மனதில் வைத்துக் கொண்டு மாற்றி வடிவமைத்துள்ளதாம். இதன் மூலம் ஈரானை இஸ்ரேலால் முழுமையாகத் தாக்கி அழிக்கக் கூட முடியும்.

இலக்கு தவறாத ஏவுகணை:

இவை எல்லாவற்றையும் தாண்டி ‘ஜெரிகோ’ ஏவுகணை என்ற மிகவும் ஆபத்தான ஒரு ஏவுகணையையும் இஸ்ரேல் தன்வசம் வைத்துள்ளது. இருப்பினும் இந்த ஆயுதங்கள் குறித்த எந்தவொரு தகவலையும் இஸ்ரேல் பொதுவெளியில் அறிவிக்க மறுக்கிறது. இது தொலை தூரத்தில் உள்ள இலக்குகளையும் கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறமை கொண்டது.

இஸ்ரேல் வசம் இருக்கும் குண்டுகள் பதுங்கு குழிகளைக் கூட உடைக்கும். இதை வைத்து ஈரானின் எண்ணெய் கிடங்குகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆயுதங்களை எல்லாம் வைத்து ஒரே நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தினால் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும். அது அடுத்த உலகப் போரைக் கூட தொடங்க வாய்ப்பு இருப்பதாகவே அஞ்சப்படுகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்:

ஈரானால் கட்டமைக்கப்பட்ட பயங்கரவாதம், நம் கண் முன்னே சரிந்து விழுந்துக் கொண்டிருக்கிறது. விரைவில் ஈரானின் ஆதிக்கம் முடிவுக்கு வரும். விரைவில் மத்திய கிழக்கில் அமைதியும், செழிப்பும் திரும்பும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறைகூவல் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் தனது அண்டை நாடான ஈரானை தாக்கி அழிக்கத் தயார் என்றும் அறைகூவல் விடுத்தள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுடன் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் நடந்தன.

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட பின்னரும்,
ஹமாஸ் அமைப்பின் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஹமாஸ் படையினர் ஆயுதங்களை போட்டுவிட்டு, அவர்கள் கடத்தி சென்றிருக்கும் 23 நாடுகளை சேர்ந்த 101 பணயக்கைதிகளை விடுவிக்கும் பட்சத்தில் போர் முடிவடையும். இஸ்ரேலிலிருந்து பிடித்து செல்லப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பணயக்கைதிகளை நாங்கள் உயிருடன் மீட்டு வருவோம் என்று உறுதி என நெதன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இரகசிய திட்டம் பல காலமாக மூடி மறைக்கப்பட்டு இருந்தாலும், ஈரானை தாக்கி அழித்திடும் தற்போது இரகசியங்கள் பல கசிந்துள்ளன.

மத்திய கிழக்கில் ஈரான்- இஸ்ரேல் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவுகின்ற வேளையில், இரு நாடுகளும் போருக்கு தயாராகி வருவதாக அறிவித்தாலும் மற்றய அரபு நாடுகள் மௌனம் காத்து வருகின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.