தேசிய பட்டியலில் ரவியா ?; கொதித்தெழுந்த ரணில்
புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒரு ஆசனத்துக்கு ரவி கருணாநாயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மற்றும் ஏனைய கட்சி பிரதிநிதிகளின் அனுமதியின்றி தன்னிச்சையான முறையில் ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைக்கப் பெற்ற இரண்டு பாராளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் அனைத்து கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஒன்றுகூடி தீர்மானிக்கவிருந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்பதுடன் கூட்டுத் தீர்மானமின்றி செயற்படும் திறன் அவருக்கு இல்லையெனவும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் அனுமதியின்றி இவ்வாறான தன்னிச்சையான செயற்பாட்டை அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மற்றுமொரு பெயர் எதிர்காலத்தில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 500,835 வாக்குகளைப் பெற்று 02 தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றியது. இந்த கட்சியில் இருந்து அநுராத ஜயரத்ன (கண்டி), ரோஹித அபேகுணவர்தன (களுத்துறை) மற்றும் சாமர சம்பத் தசநாயக்க (பதுளை) ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற ஆசனங்களை வென்றனர்.