பயன்படுத்த முடியாத நிலையில் தரித்து வைக்கப்பட்டுள்ள: 435 வாகனங்கள்
இலங்கை சுங்கத் திணைக்களம் மூலம் தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் காணப்படும் காணியொன்றுக்கு வருடாந்தம் 41,850,000 ரூபாய் தொகையை செலுத்தி , கைதுசெய்த 435 வாகனங்களை பல வருடங்களாக அநாவசியமான முறையில் தரித்து வைத்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 152 வாகனங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருஹூனுபுர துறைமுக வளாகத்தில் மேலும் 202 வாகனங்கள் தரித்து வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரியவந்துள்ளது.
அவற்றில், 36 வாகனங்கள் ஐந்து வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவை ஆகும்.
நாட்டில் உள்ள அனைத்து வாகனங்கள் தொடர்பான பரிவர்த்தனை செலவுகள் இருந்தபோதிலும், இந்த வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்படுவதால், வாகனங்கள் சீரழிந்து, ஓட்டுவதற்கு தகுதியற்றதாக மாறியுள்ளன.
இதன்காரணமான, ஏலத்தில் சாதாரணமான தொகையை ஈட்ட முடியாது என தணிக்கையில் தெரியவந்துள்ளது.
குறித்த வாகனங்கள் தொடர்பில் சரியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
அநேகமான வாகனங்கள் தொடர்பில் இன்னும் பரிசீலனைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஏலத்தில் சாதாரணமான தொகையை ஈட்ட முடியாமை தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது என இலங்கை சுங்கத்தின் பிரதம கணக்காய்வு அதிகாரி, தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் தெரிவித்துள்ளார்.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட ஏனைய கருத்துக்களுக்கு இணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களம் தொடர்பில் 2023ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.