சிறப்புரிமைகளை நீக்குவதற்கு எதிராக சந்திரிகா, மஹிந்த, மைத்திரி, கோட்டா, ரணில் கூட்டணி!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த, மைத்திரி, கோட்டா, ரணில் ஆகியோர் கூட்டணியாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முதல் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை உடனடியாக நீக்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.
சலுகைகளை உடனடியாக நீக்காவிட்டாலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் தொடர்பில் ஜனாதிபதி மீளாய்வு செய்துள்ளார். இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் சில அதிகாரிகளுடன் பேசி இந்த சிறப்புரிமைகள் குறித்து இந்த குழு கலந்துரையாடியது.
அத்துடன், வரம்பு மீறி சலுகைகளின் கீழ் பெறப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்களை அரசிடம் ஒப்படைக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் விசேட குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து அவருக்கு வழங்கப்பட்ட மேலதிக வாகனங்களை மீள வழங்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தது. அதன்படி 3 உத்தியோகபூர்வ வாகனங்களை மீண்டும் வழங்க மஹிந்த ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் மூலம் சந்திரிகா, மைத்திரி, ரணில் ஆகியோரை சந்தித்து இந்த உண்மையை தெரிவிக்க நடவடிக்கை எடுத்தனர். அத்துடன், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முதல் பெண்மணிகளுக்கு கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல் கடிதத்தை முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச பெற்றுக்கொண்டார். இதற்கு உடனடியாக பதிலளித்த திருமதி ஹேமா பிரேமதாச, குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படுவதாகவும், எடுக்கப்பட்ட தீர்மானத்தை தமக்கு தெரிவிக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதற்கு முன்னாள் ஜனாதிபதிகள் பதிலளிக்காத நிலையில், அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த, மைத்திரி, கோட்டா, ரணில் ஆகியோர் கூட்டணியாக செயற்பட்டு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.