34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதி; ஜனாதிபதியிடம் சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை
கொழும்பில் பல வீதிகளைத் திறந்து தெற்கு மக்களின் ஆதரவைப் பெற எண்ணும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறந்து யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முன் வர வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.
வலி. வடக்கு மற்றும் பருத்தித்துறை, உடுப்பிட்டு மக்களின் அழைப்பின் பெயரில் அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறக்க ஆவண செய்யுமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அவர்களிடம் விபரத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடமராட்சி, அச்சுவேலி, பலாலி பகுதி மக்கள் இரண்டு கிலோமீற்றர் பயணத்தில் சென்றடைய வேண்டிய விமான நிலையம் மற்றும் சில நிமிடத்தில் அடைய வேண்டிய யாழ். நகரத்தை 34 ஆண்டுகளாகப் பல கிலோமீற்றர் பயணித்தே தமது தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர்.
இதனைத் தடுக்க அச்சுவேலி – வசாவிளான் வீதியில் வெறும் 400 மீற்றர் பிரதேசத்தைத் திறப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்ட முடியும்.
கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை ஒட்டிய வீதி பாதுகாப்புக் காரணத்துக்காக 15 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நிலையில் அதனைத் திறக்க உத்தரவிட்ட ஜனாதிபதி, எமது தக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு 34 ஆண்டுகளாகப் பூட்டி வைத்திருக்கும் இந்த வீதியையும் திறக்க உடன் உத்தரவிட வேண்டும்.” – என்றார்.