முச்சந்தி

நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கியுள்ள 31 பெண் வேட்பாளர்கள்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்பது மாகாணங்களிலும் 31 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலிலும் நான்கு பெண்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. இலங்கை அரசியலில் பாலின சமத்துவம் என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் இந்த செயற்பாடு நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விசேடமான அம்சம் என்னவெனில் பலர் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாது தேசிய மக்கள் சக்தியில் நேரடியாக இணைந்து கொண்டவர்களாக உள்ளனர். அதிகமான பெண்கள் சட்டத்தரணிகளாகவும் கல்வியலாளர்களாவும் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் போது தனது பிரசாரத்தில் தேசிய மக்கள் சக்தியானது, தாம் ஆட்சியமைத்தால் பெண்களுக்கு அரசியலில் சமவாய்ப்பை வழங்குவோம் என மக்கள் மத்தியில் வாக்குறுதியை வழங்கியிருந்தது. அதில் பிரதானமாக, பெண் ஒருவரையே நாம் பிரதமராக நியமிப்போம் என்று வாக்குறுதியும் அடங்கும்.

ஏனென்றால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்களாக களமிறங்கிய 38 பேரும் ஆண்களாகவே இருந்தனர். இறுதியாக 2019 ஆம் ஆண்டே பெண் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார் (அஜந்தா பெரேரா)

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய கல்வியியலாளர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமராக்கினார். இவர் இலங்கையின் மூன்றாகவது பெண் பிரதமராக விளங்குகின்றார். இதற்கு முன்னதாக சிறிமா பண்டாரநாயக்க இலங்கையில் மாத்திரமல்லாது உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர். இரண்டாவதாக அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக்க பிரதமராக விளங்கினார். ஹரிணி அமரசூரிய அநுரவின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவர். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை தலைவராகவும் விரிவுரையாளராகவும் விளங்கியவர்.

ஹரிணி அமரசூரிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதை நாட்டின் பெண்வர்க்கத்தினர் வரவேற்றுள்ளனர். காரணம் அவர் கல்வித்துறை சார்ந்த ஒருவராக விளங்குகிறார். இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல்களிலும் துறை சார்ந்த பெண்களை களமிறக்குவதில் தேசிய மக்கள் சக்தி மும்முரமாக ஈடுபட்டது. அதன் படி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தனது பட்டியலில் பெண்களை தெரிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்தி.

மேல் மாகாணம்

கொழும்பு மாவட்டத்தில் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சமன்மலி குணசிங்க, ராய் கெளி பல்தசரர், கலாநிதி கெளசல்யா ஆரியரத்ன, சட்டத்தரணி சாமனி குணசேகர ஆகியோரும், கம்பஹா மாவட்டத்தில் ஹேமாலி வீரசேகர சாமரிகா ஜயசிங்கவும், களுத்துறை மாவட்டத்தில் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹாச்சி ,ஒஷானி உமங்கா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

மத்திய மாகாணம்

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, குமுதினி அபேகுணவர்தனவும் மாத்தளை மாவட்டத்தில் தீப்தி நிரஞ்சனி வாசலகே மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் செல்வி கலைச்செல்வி, சட்டத்தரணி தர்ஷனி திலகரத்ன ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

தென்மாகாணம்

தென்மாகாணத்தின் காலி மாவட்டத்தில் அனுஷா நிமாலி சருக்காலி சட்டத்தரணி ஹசாரா நயனதாரா , மாத்தளை மாவட்டத்தில் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரலதா கருணாரத்ன ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கிழக்கு மாகாணம்

திகாமடுல்ல மாவட்டத்தில் முத்துமணிகே ரத்வத்தே, மட்டக்களப்பு மாவட்டத்தில் செல்லப்பெருமாள் வனிதா திருகோணமலை மாவட்டத்தில் ஷீலா கருணாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வடமத்திய மாகாணம்

அனுராதபுரம் மாவட்டத்தில் லெப்டினட் உதேனிகா சஞ்சீனி விஜேவந்த

சப்ரகமுவ மாகாணம்

கேகாலை மாவட்டத்தில் சட்டத்தரணி சகாரிகா கங்கானி அதாவுத மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகே.

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டத்தில் சட்டத்தரணி உபக்சா விஜேதுங்க , அம்பிகா சாமிவேல். மொனராகலை மாவட்டத்தில் சதுரி கங்கானி

வடமேல் மாகாணம்

குருநாகல் மாவட்டத்தில் சமிலா பிரசாதினி ரத்னவர்தன, சட்டத்தரணி கீதா ரத்னகுமாரி ஹேரத். புத்தளம் மாவட்டத்தில் சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க.

வட மாகாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெண்ணிலா ரோசலிங்கம் வன்னி மாவட்டத்தில் பாத்திமா ஹாஜிஸ்தா.

தேசிய பட்டியல்

இதே வேளை தேசிய பட்டியலில் நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பேராசிரியர் வசந்தா சுபசிங்க சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சமிலா குமுது பீரிஸ், பெனிதா பிரிஷாந்தி ஹெட்டிதந்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இப்பட்டியலில் 11 சட்டத்தரணிகள் இடம்பெற்றுள்ளமை முக்கிய விடயம். ஏனைய தேசிய கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் பெண்களுக்கு பெரிதாக இடம் வழங்காத நிலையில் தேசிய மக்கள் சக்தி சகல மாவட்டங்களிலும் பெண்களை நிறுத்தியுள்ளது. 1931 ஆம் ஆண்டிலிருந்து இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரை பார்க்கும் போது 60 பெண்கள் மாத்திரமே இலங்கை பாராளுமன்றத்தை அலங்கரித்துள்ளனர். மேலும் கடந்த மூன்று பாராளுமன்றங்களிலும் 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்துள்ளனர். இது மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 5.7 வீதம் மாத்திரமே. உலகில் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் இருபதுக்கும் அதிகமாகவுள்ளன. குறித்த நாடுகளில் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐம்பது வீதத்துக்கும் அதிகமானோர் பெண்களாக உள்ளனர்.

ஆனால் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான பெண் சனத்தொகை விகிதாசாரத்தை கொண்டிருக்கும் இலங்கையில் இந்நிலைமை தலைகீழாக உள்ளது. எனினும் இலங்கை அரசியலில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.