முச்சந்தி
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு: உக்ரைனின் வெற்றித் திட்டமும், அமெரிக்காவின் நிச்சயமற்ற ஆதரவும்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா
(பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு, அக்டோபர் 17, 2024 அன்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ‘உக்ரைனின் வெற்றித் திட்டம்’ பற்றி அறிவித்தார்)
அமெரிக்க ஆதரவு எதிர்காலத்தில் தொடர்வது குறித்த நிச்சயமற்ற நிலையில் உக்ரேனிய ஜனாதிபதி தனது நாட்டின் வெற்றித் திட்டத்திற்கு (Victory Plan) ஆதரவைத் திரட்ட முயற்சித்துள்ளார்.
உக்ரைனின் வெற்றித் திட்டமானது ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையில் தீவிர மோதலுக்கு வழிவகுக்கும் என்று கிரெம்ளின் கூறியுள்ளது.
அமெரிக்க ஆதரவில் நிச்சயமற்ற நிலை :
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளார். ஆனால் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் எதிர் நிலையை பேணுகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹாரிஸுடன் மிகவும் இறுக்கமான போட்டியில் ட்ரம்ப் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. ஆயனும் அவருக்கு ஆதரவு மேலோங்கி வருகிறது.
அமெரிக்காவில் நவம்பர் தேர்தலின் பின்னர், உக்ரைனுக்கு நிச்சயமற்ற தன்மையை ஜெலென்ஸ்கி அறிந்திருக்கிறார். அதே வேளை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை பலமுறை பாராட்டியுள்ளார்.
மேலும் அவர் ஜனவரி 2021 இல் பதவியில் இருந்து வெளியேறியதிலிருந்து குறைந்தது ஏழு முறை ரஷ்ய தலைவருடன் தொடர்பு கொண்டுபேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தனது தேர்தல் பேரணிகளில், ட்ரம்ப் 24 மணி நேரத்திற்குள் சமாதான உக்ரைன் போரை நிறுத்தி, சமாதான உடன்படிக்கையைப் பெற முடியும் என்று அடிக்கடி தற்பெருமையை காட்டி வருகிறார்.
இருப்பினும் அரசியல் விமர்சகர்கள் அத்தகைய நிலை வந்தால், உக்ரேனிய பிரதேசத்தின் பெரும்பகுதியை ரஷ்ய கைகளில் விட்டுவிட வேண்டும் என்றும் நம்புகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு:
உக்ரைனின் வெற்றித் திட்டம் பற்றி, பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பத்திரிகைகளுக்கு பகிர்ந்து கொண்டார்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் “வெற்றித் திட்டம்” என்று அழைக்கப்படும் அவரது நாட்டைப் பாதுகாப்பது ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்று கிரெம்ளின் குற்றஞ்சாட்டி கூறியுள்ளது.
இந்தக் குற்றஞ்சாட்டை ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS முதலில் வெளியிட்டது. மேலும் ஜெலென்ஸ்கி தனது திட்டத்திற்கு ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் சென்று பல உலக தலைவர்களை சந்தித்தார்.
ரஷ்யா – நேட்டோ நேரடி மோதலா ?
போரில் ரஷ்யாவுக்கு உதவ வடகொரியா ராணுவ வீரர்களை அனுப்புவதாக ஜெலென்ஸ்கி அண்மையில் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை உக்ரேனிய தலைவர் கிரீஸ் மற்றும் நோர்வே உட்பட பல ஐரோப்பிய நட்பு நாடுகளின் தலைவர்களுடன் பேசி, போர் விமான பைலட் பயிற்சி மற்றும் எரிசக்தி விநியோகங்களை பெற புதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டுள்ளார்.
உக்ரைன் ஒரு ஜனநாயக நாடு, அது யூரோ-அட்லாண்டிக் பிராந்திய வாழ்க்கை முறையையும் பாதுகாக்க நேட்டோவில் இணைவதே முதன்மையான குறிக்கோளாக இருந்தது என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
பல தசாப்தங்களாக உக்ரைன் நேட்டோவில் இல்லாததால் ஏற்பட்ட புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையை ரஷ்யா பயன்படுத்தியது. இப்போது, நேட்டோவில் சேர உக்ரைனுக்கு உடனடி அழைப்பு விடுக்கப்பட்டது உறுதியானதாக இருக்கிறது.
ஜெலென்ஸ்கி வெற்றிக்கான தனது திட்டத்தை விவாதிக்க ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலையும் சந்தித்து நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டுடனும் பேசினார்.
உக்ரைன் நேட்டோ உறுப்பினராகும்:
உக்ரேனிய தலைவருடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டும் கலந்து கொண்டார். எதிர்காலத்தில் உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. அது நடக்கும் வரை உக்ரைன் இராணுவ வலிமையில் மேலோங்க வேண்டிய அனைத்தையும் நாங்கள் உறுதி செய்வோம்.
இந்த உயர்மட்ட நேட்டோ அதிகாரியின் வார்த்தைகள் ரஷ்யாவிடமிருந்து உடனடி கண்டன எச்சரிக்கையை பெற்றது. ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதலின் அபாயத்துடன் ஜெலென்ஸ்கியின் திட்டம் மேலும் தீவிரமடைய வழிவகுக்கும் என்று கிரெம்ளின் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகள், ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராட ஆதரிக்கும் என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
கிரீஸ் F-16 விமானிகள் பயிற்சி:
சமாதான உச்சி மாநாட்டை முன்னெடுத்துச் செல்ல உக்ரைன் திட்டமிட்டுள்ளது. அதேவேளை F-16 போர் ஜெட் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கவும், கிரேக்கத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து, கிரீஸ் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை வழங்குகிறது. இதில் இராணுவ பொருள் மற்றும் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியையும் வழங்குகிறது.
உக்ரைனின் மிக அவசரமான பாதுகாப்புத் தேவைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற கிரீஸ் தயாராக உள்ளது என்று உக்ரைன் தலைவர் கூறியுள்ளார். கிரீஸ் அரசு விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு F-16 பயிற்சியை துரிதப்படுத்தி கூடுதல் ஆதாரங்களை வழங்க உள்ளது.
இத் திட்டம் மூலம் வெற்றியைப் பெற முடியும் என்று தான் நம்பும் விவரங்களை ஜெலென்ஸ்கி உக்ரேனிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அறிவித்தார்.
அடுத்த ஆண்டு போர் முடிவுறும் ?
இந்தத் திட்டம் ஐந்து பகுதிகளைக் கொண்டதுடன், உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான ஒரு விரைவான செயல்முறைக்கான திட்டம் இந்த முன்மொழிவின் மையத்தில் உள்ளது.
வெற்றித் திட்டத்தை இப்போது செயல்படுத்தத் தொடங்கினால், அடுத்த ஆண்டுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் ஜெலென்ஸ்கி உக்ரேனிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அறிவித்தார்.
ஆயினும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கடந்த வாரம் நடந்த தொடர் கூட்டங்களில் கணிசமான புதிய ஆதரவைப் பெற ஜெலென்ஸ்கி தவறியதாக கருதப்படுகிறது.
அதன் பின்னர் அவர் தனது தந்திரோபாயங்களை மாற்றி அறிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகிய இரண்டிலும் உறுப்பினராக உக்ரைனை அதன் பாதையில் மேற்கு நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.